சிறுகதை

“சித்திரையும் கத்திரியும்”

132views
சென்னை ஏர்போர்ட்டின் அருகே விமானம் கீழே இறங்குவதற்காக வந்து கொண்டிருக்கிறது. இன்னும் சிறிது நேரத்தில் விமானம் தரையிறங்கும் என்று பைலட் கூறியது பயணிகள் காதில் விழுந்தது.
வசுமதியும், வாசுவும் சோர்ந்து போயிருந்தார்கள். 30 மணி நேரம் பயண களைப்பு, அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு திரும்பி வந்து கொண்டிருக்கிறார்கள். அப்பாடா!! இன்னும் கொஞ்ச நேரத்துல சென்னைக்கு வந்துவிட போறோம். ‘ஒரே முதுகு வலி முதல்ல ஆத்துக்கு போய் வெந்நீர் போட்டு குளிக்கணும். அப்பத்தான் உடம்பு வலி குறையும். மது குட்டி இன்னும் தூங்கிக்கிட்டே இருக்கா அவள கொஞ்சம் எழுப்பேன்’ என்றான் வாசு.
‘மது குட்டி எழுந்திரு’ அம்மா தட்டி எழுப்பினாள். அம்மா.. நம்ப ஊருக்கு வந்துடோமா? பாட்டி பார்க்க போறோமா? என்றாள் மது. ஆமாண்டி செல்லம், நாம்ப தாத்தா, பாட்டி சித்தி, எல்லோரையும் பார்க்க போறோம். என்றாள் வசுமதி .
‘வசு, பேக் எல்லாம் சரியா இருக்கா எல்லாத்தையும் செக் பண்ணிக்கோ; நான் டாக்ஸி புக் பண்ணிடுறேன்’. ‘சரிங்க, மதுகுட்டி நீயும் செப்பல் போட்டுக்கோ டாக்ஸி வந்தது ஏறி க்கலாம்’ என்றாள் வசு.
அலமு பாட்டி வாசலிலே ஆரத்தியுடன் காத்துக் கொண்டிருந்தாள் பேத்திக்காக.. குழந்தை மதுவை கைக்குழந்தையாக இருக்கும் போது பார்த்தது. வாசு அமெரிக்காவுக்குபோயி அஞ்சு ஆறு வருஷத்துக்கு மேல ஆயிடுச்சு, குழந்தையை வீடியோவில தான் பார்க்கிறேன். இப்பொழுது நேரா பார்க்க போறேன் என்று தனக்குள்ளே சந்தோஷத்தில் சொல்லிக் கொண்டாள் அலமு பாட்டி .
‘என்ன மாமி… ஒரே பரபரப்பா வாசலிலேயே நின்னுகிட்டு இருக்கீங்க? யாராவது வராளா? இது பக்கத்தாத்து மாமி பார்வதி.
‘ஆமா; பையன், மாட்டு பொண்ணு ,பேத்தி எல்லாரும் அமெரிக்காவில் இருந்து வராளே!..
‘அப்படியா? என்ன ஏதாவது விசேஷமா? என்றாள் பார்வதி மாமி.
வசுவோட தங்க கீதாவுக்கு கல்யாணம் அதுக்காகத்தான் எல்லாரும் வரா,’ என்று பேசிக் கொண்டிருக்கும் போதே கீங்.கீங்… என்று சத்தத்துடன் சர்.. என்று ஒரு டாக்ஸி வாசலில் வந்து நின்றது .
கண்ணாடி கதவை திறந்து கொண்டு ‘மது, பாட்டி.. நான் வந்துட்டேன்’என்று கத்தினாள் .டாக்ஸி கதவை திறந்தாள் வசுமதி .மது இறங்கி ஓடி வந்து பாட்டியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தாள். பாட்டியும் ஆசையுடன் பேத்திக்கு முத்தம் கொடுத்தாள். பின்பு ஆரத்தி எடுத்துவிட்டு உள்ளே வரச் சொன்னாள். எல்லோரும் உள்ளே வந்து ஹாலில் உட்கார்ந்தார்கள். ‘எல்லாரும் போய் குளிச்சிட்டு பிரஷா வாங்க, நான் டிபன் ரெடி பண்ணி வச்சிருக்கேன். உட்கார்ந்து எல்லாரும் ஒண்ணா சாப்பிடலாம்’ என்றாள் அலமு பாட்டி.
டைனிங் டேபிளில் எல்லோரும் டிபன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, ‘வசு.. நாளைக்கு மறுநாள் தமிழ் வருஷபிறப்பு வருது; குடும்பமா சேர்ந்து கொண்டாடி எவ்வளவு வருஷம் ஆச்சு? என்றாள் அலமு பாட்டி. அமெரிக்காவில் ஜனவரி 1 ஹாப்பி நியூ இயர் கொண்டாடுவார்கள் ஊரே கலர்ஃபுல்லா அழகா இருக்கும். இங்க எப்படி? என்று கேட்டாள் மது.
‘ஆமாண்டா கண்ணு, இங்க சித்திரை வருஷ பிறப்புதான் “தமிழ் ஹாப்பி நியூ இயர்” நாமளும் ஜோரா கொண்டாடலாமா? என்றாள் பாட்டி. ‘அன்னைக்கு என்ன பண்ணுவீங்க பாட்டி? இது… மது குட்டி. ‘அன்னைக்கு காலைல சீக்கிரமா எழுந்து குளிச்சிட்டு பாட்டி உனக்கு புது டிரஸ் வாங்கி வச்சிருக்கேன், அதை நீ போட்டுக்கோ, நாம எல்லாரும் நம்ம தெருவுல இருக்கும்சிவா,விஷ்ணு கோயிலுக்கு போயிட்டு வரலாம். அப்புறமா வடை, பாயசம் ,மோர்க்குழம்பு, உனக்கு பிடிச்ச அப்பளம் உங்க அப்பாவுக்கு புடிச்ச ‘மாங்கா பச்சடி ‘செய்ய போறேன் .பாட்டி எனக்கும் குடுங்க நான் சாப்பிட்டதே இல்லை!! என்றாள் மது. கண்டிப்பா, உனக்கு இல்லாமலா ? என்றாள் பாட்டி .சாப்பிட்டு முடிச்சு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்த பிறகு சாயங்காலமா; கோயிலுக்கு போலாம். கோயில்ல பஞ்சாங்கம் படிப்பாங்க.
‘பஞ்சாங்கம்ன்னா?? என்ன எனக்கு புரியலையே? ‘என்றாள் மது.
‘புத்தாண்டு ‘சித்திரை மாதம் முதல்,.. வருஷம் முழுவதும் பங்குனி மாதம் வரை’ உள்ள விசேஷங்கள், மழை, புயல் ,வெயில் போன்ற பல இயற்கை சம்பவங்களை முன்கூட்டியே கணித்து பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டிருக்கும்; அதில் உள்ள விஷயங்களை படித்து; நல்லது, கெட்டது பலன்களுக்கான கூறுவார்கள். ‘ஓ… அப்படியா’ என்றாள் மது.
‘அம்மா என்ன? இவ்வளவு இளநீர் வாங்கி வச்சிருக்கீங்க?’ என்று கேட்டான் வாசு.
‘சித்திரை மாசம் வந்தாலே உடனே கத்திரி வெயிலும் வந்துவிடும் . உங்களுக்கு வெயில் ஒத்துக்காது அமெரிக்காவிலே சில்லுனு இருந்திருப்பீர்கள். அதனால் இளநீர் நம்ம மரத்திலிருந்து கொஞ்சம் வெட்டி வச்சிருக்கேன். இத முதல்ல சாப்பிடுங்க. மீதி இன்னும் மரத்துல இருக்கு அப்புறமா வெட்டி எடுத்துக்கலாம்’ என்றாள் அலமு பாட்டி.
இந்தக் கோயிலில் சித்திரை மாதம் வசந்த உற்சவம் நடக்கும். அப்புறம் அம்மன் கோயில் எல்லாவற்றிலும் கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடைபெறும். வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் சித்திரை திருவிழா நடக்கும். அப்போ நாங்க சரியான நேரத்தில் தான் இந்தியா வந்திருக்கோமுனு சொல்லுங்க .நல்ல ஜாலியா இருக்குமா பாட்டி ?’ என்றாள் மது.
‘ஆமா ..ரொம்ப ஜாலியா இருக்கும். சித்ரா பவுர்ணமி அன்னிக்கு ராத்திரி மொட்டை மாடியில எல்லாரும் ஒண்ணா உக்காந்து நிலா சோறு கூட சாப்பிடலாம். எனக்கு ரொம்ப பிடிக்கும். சரி. .வா.. பின்னாடி நம்ம மாடு கன்னு போட்டுருக்கு அத போய் பாத்துட்டு, கொஞ்சம் வைக்கோல் போட்டுட்டு வரலாம்’ என்றாள் பாட்டி.
மதுவும் பாட்டியின் கையை பிடித்துக் கொண்டு சென்றாள். கன்னுக்குட்டி பார்ப்பதற்கு அழகாக இருந்தது. அதை மெதுவா தடவினாள். பக்கத்திலிருந்து மாடு திடீரென்று தன் தலையை வேகமாக அசைத்தது. உடனே பயத்தில் பாட்டி மாடு முட்ட வருது என்று கத்தினாள்.
‘பாட்டி …பாட்டி.. ‘என்று கத்திக்கொண்டு கண் முழிச்சு பார்த்தாள் மது. இன்னும் நாம ஏரோப்ளேனில் தான் இருக்கிறோம் என்று அவளுக்கு புரிந்தது. அப்ப இவ்ளோ நேரம் நான் கண்டது கனவா என்று யோசித்துக் கொண்டிருந்தாள்!!
அதற்குள் ,ஏன் இப்படி கத்துற ? என்றாள் வசு. பக்கத்தில் உள்ளவர்கள் எல்லாம் சற்று திரும்பி பார்த்தார்கள் என்ன ஆச்சு என்றார்கள்? ஒன்றும் இல்லை அவள் கனவு கண்டிருக்கிறாள் போல இருக்கு, அதுல பயந்துட்டா என்றாள் வசுமதி .
‘அம்மா, நாம இன்னும் பாட்டி ஆத்துக்கு போகவே இல்லையா?’
‘ இல்லடி எழுந்திரு .இதோ விமானம் தரையிறங்க போகுது ,கொஞ்ச நேரத்துல போயிடலாம்’ என்றாள் வசுமதி. ‘அப்படியா ?’ என்று சந்தோஷத்தில் குதித்துக் கொண்டு எழுந்தால் மது .
‘அப்போ , என்ன மாடுமுட்டல! என்று மனதிற்குள்ளேயே சொல்லிக் கொண்டாள் மது.
எம் .எல் .பிரபா
ஆதம்பாக்கம்.
சென்னை 88.

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!