சிறுகதை

கடைசி நிமிடம்

202views
டாடோ செ. க. சந்திரகலா
சென்னை.
திகிலாய் கடந்தது நிமிடங்கள்….
உள்ளே சென்றவளுக்கு என்ன ஆயிற்று…!? பதட்டம் தொற்றிக் கொள்ள….
என்னை இருப்பு கொள்ளாமல் செய்தது.
அவளின் செயல்கள் எனக்கு வினோதமாக இருந்தது. என்ன ஆயிற்று இவளுக்கு…!?… இதற்கு முன் அவளை இப்படி பார்த்ததே இல்லையே… மிகவும் அமைதியானவள் அவள்…. இன்று ஏன் இவ்வளவு ஆவேசம் அவளுக்கு…!?
புரியாத புதிராய் அறையின் குறுக்கே நடந்து கொண்டும் அவ்வப்போது அறையை எட்டிப் பார்த்துக் கொண்டும் இருந்தேன்.
என் தலையைக் கண்டதும் பரிதவிப்புடனும் பரிதாபத்துடனும் பார்த்தாள். என்னைத் தவிர யாரையும் அவ்வறையினுள் அவள் அனுமதிக்கவில்லை.
அவள் நிலைக்கண்டு நிலையற்றவளாய் தடுமாறினேன். அறைக்குள் செல்லவும் அச்சமாக இருந்தது. வெளியிலிருந்தே அவளை கண்காணித்துக் கொண்டிருந்தேன். யாராவது அறையின் அருகே வந்தாலோ… எட்டிப் பார்த்தாலோ… அவளது கோபமும் ஆவேசமும் அதிகமாகியது… பயங்கரமாக கத்த ஆரம்பித்து விடுகிறாள். இதனால் மற்றவர்கள் ஒதுங்க. நான் தனிமைப்பட்டுப் போனேன்.
இரவின் நிசப்தமும்… அவ்வப்போது அறையிலிருந்து எழும் அவளின் அலறலும் பயத்தில் என் அடிவயிறு பிசைந்தது.
அது எங்கள் கல்லூரி விடுதி. எனது தவிப்பு என் தோழியரையும் உறங்க விடாமல் செய்தது. அவ்வப்போது வந்து எட்டிப் பார்த்து சென்றனர். அது எனக்கு சற்று ஆறுதலை தந்தது.
“சௌமி… ” கடந்த ஆறு மாதத்திற்கு முன்புதான் அவள் விடுதிக்கு வந்திருந்தாள். எங்கள் எல்லோருக்கும் பிடித்த செல்லம் அவள். எல்லோரையும் விட என்னிடமே அதிகம் ஒட்டிப் போனாள். கடந்த சில நாட்களாக அவளில் சில மாற்றங்கள். உடல்நிலையிலும் மனநிலையிலும் வேறுபட்டு இருந்தாள். யாருடனும் நெருங்காமல் தனிமைப்படுத்திக் கொண்டாள். கோபமும் ஆவேசமும் அவளிடம் அதிகரித்து இருந்தது. என்னிடம் மட்டுமே அவள் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள். அதனால் மற்றவர்களும் அவளை பெரிதாக கண்டு கொள்ளவில்லை.
இதோ… மணி மூன்றுக்கு மேல் ஆகியிருக்கும். சற்று அமைதியாகி இருந்தது அவளது அறை. நானும் சற்று கண்ணாயரலாம் என்று எழ எத்தனிக்க. மீண்டும் அவளின் பயங்கர கத்தல் நிசப்த்தத்தை கிழிக்க. திடுக்கிட்டு நானும் அறையை நோக்கி ஓட….
என் கால்களில் ஏதோ பிசுபிசுத்தது… இரத்தத்தால் தோய்ந்த அவள்…
அந்த “கடைசி நிமிடம்”…
கண்களில் நீர் வழிய அறைக்கு வெளியே வந்து அமர்ந்து விட்டேன்.
அரை மணி நேரம் அமைதியில் என் மடியில் ஏதோ கனத்தது.
பார்க்கையில்…நம்பிக்கையாய் என்னிடம் அவள் ஒப்படைத்த இரு சிசுக்கள்… “மியாவ்…” என்று கத்த வராத முனங்கலுடன் தவழ்ந்தது என் மடியில்.
மூன்றாவதாக தான் ஈன்ற சிசுவை எடுத்து வர அந்த மோட்டர் அறைக்குள் சென்றுக் கொண்டிருந்தாள் என் செல்ல “சௌமி…”

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!