வாசிப்போம்
வாசிப்பை நேசிப்போம்♥️
நேசிப்பு வேண்டும் வாசிப்போடு..❤️
அதிகமான நேரம் வேண்டும் உறவாட புத்தகப் பக்கங்களோடு..
மீண்டுமொரு
மீளுதல் வேண்டும்..
இலத்திரனியல் இல்லம் புகுந்து பறித்துக் கொண்டது நேரங்களையெல்லாம்..
உள்ளங்களை தன் வசமாக்கி தூரமாக்கியது காகித வாசிப்புக்களை..
இன்னும் புரட்டப்படாமல் ஏங்கித் தவிக்கும்
புத்தகப் பக்கங்கள் ஏராளம் இருக்க -ஏந்திக் கொள்வதென்னவோ
ஸ்மார்ட் போனும்
மடி மேல் கணினியையும் தான்..
வாசிக்க கற்றுக் கொள்ளாத சமூகத்திடம் நிச்சயம் அறிவு வறட்சி இருக்கும்..
வாசிக்க பழக்கப்படுதல் என்பது ஆரோக்கியமான நகர்தலின் ஓர் அங்கம்..
வாசிக்க பழக்கப்படும் போது அறிவு நிறைவை நோக்கி பயணிக்கிறது..
வாசிப்பு தேடலின் முடிவல்ல ஆரம்பம்..
வாசிப்பு நேசிப்பாகினால் மனிதன் முழுமையை நோக்கி புறப்படுகின்றான் என்றர்த்தம்..
நல்ல புத்தகங்கள் இந்த சமூகத்தின் ஒட்டு மொத்த உணர்வுகள்..
வாசிப்பு இலவச இணையம்..
நல்ல எழுத்துக்கள்
எல்லையற்ற சிந்தனைகளை
உற்பத்தி செய்யும் தொழிற்சாலை
ஒரு நூலகத்தில் மனிதன் அறிவுச் சுதந்திரம் அடைகிறான்..
அங்கு பல அறிஞர்களை சந்திக்கின்றான்..
பயனுள்ள சிந்தனைகளில்
நல்ல எழுத்துக்கள் கருவாகிறது
அங்கே அறிவும் அடுத்ததாய் பிரசவமாகிறது..
வாசிப்பற்ற சமூகம் குறுகிய சிந்தனையில் கருகிப்போகிறது..
வாசிப்பற்ற மனிதன் அழிவை நோக்கி அடி எடுத்து வைக்கின்றான்…
ஐந்து விரல்களிடையே
ஆறாம் விரலாய் பேனா என்றிருந்ததை போக்கி
ஐந்து விரலையுமே தன் சேவகனாய் தன்னையே தழுவச் செய்த பெருமை ஸ்மார்ட் போனுக்கே..
தலையணைக்கடியில் எப்போதுமே ஒரு புத்தகம்..
கைகளில் சிக்கிக் கொள்ளும் அடிக்கடி அது..
இப்போதெல்லாம் அந்த புத்தகங்களின் காத்திருப்பு நீண்டு கிடக்கிறது
கைகளில் சிக்கிக் கொள்ளாத ஏக்கங்களோடு..
பல பொழுதுகளில்
நூல்களோடு பேசிக்கொண்டிருக்கும் போது எம்மை கடந்து செல்லும் நேரங்களை அறிந்து கொண்டதே இல்லை.
புத்தகங்களோடான பேச்சு வார்த்தையில்
தனியே சிரித்து
தானாய் கலங்கிய
நொடிப்பொழுதுகளும் சுவாரஷ்யமே.
ஒற்றை புத்தகத்துக்கு
போட்டி போட்டு அடுத்தடுத்து
காத்திருந்து வாசித்து முடித்த நினைவுகள் கல்லூரி காலத்தில் ஏராளம்.
ஒரே இரவில் தூக்கத்தோடு
போராடி வென்று
வாசித்து முடித்த புத்தகங்களும் இருக்க தான் செய்கிறது.
பசி தாகம் வேலைகள்
எல்லாவற்றையும் இரண்டாம் நிலையாக்கி
முதலிடத்தை பிடித்து
இரு கைகளுக்கிடையே வீராப்பாய் வீற்றிருந்த பக்கங்களும் உள்ளன…
காகிதப்பக்கங்களை களைத்து
அடுக்குகளில் தூசு தட்டி
தும்மிக்கொண்டே சில தகவல்களை தேடி எடுக்கும் சிரமங்கள் அவசியமற்றதாகி விட்டன.
நெருங்கி வந்து விட்ட இணைய இணைப்புக்கள்
இணை பிரியாதிருந்த புத்தக நட்புக்களிலிருந்தும்
நம்மை தூரமாக்கிக் கொண்டிருக்கிறது.
புதிதாய் சொந்தமாக்கும் ஒவ்வொரு புத்தகத்திற்குமாய் அழகு பார்த்துச் செய்யும்
book markன் தேவைகள் அருகிப் போய் விட்டது.
எது எப்படி இருப்பினும்
இந்த தோழமையின் இனிமையையும் ஆத்மார்த்தமான உறவையும் எந்த ஒன்றாலும் தந்து விட முடியாது என்பது மட்டும் உண்மை.
ஆயிரம் தகவல் குறிப்புக்களை இணையம் அரை நொடியில் தந்து விட்டாலும்
ஆர்வமாய் தேடிப்பெரும் உயிரோட்டம் இருந்து விடுவதில்லை இதற்கு ஈடாய்..
புத்தகங்கள் என்றுமே அழகிய பொக்கிஷங்கள் தான்..
தனிமையில் உற்ற நண்பி..
தயங்காமல் மௌனமாய் குறை போக்கும் தோழி..
அழுக்காமல் உறவாட அன்பான உறவு இவள்..
புத்தகப் பித்தாகி இருந்த நொடிகள் கடந்து போக
அருகிப்போகும் காகித வாசிப்பை மீட்டெடுக்கும் முயற்சி தேவையாகிறது..
-
மஞ்சுளா யுகேஷ், துபாய்