சிறுகதை

அப்பா

273views

முதன் முதலாக இன்று தான் நான் காலேஜூக்கு செல்ல ஆயத்தமாக இருக்கிறேன். மஞ்சள் கலரில் டாப் , ஜீன்ஸ் உடுத்தியிருந்தேன். தூக்கி வாரியிருந்த போனி டெயில் என்னை மேலும் அழகாக காண்பித்தது. அம்மாவிற்கு வீட்டு வேலைகள் இருந்ததால், அப்பா என்னுடன் காலேஜ் வர ஆயத்தமானார்.

“என்னம்மா டிரஸ் இது?.. இத போட்டுண்டா காலேஜ் வர போற?”

ஆரம்பிச்சாச்சு. மனதுக்குள் நினைத்து கொண்டேன்.

” இன்னிக்கு ஒரு நாள் தாம்பா… ப்ளீஸ்”

லேபிள் கிழிக்காத ஹை ஹீல்ஸ் என் அந்தஸ்தை உயர்த்தியது.

“சொன்ன கேட்க வா போற?” சொல்லி கொண்டே அப்பா டூவீலரை ஆன் செய்தார். பின்னால் ஏறி அமர்ந்தேன். “டம்ம்ம்…”

“பதுவுசு வேணும். இப்படியா உட்கார்றது?” பின்னாடி சற்று நகன்று கொண்டேன்.

“அப்ளிகேஷன் , அட்மிகன் கார்டு மார்க்ர் லிஸ்ட் எல்லாம் எடுத்துண்டீயா ?”

“ஃபைல்ல இருக்குப் பா”

“எங்காவது பராக்கு பார்த்துட்டே போட்டுடாதே இப்படி குடு” வாங்கி தனது பையில் வைத்து கொண்டார்.

ரொம்ப ஜாக்கிரதையாக ஒரமாக வண்டியை உருட்டி கொண்டே சென்றார்.

“வண்டிய வச்சுட்டு நடந்தே போயிருக்கலாம் பா”

“பஸ் ஸ்டாப் வரைக்கும் தான் வண்டி. அப்புறம் தி நகருக்கு பஸ்ஸு தான் ”

“ஐய்யய்யோ .. பஸ்ஸா,?” காலேஜ் வரைக்கும் வண்டில போய் சீன் போடலான்னு நெனச்சேனே , இப்படி சொதப்புறாரே .. கண்ணாடி வழியாக என்னை பார்த்தேன் ஸ்டைலாக ” தலை முகமெல்லாம் துப்பட்டாவால் மூடி கண்களுக்கு கண்ணாடி போட்டெதல்லாம் வேஸ்ட்.

” காலேஜ் வரைக்குமே வண்டில போலா மேம்பா”

” பெட்ரோல் வேஸ்ட். பஸ்ஸுல போனா ஐம்பது ரூபாய் தான் ஆகும்”

5 A வந்தது. கூட்டம் அதிகமில்லாததால் 90° நேர்கோட்டில் வந்தது. ஏறினேன், இருக்கையில் அமர்ந்தேன்.

‘இப்படி இங்க வந்து உட்கார்”

“இது லேடீஸ் ஸீட் தானேப்பா ”

“வேண்டாம் என்னோட உட்காரு.”

“ம்… ”

“இப்படி நிமிர்ந்து உட்காரனும்”

“ம்… ”

” கைய ஜன்னல்ல வைக்க கூடாது. ஏதாவது வந்து இடிச்சா கை போயிடும்”

“ம்… ”

“நல்லா உட்காந்துக்கோ”

“ம்… ”

“ஹலோ …” எதிர் இருக்கையில் இருந்தவர் போனில் கத்தவும்,

“எங்க பாரு எப்ப பாரு போன் தான் ஒரு நாளைக்கு 1000 தடவ ஹலோ…. ” தேவையில்லாமல் தனக்கு தானே அவரை கடிந்து கொண்டார். அந்த சமயம் என் பேண்ட் பாக்கெட்டிலிருந்த ஃபோன் சிணுங்கியது.

என்னை முறைத்தார்.

எடுக்கவா? வேண்டாமா? யோசித்து கொண்டே எடுத்தேன்.

“சொல்லு டீ … வந்துட்டே இருக்கேன். நீ வந்துட்டீயா?” என்றேன்.

“காலேஜ் தானே போறோம். அங்க போய் நேர்ல பேசிகலாமே?” என்றார்.

“சரி டீ வந்து பேசறேன்’ வைத்தேன்.

“பஸ் ல போகும் போது மொபைல் பேசிட்டே இருக்க கூடாது. அதே மாதிரி ஏறும் போதும் கையில மொபைலோட ஏறக் கூடாது. அந்த சமயத்துல தான் நம்ம மொபைல் திருடு போகும் ” இது அவரோட அனுபவம். பாவம் பார்கறவர்களிடம் எல்லாம் சொல்லுவார்.

“இந்த ஸ்டாப்பேர் தான் விஜய நகர் ”

” தெரியும் பா…” என்றேன். கெளரவ குறைச்சல் தலைதூக்கியதால் . ஆனா எனக்கு சத்தியமா இது விஜயநகர் என்பது தெரியாது.

என்னால் உட்கார முடியவில்லை சற்று நெளிந்தேன். அப்போதான் கவனித்தேன்.

அப்பா அந்த சீட்டில் முக்கால் பகுதியை ஆக்ரமித்து போதாகுறைக்கு இடுப்பில் கையை வேறு மடக்கி வைத்திருந்தார்.

“கொஞ்சம் கையை மடக்கிகோயேன், உட்கார முடியலை”

“உனக்கெல்லாம் டவுன் பஸ்ல போய் பழக்கமில்ல. சொகுசா வளர்ந்தாச்சு, நாலு தடவ போனா கஷ்டம் என்னன்னு தெரியும் ”

கஷ்டம்டா… இப்போ என்ன சொல்லிட்டேன்? ஒரு வழியா பஸ்டி நகர் பஸ்ஸாண்டை சென்றடைந்தது.

ஆர்வ கோளாரில் படியிலிருந்து ஸ்டைலாக குதித்தேன்.

“அவசரம் என்ன மெதுவா இறங்கனும். அதே மாதிரி பஸ் முழுசா நின்ன பின்னாடி தான் இறங்கனும் புரிந்ததா?

“உஷ்ஷ்…. அப்ப்ப்பா ”

“இந்த காலத்து பசங்களுக்கு அட்வைஸ் பிடிக்கறதில்ல……… ஏய், அப்படி நடக்காதே… என் கூடவே வா…,, கடகட ன்னு முன்னாடி போகாதே … அதோ பாரு பஸ்ஸு வர்ரது… பாத்து போகனும்.” ஏதாவது ஒன்று சொல்லி கொண்டே வந்தார்.

கோவத்தில் அப்பாவின் பிடியிலிருந்து என் கையை உதறி கொண்டேன். சற்றே சலிப்புடன் உற்சாகமும் குறைந்து காலேஜூக்குள் நுழைந்தேன்.

அங்கு அரை மணி நேர வேலை முடிந்ததும் திரும்பி நடந்தோம்.

அப்பாவை பார்த்தபடி நடந்தேன்.

என் பெயருக்கு பின்னால் வரக்கூடிய பட்டத்திற்காக, LkG யிலிருந்து நல்ல காலேஜ் வரை பார்த்து , எனக்காக வேலையை ஒதுக்கி வைத்து, எனக்கு துனையாக வந்து , ஃபீஸ்கட்டி, … காத்திருந்து , ச்சே.. அப்பா பாவம்,

எனக்கு இதெல்லாம் அப்ப அப்பதோணும். அவரின் காதோரத்தில் விழுந்த நரையை கண்டேன். எத்தனை அனுபவசாலி…? ச்சே…. என் அப்பா ஆல்வேஸ் க்ரேட் .நேராக சரவணபவன் ஹோட்டலுக்குள் நுழைந்தார்.

“ஏம்பா ஹோட்டல் ”

“உனக்கு பசிக்கும் ல… வேண்டியதை சாப்பிடு”

என்னையறியாமல் கண்கள் கலங்க, அதை மறைக்க கீழே குனிந்த பொழுதுதான் கவனித்தேன்.. அப்பாவின் பேண்ட் அடியில் கிழிந்து இருப்பதையும் கால் செருப்பு தேய்ந்து இருப்பதையும் .

சாப்பிட்டு முடித்து வெளியில் வரும் பொழுது நானே அப்பாவின் கையை இறுக்க பற்றி கொண்டேன்.

அந்த தருணம், அவரின் சந்தோஷம் கூடியிருந்ததை அவர் நடை காட்டி கொடுத்தது.

 

  • எழுதியவர் : ஜெயஸ்ரீ அனந்த்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!