Uncategorized

மத்திய அரசின் ஸ்ரீ தர்ஷிணி கலைக்கூட விருது : அகில இந்திய அளவில் இரண்டாம் இடம் பிடித்து திரைப்பட கலை இயக்குனர் தேவா சாதனை

120views
திரைப்படத்துறையில் சிறந்த ஓவியராகவும் கலை இயக்குனராகவும் பணியாற்றி வருபவர் கலை இயக்குனர் தேவா. இவர் சமீபத்தில் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஸ்ரீ தர்ஷிணி கலைக்கூட விருதை பெற்றுள்ளார். அகில இந்திய அளவில் இரண்டாம் இடம் இவருக்கு கிடைத்துள்ளது. டெல்லியை தலைமையிடமாகக் கொண்ட இந்த அமைப்பு சென்னையில் 14 இடங்களில் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு ஓவியம், சிற்பம் போன்ற கலைகளில் சிறந்து விளங்குபவர்களை ஊக்குவித்து வருகிறது.

தேவா அக்ரிலிக் பெயிண்டிங்கில் கைதேர்ந்தவர். அப்படியே தத்ரூபமாக வரைவதில் வல்லவர். அந்த வகையில் இவர் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமலஹாசன், இசைஞானி இளையராஜா, அஜித், விஜய் சேதுபதி, நயந்தாரா, சூரி, யோகி பாபு போன்ற 50-க்கும் மேற்பட்ட கலைஞர்களை ஓவியமாக தீட்டி பாராட்டை பெற்றுள்ளார்.

ஆரம்ப காலங்களில் திரைத்துறையில் தேவா அவர்கள் ஆர்ட் டைரக்டர் கிருஷ்ணமூர்த்தி, சாபுசிரில் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியுள்ளார். அவற்றில் குறிப்பாக சிம்பு தேவனின் இம்சைஅரசன் 23 ஆம் புலிகேசி, ஷங்கரின் அந்நியன், சிவாஜி போன்ற படங்களில் பணியாற்றி உள்ளார்.
ஷங்கரின் சிவாஜி படத்தில் இடம் பெற்ற ‘காவிரி ஆறும் கைக்குத்தல் அரிசியும்’ பாடலில் வரும் 40 பெரிய தொப்பை கொண்டவர்களின் வயிற்றில் ரஜினிகாந்த் உருவத்தை ஓவியமாக காலை 5 மணியிலிருந்து 9 மணிக்குள் வரைந்து அவர்களை பாடல் காட்சிக்கு அனுப்பியதை பெருமையாக குறிப்பிடுகிறார்.
கக்கனின் வாழ்க்கை வரலாறு, வெற்றி கதாநாயகனாக நடித்த ‘ஜீவி’ போன்ற படங்களில் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார். தற்பொழுது சில படங்களில் கலை இயக்குனராக பணியாற்றியம் வருகிறார்.

ஓவியர் ராஜா ரவிவர்மாவின் புகழ்பெற்ற ஓவியங்களை கொண்டு இன்றைய இளைய தலைமுறை நடிகைகளை மாடலாக வைத்து குறிப்பாக நயன்தாரா, ரம்யா கிருஷ்ணன், சுருதிஹாசன், ஐஸ்வர்யா ராஜேஷ் போன்றவர்களை ஓவியமாக வரைந்து மீண்டும் ரவிவர்மாவின் ஓவியங்களுக்கு வேறு ஒரு பரிணாமத்தை வழங்கி உள்ளார்.
இந் நிகழ்வு கேரளா அரசால் நடத்தப்பட்ட ரவிவர்மா ஓவிய போட்டியில் கலந்து கொண்டு ஓவியங்களை தீட்டி கேரள அரசின் விருதையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இவர், லண்டனில் நடைபெறும் சர்வதேச ஓவிய போட்டியில் கலந்து கொள்ள ஆயத்தமாகி வருகிறார்.

இது போன்ற பல சாதனைகளை செய்து வரும் தேவா, மத்திய அரசு மாநில அரசு பெரிதாக ஊக்குவிப்பதில்லை எனவும், இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களில் ஓவியக் கலைஞர்களும், சிற்பக் கலைஞர்களும் சிறந்த முறையில் கௌரவிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் மட்டும் உரிய அங்கீகாரம் கிடைக்க பல மாதங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. இங்கு சரியான வழிகாட்டுதல் இல்லை. பெங்களூரில் உள்ள அமைப்புகள் போல தமிழக அரசு இந்த கலையையும் கலைஞர்களையும் மேம்படுத்த ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்.
தேவா மதுரை மாவட்டம் திருமங்கலம் டீ கல்லுப்பட்டியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!