கட்டுரை

உண்ணிக் காய்ச்சலின் உயிரிழப்பு தவிர்ப்போம்!

56views
முனைவர் என்.பத்ரி
உண்ணிக்காய்ச்சல் என்பது ஒரு வகை பாக்டீரியாவால் ஏற்படும் தொற்று ஆகும். இது சிறிய செடிகளில் காணப்படுகிறது. மனிதர்களை இவை கடிக்கும் போது அவர்களுக்கு உண்ணிக்காய்ச்சல் உண்டாகிறது.இந்நோய் ஆங்கிலத்தில் ஸ்க்ரப் டைஃபஸ் (Scrub Typhus) என்றழைக்கப்படுகிறது. ஓரியன்சா ட்சுட்சுகா முஷி (Orientia tsutsugamushi) என்னும் பாக்டீரியாவால் இந்நோய் ஏற்படுகிறது.
இந்த பாக்டீரியா பொதுவாக விளைநிலங்கள், செடிகொடிகள் நிறைந்த பகுதிகளிலேயே அதிகமாக வாழ்கின்றன. நகர்ப்புறங்களும் இதற்கு விதிவிலக்கு அல்ல.”இந்தியாவில் குறிப்பிட்ட நில வகைகளில் மட்டுமே ஏற்படும் நோயாக இனியும் இது இல்லை” என்று 2024-ம் ஆண்டு தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்திருத்துள்ளது.
சமீபத்தில் சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் விடுதியில் தங்கி படித்து வந்த 20 வயது மாணவர் ஒருவருக்கு இந்த உண்ணிக் காய்ச்சல் ஏற்பட்டு, மருத்துவச் சிகிச்சைப் பலனளிக்காமல் இறந்துவிட்டார் என்பது கவலை தரும் ஒரு செய்தியாகும்.

திடீர் காய்ச்சல்,குளிர்,உடல் வலி, தசை வலி, தோலில் ஏற்படும் சிவப்பு புள்ளிகள்,தோலின் மேற்பரப்பில் உண்டாகும் தழும்பு (உண்ணி கடித்த இடத்தில் உருவாகும்) போன்றவை இந்த நோயின் உடனடி அறிகுறிகளாகும்.இந்நோயின் தீவிரம் அதிகமாக இருந்தால், மன பிறழ்வு ஏற்படுவதோடு, நுரையீரல், இதயம், சிறுநீரகம், மூளை ஆகிய உறுப்புகளும் பாதிக்கப்படலாம்.
உண்ணிக்கடி பெரும்பாலும் வலியற்றதாகவே இருக்கும், சில நேரங்களில் அரிப்பும் ஏற்படலாம்.நடுங்கும் குளிர், காய்ச்சல், தீவிர தலைவலி ஆகியவை இந்த நோயின் முதல் அறிகுறிகள் என்று தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையம் கூறுகிறது.
100 பேருக்கு இந்நோய் ஏற்பட்டால், 50 பேருக்கு பூச்சி கடித்த இடம் கருப்பாக ஒரு பொட்டு வைத்தது போல் தெளிவாக தெரியும். காய்ச்சலுடன் சிலருக்கு நெறி கட்டும். சிலருக்கு கல்லீரல், , நுரையீரல் ஆகியவற்றில் பாதிப்பும் மூச்சுத் திணறலும் ஏற்படலாம். சிலருக்கு நுரையீரலில் ஏ.ஆர்.டி.எஸ் பாதிப்பு (Acute Respiratory Distress Syndrome)எனப்படும் தீவிர சுவாச நோய் ஏற்படலாம். அவர்களுக்கு வெண்டிலேட்டரின் உதவி தேவைப்படலாம். இரண்டு மூன்று நாட்கள் சிகிச்சைக்குப் பிறகுதான் உடல்நிலையில் முன்னேற்றம் குறித்துத் தெரியும்.
உண்ணிக்காய்ச்சல் ஒரு வகை ரிக்கெட்சியல் நோய். ரிக்கெட்சியா (Rickettsiae) எனப்படும் சிறிய குச்சி வடிவ பாக்டீரியாக்களால் ரிக்கெட்சியல் நோய்கள் ஏற்படுகின்றன. இவை பெரும்பாலும் பேன், உண்ணி,பூச்சி போன்றவற்றின் உடலில் வாழும் ஒட்டுண்ணிகளாக இருக்கின்றன. குறிப்பாக அவற்றின் செரிமானக் குழாயில் இவை காணப்படுகின்றன.
பொதுவாக மனிதர்களை தாக்கும் ரிக்கெட்சியல் நோய் ஸ்க்ரப் டைபஸ் ஆகும். ஸ்க்ரப் டைபஸ் முதன்முதலில் ஜப்பானில் கண்டறியப்பட்டது. அங்கு இந்த நோய் பூச்சிகளால் (மைட்ஸ்) பரவுவதாக தெரியவந்ததால், அதற்கு “ட்சுட்சுகா முஷி” (Tsutsuga-mushi) என்ற பெயரைப் பெற்றது. ஜப்பானிய மொழியில் ட்சுட்சுகா (tsutsuga) என்றால் ஆபத்தான என்றும், முஷி (mushi) என்றால் பூச்சி என்றும் பொருள்.சிகர் மைட்ஸ் (chigger mites) எனும் பூச்சிகளே இந்த நோயை ஏற்படுத்தும் பாக்டீரியாவை கொண்டிருக்கின்றன. இவை 0.2 மில்லி மீட்டர் முதல் 0.4 மில்லி மீட்டர் அளவே (தோராயமாக) இருப்பதால் பொதுவாக கண்ணுக்கு தெரியாது. இதனை மைக்ரோஸ்கோப்பின் மூலமாகவே நம்மால் பார்க்க முடியும். இந்த பூச்சிகள் நிலத்தில் சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் வாழக் கூடியவை.
இந்தியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ரஷ்யா, கொரியா, இந்தோனீசியா, ஆஸ்திரேலியா போன்ற பல நாடுகளில் இந்நோய் மக்களை பாதித்துள்ளது. உலகம் முழுவதும் ஒவ்வோர் ஆண்டும் பத்து லட்சம் மக்களுக்கு புதிய உண்ணிக்காய்ச்சல் தொற்றுகள் ஏற்படுவதாக மத்திய சுகாதார சேவைகள் இயக்குநரகம் தெரிவிக்கிறது. உரிய சிகிச்சை கொடுக்கப்படாவிட்டால், இந்த நோய் காரணமாக ஏற்படும் இறப்புகளின் விகிதம் 30% க்கும் அதிகமாகக் கூடலாம் என்றும் இந்த இயக்குநரகம் மேலும் தெரிவிக்கிறது.

உண்ணிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் பட்சத்தில் அதை 100% எளிதாக குணப்படுத்த முடியும். ஆனால், இதற்கான சிகிச்சை தாமதமானால் நோயின் தீவிரம் அதிகமாகும்.நோயாளிக்கு உயிரிழப்பு ஏற்படும் நிலையும் ஏற்படலாம்.
உண்ணிக்காய்ச்சலின் பொதுவான அறிகுறிகள் டெங்கு, மலேரியா போன்ற நோய்களின் அறிகுறிகளைப் போலவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு மேல் காய்ச்சலுக்கான காரணம் தெரியாமல் இருந்தால் அதை உண்ணிக்காய்ச்சலாகக் கருத வேண்டும் என்று தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்துகிறது.
ஒருவருக்கு காய்ச்சல் வந்தால், சாதாரண வைரஸ் காய்ச்சலா, டெங்குவா, ஃப்ளூவா, சிக்குன் குனியாவா அல்லது வேறு ஏதேனுமா என்பதை ஒரு மருத்துவர்தான் கண்டறிந்து சொல்ல முடியும். அதனால், ஒருவருக்கு காய்ச்சல் வரும் போது அவர் சுய மருத்துவத்தை தவிர்க்க வேண்டும்.இந்த நோய்களை உரிய நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை வழங்காவிட்டால் உயிரிழப்பு நேரிடலாம்.
செடி, கொடிகள் அதிகம் இருக்கும் பகுதிகளுக்கு செல்வோர், குறிப்பாக ட்ரெக்கிங் செல்வோர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பூச்சி கடிக்காமல் இருக்க, வெளியில் செல்லும் போது உடல்களை முழுவதும் மறைக்கும் வகையில் ஆடை அணிந்து கொள்ள வேண்டும். உடலில் எங்கேனும் பூச்சி கடித்த தடம் தெரிந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.முறையான தடுப்பு முறைகளை எடுத்துக் கொண்டால் நாம் இந்த நோயின் தீவிரத் தாக்குதலிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ள முடியும்.பொதுமக்களிடையே இந்நோயின் தீவிர பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது குடும்பங்கள், பள்ளிகள்,அரசு,சமூக ஊடகங்கள் ஆகியவற்றின் கடமையாகும்.

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!