தமிழகம்

தமிழகத்தில் அதி கனமழை : குமரி, தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

94views

ரபிக் கடல் பகுதியில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 15ஆம் தேதி கனமழை மழை முதல் அதி கனமழை பெய்யக்கூடும் என ரெட் அலெர்ட் விடுக்கப்படுள்ளது.
தமிழகத்தில் அக்னி நட்சத்திர காலத்திலும் பல மாவட்டங்களில் இடி மின்னலுடன் பெய்து வருகிறது. தென் மாவட்டங்களில் நீர் நிலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. கும்பக்கரை அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இந்த நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
15ஆம் தேதி கனமழையுடன் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 16ஆம் தேதி மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வரும் 17ஆம் தேதி வரை நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று, இடி மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யும். பிற மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யும் என வானிலை மையம் கணித்துள்ளது. இதனையடுத்து கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென்கிழக்கு அரபிக்கடல் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகியுள்ளதால் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும். 14ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.
15 மற்றும் 16ஆம் தேதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறக்கூடும் என்பதால் குமரிக்கடல், லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளில் மணிக்கு 70 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும். மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!