வெள்ளிக்கிழமை தொழுகையை முடித்துவிட்டு சற்று ஓய்வெடுக்கலாம் என்ற உறங்கச் செல்லும் பொழுது செல்பேசி அழைக்கிறது.
“அபுதாபியில் நகர மையத்தில் இருக்கும் ஒரு பூங்காவில் வயிற்றுப்பசி யோடும் உடுத்த உடையும் உண்ண உணவும் இல்லாமல் படுத்து உறங்கும் ஒரு மனிதர் இருக்கிறார். அவருக்கு உதவ இயலுமா?” என்று ஒரு கோரிக்கை வைக்கப்பட்டதும் தூக்கத்தைத் துறந்து விட்டு உடனடியாக அந்த மனிதரைச் சென்று சந்திக்கும்போதுதான் அவர் தமிழரென்று தெரிய வருகிறது.
உடல் வெகுவாக நலிந்த நிலையில், பசியாலும் உறக்கமற்ற நிலையாலும் காலநிலை மாற்றங்களை நேரடியாக உள்வாங்கிய சோர்விலும் இருக்கும் அந்த மனிதரின் கையில் அவரது கடவுச்சீட்டின் நகல் தவிர்த்து வேறொன்றுமில்லை.
‘கொரானா’வின் காரணமாக கடந்த வருடம் ஜூலை மாதத்தில் தான் பணியாற்றிய நிறுவனத்திலிருந்து பணி விலக்கம் செய்யப்பட்டதாகவும் அதன் பின்னர் அபுதாபியில் வேலைக்காகத் தேடி அலைந்தும் எதுவும் கிடைக்காததாலும் நண்பர்கள் யாருமில்லாததால் வேறு உதவிகளும் கிடைக்காததாலும் ஊருக்குச் செல்வதற்குக் கூடப் போதுமான பணவசதி இல்லாததால் கிடைத்த இடங்களில் தங்கி கிடைத்த உணவை உண்டு ஒன்றுக்கும் வழியில்லாமல் கடைசியாக இந்த பூங்காவில் தங்க நேர்ந்த அவலமான தன் வாழ்க்கைச் சூழலை எடுத்துரைக்கிறார் அந்த மனிதர்.
தற்போது இருக்கின்ற சூழலில் அவருக்காகப் புதிய பணியைத் தேடுவது என்பது இந்தக் காலகட்டத்தில் மிகக் கடினம் என்பதால் அவரைப் பத்திரமாக ஊருக்கு அனுப்பி வைத்துவிடலாம் என்பதே தீர்வாக இருந்தது.
ஷேக் தாவூது அவரது பெயரென்பதும் அவரது சொந்த ஊர் புதுக்கோட்டை அருகே இருக்கும் ஒரு கிராமம் என்று மட்டுமே தெரிய வந்த நிலையில் அவரது கடவுச்சீட்டின் நகலை முகநூலில் பதிவிட்டு “யாரேனும் இந்த மனிதரைத் தெரிந்தவர்கள் இருக்கிறீர்களா?” என்று கேள்வி எழுப்பியும் எந்தப் பதிலும் கிடைக்காததால் இனியும் காத்திருக்க இயலாது என்று இந்திய தூதரகத்தை அணுக எண்ணுகிறார் அவர்.
அவருக்கு முன்னால் மூன்று முக்கிய சவால்கள் இருந்தன.
முதலாவதாக தாயகத்திற்கு திரும்பிச் செல்வதற்காக அவரது கடவுச்சீட்டை அவர் பணியாற்றிய நிறுவனத்தில் இருந்து பெற்றுத் தர வேண்டும். இது அவ்வளவு பெரிய விசயமில்லை. தூதரகம் தலையிட்டால் ஓரிரு நாட்களில் நடக்கக் கூடியதுதான்.
இரண்டாவது சவால் தாவூதின் பணிக்கான அனுமதி நிறைவு பெற்று எட்டு மாதங்களுக்கும் மேல் ஆகிவிட்டதால் அமீரக அரசின் குடி உரிமைச் சட்டங்களின்படி எட்டு மாதங்களுக்கும் சேர்த்து அபராதமாக இந்திய ரூபாய் மதிப்பில் சில லட்ச ரூபாய்கள் வரை கட்ட வேண்டியிருக்கும் என்பது.
இந்தப் பணத்தைக் கட்ட தூதரகமோ அல்லது புரவலர்களோ முன்வர வேண்டும். அல்லது அந்த அபராதத் தொகைக்கு அமீரகக் குடியமர்த்தல் பிரிவு விலக்கு அளிக்க வேண்டும். இதையும் கூட மெனக்கெட்டால் எவரிடமிருந்தாவது பண உதவி கேட்டு செய்து முடிக்கக் கூடியதுதான். ஆனால் கால அவகாசம் தேவைப்படக் கூடும்.
ஆனால் இவற்றை விட மிக மிக முக்கியமான இன்னொரு பெரிய சவால் இருந்தது. அனுமதி காலம் முடிந்த பின்பும் 8 மாதங்களுக்கு மேல் தங்கியிருந்ததால் அவருக்கான சிறைத்தண்டனை குறித்த கேள்வி. இந்தக் கேள்விக்கு மட்டும் என்ன செய்வது என்ற பதில் ஏதும் கிடைக்கவில்லை.
இமயமலையில் ஏறுவதாக இருந்தாலும் முதல் அடியை வீட்டிலிருந்துதானே எடுத்து வைத்தாக வேண்டும். தளராத மனதோடும் நம்பிக்கையோடும் இந்தியத் தூதரகத்தின் கதவைத் தட்டினார் அவர்.
தொடர்ச்சியாக சமூக அக்கறையோடும் அர்ப்பணிப்போடும் பல பணிகளை இந்தியத் தூதரகத்தின் வழியாக அவர் ஏற்கெனவே முன்னெடுத்துச் செய்து வருவதாலும் தனிப்பட்ட விசயங்களுக்காக தூதரகத்தை அணுகுவதில்லை என்பதாலும் அவரது கோரிக்கைககள் உரிய மரியாதையோடு செவிமடுக்கப்படுகிறது.
முதலாவதாக, தாவூதின் கடவுச்சீட்டு அவர் பணிபுரிந்த நிறுவனத்திடமிருந்து சில மணி நேரங்களிலேயே பெறப்பட்டது நம்பிக்கையை விதைக்கிறது.
அமீரக அரசின் குடியுரிமை தொடர்பான அமைச்சகத்திடம் இந்தியத் தூதரகம் பணி இழந்த மனிதர், ஊருக்குச் செல்லக் கூடப் பணம் இல்லாதவர் எப்படி சில ஆயிரம் திர்ஹாம்கள் கட்ட இயலும் என்பதைப் பேசி நிலையை எடுத்துச் சொல்கிறது. அபராதம் ஏதும் இல்லாமல் அவர் நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்க வேண்டுமென வைக்கப்பட்ட கோரிக்கையைக் கருணையுடன் ஏற்கிறது அமீரக அரசு.
இனிதான் முக்கிய சிக்கல். பணம் கட்டாவிட்டால் சிறைவாசம் நிச்சயம். அமீரகச் சட்ட்டப்படி குறிப்பிட்ட காலம் சிறையில் இருந்த பின்னரே அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்பது பொதுவான சட்டம். சிறைத் தண்டனை முடியாமல் அமீரகத்தை விட்டு வெளியேற முடியாது என்பதால் தூதரக அதிகாரிகளிடம் சம்பந்தப்பட்ட சிறை அதிகாரிகளோடு தொடர்புகொண்டு விஷயத்தைச் சொல்லி விலக்களிக்க வைக்குமாறு மன்றாடுகிறார் அவர். மிகுந்த சிரமம் மிக்க விசயமென்றாலும் முயலாமல் இருந்து விடக்கூடாதென தொடர்பு கொள்கிறார்கள் தூதரக அதிகாரிகள்.
நமது எண்ணம் நன்மை நிறைந்ததாக இருக்குமேயானால் அந்த எண்ணமே நாம் நினைப்பதை எளிதாகச் சாதித்து விடும் என்று சொல்லிக் கேட்டதுண்டு. ஆனால் இங்கே கண்முன்னாலேயே அது நடந்து முடிந்தது.
இந்தியத் தூதரகம் தொடர்பு கொண்ட சில மணி நேரங்களிலேயே தாவூதின் சிறைத் தண்டனையை ரத்து செய்து அதற்குண்டான அனுமதிச் சீட்டை வழங்குகிறது அமீரக உள்துறை அமைச்சகம்.
இப்போது சட்டச் சிக்கல்கள் எல்லாம் விலகி தாயகம் செல்லத் தடைகள் அகன்று விட்ட நிலையில் அவருக்கு விமான சீட்டையும் விமானத்தில் பயணிப்பதற்கான கொரோனா பரிசோதனையும் நடத்த வேண்டும்.
மிக மிக முக்கியமான மூன்று பணிகளையும் 24 மணி நேர அவகாசத்திலேயே முடித்து விட்ட பெருமிதத்தில் இந்தியத் தூதரகமே அதற்கான செலவுகளை முன்வந்து ஏற்கிறது.
இதோ…. கடந்த 8 மாதங்களாக பிழைக்க வந்த தேசத்தில் ஏறெடுத்துப் பார்க்கக் கூட ஆள் இல்லாத ஒரு நிலையில், தன்னந்தனியனாக ஓர் அனாதை போலக் கைவிடப்பட்ட ஒரு மனிதன் இன்னொரு சகமனிதனின் நேசக்கரத்தால் அரவணைத்துக் காப்பாற்றப்பட்டு தாயகம் செல்லத் தயாராகி விட்டான்.
“சட்டங்கள் மட்டுமே முக்கியமில்லை. மாறாக மனிதர்கள் மட்டுமே மிக முக்கியம்” என்ற எண்ணத்தோடு மனிதம் தொலைத்து விடாத மாண்போடு செயல்பட்ட இந்தியத் தூதரக உயர் அதிகாரிகள், ஊழியர்கள், அமீரகத்தின் உள்துறை அமைச்சகத்தின் உயரதிகாரிகள், அமீரகத்தின் சிறைத்துறை அதிகாரிகள் ஆகியோர் ஒருங்கிணைந்து ஒரு மனிதனை அவனது சொந்த மண்ணிற்குத் திருப்பி அனுப்ப ஒத்திசைந்து பணியாற்றியிருக்கிறார்கள்.அவர்கள் அனைவருக்கும் வாழ்வின் எல்லா நன்மைகளும் சேரட்டும்.
கொரோனா நிறையப் பேரை பல்வேறு வகைகளில் பாதித்திருக்கிறது தமிழகத்திலும் அமீரகத்திலும் இந்த தொற்றுநோய் பலரின் வாழ்வாதாரத்தை அசைத்துப் பார்த்திருக்கிறது.
பூங்கா ஒன்றில், உடுத்தியிருந்த ஒற்றை உடையோடு, கடந்த மூன்று மாத காலங்களாக என்ன நடக்கிறது என்பதைப் பற்றிக் கேட்பதற்குக் கூட ஆள் இல்லாமல் இருந்த ஒரு மனிதருக்கு ஒரு சக மனிதனாகத் தன்னுடைய அர்ப்பணிப்புணர்வினால் உந்தப்பட்டு இந்தியத் தூதரகத்தை நேரடியாக அணுகி ஒரு கிரியாஊக்கியாகச் செயல்பட்டு தேவையான எல்லாவற்றையும் செய்து முடித்து விட்டு, “எல்லாம் இறைவன் செயல்” என்று அடுத்ததாக யாருக்கு எந்தவிதமான உதவிகளைச் செய்யலாம் என்று சமூகப் பொறுப்புணர்வோடு நடந்து கொள்வதற்கு மிகப்பெரிய மனதும் அக்கறையும் சகமனிதர்கள் மீதான பரிவும் மிகத் தேவையானது. அத்தகைய உள்ளம் கொண்ட ஃபிர்தோஸ் பாஷா என் உடன்பிறவா சகோதரன் என்பது எனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கிறது.
மனிதம் வளர்ப்பதில், மனிதர்களுக்குத் தொண்டு செய்வதில் அயராது உழைக்கும் அன்புத்தம்பி ஃபிர்தோஸ் பாஷாவுக்கு அன்பு முத்தங்கள்.
-
ஆசீப் மீரான்