30views
நூல் : லைலா கயஸ் கவிதைகள்
கவிஞர் : லைலா கயஸ்
நூல் விமர்சனம் : தயானி தாயுமானவன்
காயமுற்றவனிடம் அவனது ரணம் எத்தனை வேதனை தருகிறது என்று நான் கேட்பதில்லை. நானே காயமடைந்தவனாகிறேன் – வால்ட் விட்மன்.
அது போலத்தான் ” இது இறை நிரப்பும் பாத்திரம்” என்கிறார்.
சிலருக்கு அது வரம் சிலருக்கு அது சாபம். இறைவனுக்கு காதல் உசிதமானது மானுடத்திற்கு வளையினுள் பதுங்கிய நண்டு ஒரு போதும் அமைதியாக இருப்பதில்லை. அப்படித்தான் வெளியேற முற்படும் போது கடவுச் சொல்லை மறந்து விடுகிறோம்.
உன்னைப்பற்றி
கவிதைகள் எழுத வேண்டும்
இன்னும் கொஞ்சம் காயங்களைக்கொடு
– ஜின்னா அஸ்மி அவர்கள்
நீ என் இதயத்தில்
நுழைந்தபோது உன் காலடிச் சத்தம் கேட்கவில்லை
நீ அதை உடைத்த போதும் சத்தம் கேட்கவில்லை
– கவிக்கோ அவர்கள்
லைலா கயஸ் தன் கவிதைகளை அட்சய பாத்திரம் போல் இதில் உங்கள் நினைவுகளும் அதில் படியும் போது அதை நிழலாக பாவிக்கவில்லை. அது நிஜமானதாகட்டும் ஒளி பொருந்திய மனங்களின் சுடராக. அடர்இருள் தானே ஒளியின் சுவையை ஊட்ட முடியும்? அது லைலா கயஸ் அவர்களின் கவிதைகளில் வழிநெடுக கவிதையின் பசிதீர்க்கிறது.
பழைய சுவற்றில் மறைந்த வரலாற்றின் ஒரு துருபிடித்த இதயத்தை மீண்டும் புதுப்பித்து உங்கள் கைகளில் வாசிக்கும் தருணமிது. ஆமாம்,
‘அர்த்தங்களை மீறும்
அசாத்திய மௌனம் மனநிலைக்கான மாமருந்து கயஸ்
அது நோய்க்கானதல்ல
அடர்த்தி கூட்டி அன்பை ஆவிக்குள் விதைப்பது
அது மூச்சு விடும் அளவிற்கு சரி
இருக்கும் வரை காதல் செய்’
– லைலா கயஸ் அவர்களின் இவ்வரிகள் காதலிக்கப்படும் இலை ஒளியால் மிளிருகிறது. அது காற்றின் திசையறியாது கடலின் ஆழம் அறியாது பூமியின் இப் புறம் புகுந்து அப்புறம் வரவும் தயங்காது மனதின் வேகமே அன்பின் அடர்த்தியும் கணக்கிட்டு கொட்டும் வெள்ளிக்காசுகள் காதலின் சுவையறியாது.
உடைபடாத மௌனத்துள் வார்த்தைத்துண்டங்கள் மிதக்கின்றன. முடிந்தால் அருந்து. தொண்டையை அறுத்துச் செல்லும் பனித்துண்டங்களில் நானிருக்கிறேன். என் கவிதையும் இருக்கிறது. மௌனத்தைவிட பெரிய வாள் ஒன்று உண்டா? உலகினில்!!
தகிப்பின் தாகம் வெயிலுக்கு மட்டுமல்ல! இவரின் கவிதைக்கும் இருக்கிறது!! இல்லையானால் “வெயிலுக்கு நிழல் வேண்டும்” என கவிதை முத்தாய்ப்பாக முடியுமா?
‘அன்பென்பது ஆன்மாவின் செல்லப்பிராணி
கர்மாவென்பது கருணையின் மூலிகைச்செடி’
-லைலா கயஸ் அவர்களின் வரிகளில் காதலுக்கு அடிபணியும் மனம் செல்லப்பிராணியாகிஅடியொற்றி வரும் வாழ்நாள் முழுதும். விட்டுச் சென்ற இரணத்திற்கோ வாழ்நாள் முழுதும் மூலிகைச்செடியை தேடி ஓடுகிறேன் இன்னும் ரணத்தை குணமாக்கும் அந்த மூலிகைச்செடி என்கண்ணில் படவேயில்லை! வாழ்வு அத்தனை ரணமானது தான். சணத்தில் திருடிப்போனது யார் என்ற கேள்விக்கு விடை கிடைப்பதில்லை.
அன்புக்கு மாற்றாக என்றொரு கவிதை-
‘உன்னிடம் அன்புக்கு மாற்றாக ஏதாவது இருந்தால் கொடு
கீழே உள்ள சாம்பல் நிறப்பூமியின் மீது நான் உதிர்ந்து கொள்கிறேன்’
என்ற வரிகளில், சுடலை மாடனின் சாம்பலின் சமையலில் உமையவளின் வாசமே ஏக்கமாக நிரம்பியிருக்கிறது.
காதல் என்பது உன்னை என்பாத்திரத்தில் நிரப்பிக் கொள்வது. அது குளிர்ந்த நிலவாக அல்லது சுடும் தணலாக அது அவர்களின் அட்சய பாத்திரத்தின் ருசி! காணாமல் போகவும் ஒரு வழி காணாமல் ஆக்கப்படவும் தேடக் கிடைக்காத சாபமும்!
கேட்டா பெய்கிறது மழை மனம் பார்த்தா நுழைகிறது. காதல்? ஆதித்தாயின் மொழியில் நகலாகிறது வாழ்வு விலகிச் செல்ல முடியாத ஞாபகங்கள் அடர்வாய்ப் பொழிய பித் தாக்கியது எது?
கருணையைத்தந்தாய் என்கையில் வந்தபிறகு அதுவே சாபமாகிவிட்டது வாழ்வு நீயே வைத்துக்கொள் என்று கையளிக்க முடியாத இந்த காதலை வாழ்ந்து தீர்ப்பதும் ஆயுள் வரை சுமந்துதீர்ப்பதும் மானுட வாழ்வு.
‘ஒருபோதும் விட்டகலாத
ஒன்றின் இருப்பிற்குள் மெல்ல மெல்ல நிரம்பிக் கொண்டிருக்கிறது நீர்க்குடுவை
-லைலா கய ஸ் அவர்களின் சொற்குடுவையில் பொழிகிறது காதல். ஆம் காதலால் ததும்பிக் கிடக்கும் இந்த நீர்க்குடுவையை தாகம் தீர்க்கும் கணம் வரை உயிர்ப்பு. கலயம் உடைந்து விட்டால் காதலுக்குத் தான் நட்டம். நானாக வரவில்லை இங்கு என முடியும் இக்கவிதையின் பெருவெளிக்குள் நான் பாதையறியாது குளிர்மையில் ஊறிக் கிடக்கிறேன். கடந்து விடுங்கள் பாதை அறிந்தால்…’
சர்வ நிச்சயமாக அவள் ஒரு குடுவைத் தாவரம் -என்றொரு தலைப்பின் கீழ்,
‘நானும்
பதியம் போட்டுக் கொண்டே இருக்கிறேன்
வரிகளை
என் வேர்களிலிருந்து அனுப்பியாயிற்று எல்லா திசைகளிலும்
என் வனத்தை.
எவை பிழைத்தன
எவை
என் மண்ணின் மடிசாய்ந்தது
என்பதை அறியவிரும்பவில்லை!
கனக்கும் இதயத்தோடே
சொல்கிறேன்
காதலின் வறுமை என்ன
செய்வான்
அந்தத்தோட்டக்காரன்
இதுவரை
வானம் ஏக விட்டதில்லை
பரம்பொருளை நினைத்தவள் கிளியாகி விட்டாள்
நான் அவளின்
பூவாகி விட்டேன்.
ஒரு கடலின் நீல நினைவுகள் போல அடர்த்தி
அதனால்தான்
குடுவைகளில் ஒரு தாவரம் ஆகி விட்டாள்!
மழையின் நீர்த்துளிகளுக்கு
இருக்கிறது
கண்ணீரின் வாசம்
வரிகளுக்கும்
ஆறுதல் இல்லை
ஹோவென இசைக்கும் மழை அந்த
குடுவைத் தாவரத்தையும்
கொஞ்சம்
நினைவுகளால் நனைத்துச்செல்லட்டும்!! ‘
இப்படியான வரிகளில் நீங்கள் லைலா கயஸ் எனும் தேவதையை கடந்து விட இயலாது.
வழியெங்கும் தீக்கொன் றைகளை எதிர்பார்த்து செல்லாதீர்கள் சில தேன்மிட்டாய்களும் ஆறுதலுக்கு. சுவைகரையும்வரை வாசியுங்கள்!
சந்திர கிரகணம் – என்ற ஒரு தலைப்பில்.
‘வரிகளில் மறைகிறேன் நான் இருளாக’ லைலா கயஸ் நம்பிக்கை ஊட்டுகிறார்.
‘சிறு இடை நிறுத்தம்
மீண்டும் ஒளி வரும்._என்ன
ஒரு வழிகாட்டுதல்!’
முயங்கி விடாத வாழ்வின் ஒரு சுடரான கவிதையிது!
‘தணல் என்பது
வாதை தான்
பூத்து பூத்து
போர்த்தியிருப்பது வாதையின் தணல்
என்பது சாதாரண வரிகளல்ல!!
வாதையின்ன்று எழுந்த
தரிசனம்
புன்னகையன்றி வேறென்ன ?
அடையாளம் காணமுடியாத
பிரகாசம்
பூத்திருக்கிறது
தணலாக!
‘பறவை பார்க்கிறேன்’ என்றொரு கவிதை! அற்புதமான எழுத்து லைலா கயஸ் உடையது.
‘நீ கஞ்சனாகவே இரு
காதலிக்கத்தெரியாதவன்
நிலாவைப் பார்க்கிறான்
கடந்த பறவையை அவன் பார்க்கவில்லை
மீண்டும் அதே வழியில்
பறக்குமா பறவை
விதிவந்த வழி
போல செதில்களால்
மூடப்பட்ட வேதியியல்
இந்த வாழ்வு
துயரத்தை கடக்கும் பறவைக்கு ஏது துயர்? காலத்தின் காட்சிகளில் உருண்டோடும் கவிதை’ -நித்தியம்.
நீங்களும் நித்தயம் என்பதை காணவிரும்பினால் உருளும் பனித்துளியின் ஆயுள் தான் நமக்கும்!
காதலின் நித்யம் அதுவே!!
‘ஓவியன் – என்ற தலைப்பில்,
‘நிறமற்ற அலையில்
அல்லாடும் சிறுமி
ஓவியனோ
நிறங்களில்
மனதை நிறுத்துகிறான்
அடர் நீலம்
பொதிந்த பேரழகில்
ஒளிர்கிறது
நிறமற்ற அலை!’
எழுத்தில் கடந்து செல்கிறது. மேலும் கீழும் நான் தான் பயந்து திக்குமுக்காடுகிறேன். கவிதையின் அடர்வில்
அன்பிற்கு இசைவதால் உடல் எடையற்றதாகி விட்டது. பக்கங்களை கடக்கும் போது!
நீங்களும் வெளியேறலாம்,
‘உள்மன இரவிலிருந்து
வெளியேற
விருந்தினர்
யாரேனும் வரவேண்டும்!
கிணற்றில்
பின் கட்டில்
நீர் இறைக்கும் சத்தம்!!
தேநீர் கோப்பைகளின் தேநீர்
கொஞ்சம் வெற்றிடமும்
விடிந்தே விட்டது இரவு!’
– இப்படியான வரிகளில் சதிராடும் லைலா கயஸ் அவர்களின் எழுத்து சித்திரம் இன்னும் நீளட்டும். நாங்கள் நடக்க ஏதுவாக ததும்பி நிரம்பும் குளிர்மைக்குள் வெம்மையின் உயிரை எரியவிட்டதற்காக!!
ஒளி உங்களுக்கு தெரியாமலும் கடக்கலாம். சுட்டவுடன் சுகப்படவும், கவிதைகள் நெய்த லைலா கயஸ்
வாழ்க!!
நூல் மிக நேர்த்தியான கட்டமைப்பு. நம்நதி பதிப்பத்திற்கு வாழ்த்துகளும் பேரன்பும்!!
காதல் என்பது அமைதியான தீப்பந்தம் என முடியும் கடைசி விளிம்பிலும் சுடுகிறது வெப்பம்!
பக்கம்_204
நூல் மதிப்பு ₹250
நூல் பெற : 9894795383
வாழ்க தமிழ்!
வெல்க எழுத்து!!
add a comment







