கட்டுரை

“ஆழிப் பேரலை” – அழியாத நினைவுகள்

190views

“ஆழிப் பேரலை” – அழியாத நினைவுகள்

 

அன்று ஞாயிறு ஆனதால் அலுவலக அழுத்தங்கள் ஏதுமின்றி, ஞாயிறு எழுந்தும் நாங்கள் எழுந்திருக்கவில்லை. அப்பொழுதெல்லாம் நொடிக்கு நூறுதரம் ‘ஃபிளாஷ் நியூஸ்’ என கலங்கடிக்கும் செய்திச் சேனல்கள் தமிழில் புற்றீசல்கள் போல முளைத்திருக்கவில்லை. காலை சன் டிவி 8 மணி செய்திகளில் பதற்றத்துடன் எழுந்து “என்ன..? என்ன நடக்குது இங்க..?” என செய்தி வாசிப்பாளர் பதறியதை செய்திகளிடையே கண்டபோது சற்றே அதிர்ச்சியாக இருந்தது, அது பின்னர் நிகழப்போகும் பேரபாயத்தின் பிள்ளையார் சுழி என்பதை அப்பொழுது யாரும் அறிந்திருக்கவில்லை.

டிசம்பர் – 26, 2004, காலை 9.30 மணி. நாங்கள் வசிக்கும் கிராமத்தின் வழியே செல்லும் NH – 67 (நாகை – கூடலூர்) தேசிய நெடுஞ்சாலையில் இயல்புக்கு மீறிய வாகன இறைச்சல், பல்வேறு வகையான ஹாரன் சப்தங்கள் என இயல்புக்கு மீறின ஏதோ ஒரு நிகழ்வின் பின்விளைவு என அச்சமூட்டும் அதிர்வுகள் பரவி, மனதுக்குள் ஏதோ கிலி ஏற்ப்படுத்தியது. அங்கிருந்தவர்கள் பலரும் சாலை நோக்கி விறைந்தோம். அங்கு கண்ட காட்சிகள் பலருக்கும் கலவர பீதியை கண்முன் கொண்டு வந்தது.

இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், நான்கு சக்கர வாகனங்கள், வேன்கள், லாரிகள் என சகட்டுமேனிக்கு சீறிப் பாய்ந்து கொண்டிருந்தது, அந்த சாலையில் பயணித்த பலர் முகங்களில் உயிர் பயம் உச்சத்தில் இருந்தது நிஜம். அணைக்கப்படாத முகப்பு விளக்குகள், ஆயில் டேங்கர் மேல் மூடியை கட்டிக் கொண்டு தொங்கிக் கொண்டே ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் மிரட்சி மனிதர்கள், நைட்டி பெண்கள் மற்றும் குளித்துக் கொண்டிருந்த ஈரத் துணியுடன் வெட்கம் துறந்து பெண்கள் தோளில் துண்டைப் போர்த்திக்கொண்டு டூவீலரில் பயணித்த காட்சிகள், ‘வேற்று கிரகவாசிகள், காட்ஸில்லா, டிரெக்ஸ் டைனேசர்கள்’ போன்றவற்றை கண்டு மிரண்டு ஓடும் மக்கள் கூட்டம் மிகுந்த ஹாலிவுட் பட காட்சி அமைப்புகளுக்கு கொஞ்சமும் குறைவில்லாததாய்தான் இருந்தது அன்று.

“கடல் பொங்கி வந்துகிட்டே இருக்கு, யாரும் இங்க நிக்காதீங்க, ஒடுங்க.. ஓடுங்க..” – என வாகனத்தில் பயணித்தவர்கள் பலரின் கூக்குரல்கள், பார்ப்பவர்களின் பயத்துக்கு பட்டுக் கம்பளம் விரித்தது. இத்தனைக்கும் நாங்கள் இருந்த பகுதியிலிருந்து நாகப்பட்டினம் கடற்கரை 10 கி.மீ. தூரத்தில் இருந்தது. நான் மட்டுமல்ல, அங்கிருந்த பலரும் அச்சத்தில் இங்கிருக்காமல் திருவாரூர் நோக்கி இடம் பெயர்வதே நல்லது என எண்ணினர், நான் என் இல்லம் நோக்கி விரைந்தேன்.

“அம்மா, அம்மா.. கடல் பொங்கி வருதாம் சீக்கிரம் புறப்படும்மா, திருவாரூர் சித்தப்பா வீட்டுக்கு போயிடலாம்..” என பதற்றத்துடன் அம்மாவை விரைவு படுத்தினேன். அப்பொழுது எனக்கு மகள் பிறந்து எட்டு மாதங்க‍ளே ஆகியிருந்தது, மனைவியையும் விரைவு படுத்தினேன், அம்மா புறப்பட விருப்பாமல் மறுத்துவிட்டார். அம்மாவின் வற்புறுத்தலில் மனைவி – குழந்தையுடன் நான் திருவாருர் செல்ல புறப்பட்டு சாலைக்கு வந்தேன், அதற்குள் பேருந்து சேவைகள் முற்றிலுமாய் நிறுத்தப்பட்டிருந்தது. அப்பொழுது என்னிடம் டூவீலர் இல்லாததால் பொது போக்குவரத்தை மட்டுமே நம்ப வேண்டிய நிர்பந்தம்.

சாலை மார்க்கமாகவே நடந்தோம் பக்கத்து டவுன் கீழ்வேளூர் நோக்கி, எங்களைப் போலவே பலரும். அங்கோ எங்களுக்கு முன்னரே பெருங்கூட்டம் திரண்டிருந்தது, எங்கும் பயணிக்க முடியாத கையறுநிலை எங்களுக்கு. கட்டுக்கடங்காத வாகன நெரிசலில், மகளை தோளில் சுமந்து சாலையில் பயணிக்கவும் தயக்கம். சற்றுநேர இடைவெளியில் இரண்டு பேருந்துகள் படியில் போலீஸ் பாதுகாப்புடன் ஊர்ந்து வந்தது, யாரையும் வண்டியில் ஏற்ற அனுமதிக்கவில்லை. உள்ளே எட்டிப் பார்த்தால், ஆழிப்பேரலையில் அகப்பட்டு உயிர் துறந்த பிணங்கள் அடுக்கப்பட்டிருந்தது. நாகை மருத்துவமனையில் இடமின்மையால் திருவாரூர் மருத்துவமனைக்கு இடம் பெயர்ந்த பிணங்கள் அது என்ற செய்தி பின்னர் புரிந்தது.

வேறு வழியின்றி மீண்டும் பயத்துடனேயே கிராமத்திற்கு திரும்பினோம். சுனாமி பற்றிய புரிதல் இல்லாத சூழ்நிலை அது, அதனாலேயே அச்சம் ஆட்கொண்டு புலம்பெயர பலரும் எத்தனித்தோம். பின்னர் NDTV News -லும், Sun TV Scroll செய்திகளும் புரிதல்களை அதிகப்படுத்தியது. மடை திறந்த வெள்ளமாய் மரண எண்ணிக்கை ஆதிகரித்துக் கொண்டே சென்றது. அதுவும் கிருஸ்துமஸ்க்கு அடுத்த நாள் என்பதால் நாகையில் மட்டுமல்ல, வேளாங்கண்ணி வந்த பல வெளி மாநில மக்கள் கணக்கில் வராமலேயே ஜலசமாதி ஆகியிருந்தார்கள். நிகழ்வு நடந்த அச்சம் அகன்று, அடுத்த நாள் (வீட்டில் யாருக்கும் தெரியப்படுத்தாமல்) நாகை சென்று வர சைக்கிளில் புறப்பட்டேன், அப்பொழுதும் பொது போக்குவரத்து துவங்கியிருக்கவில்லை.

நாகை மீன்பிடி இறங்குதளத்தில் உள்ள உயர் மட்ட பாலத்தில் நான் கண்ட காட்சிகள் யுத்த களத்தின் உச்சத்தில் இருந்தது. அதுவரை மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவிய பல நூறு படகுகள் ஒன்றுக்கும் உதவாமல் குப்பைக் கூழமாய் நொறுங்கி, சிதைந்து, ஒன்றின் மேல் ஒன்றாய் சொருகிக் கிடந்தது கொடூரத்தின் உச்சம். அச்சத்தில் நான் சைக்கிளை நிறுத்தி பூட்டிவிட்டு தட்டுத்தடுமாறி சிதறிக் கிடந்த படகுகளில் கால் வைத்து பாலத்துக்கு கீழே நடந்தேன், எங்கும் துர்நாற்றம் என் மூக்கை மூட வைத்தது.

இடிபாடுகளுக்கிடையிலிருந்து நால்வர் உப்பு நீரில் இறந்து மிதந்து கொண்டிருந்த நடுத்தர வயது ஆண் பிணத்தை தூளிபோல அமைந்த துணியில் கிடத்தித் தூக்கி வந்தார்கள், துர்நாற்றம் குடலை புரட்டியது. விடாமல் துரத்திய விதியின் விளையாட்டில் அநாதையாக்கப்பட்ட ஒரு வயதான மூதாட்டி விரக்தியின் உச்சத்தில் ஈனஸ்வரத்தில் முனகி அழுவதற்கு கூட ஜீவனின்றி அரற்றிக் கொண்டிருந்தாள்.

“ஏ கெளவி, தள்ளிப் போ. இங்க ஒக்காந்து ஏ(ன்) ஒப்பாரி வச்சிகிட்டு இருக்க, இது ஒம் புள்ள இல்ல. வாழ வேண்டிய மக(ன்), மருமொவ, பேரப் புள்ளைங்கன்னு எல்லாத்தையும் வாரிக் கொடுத்துட்டு, நீ மட்டும் இங்க இருந்து என்ன சாதிக்கப்போற..” – என்று விரக்தியில் விளித்த பிணம் தூக்கிச் சென்ற மீனவரின் வாயிலிருந்து அன்று புறப்பட்ட வார்த்தைகளே போதும், நிமிடங்களில் நிர்கதியாக்கி விட்டுச்சென்ற சுனாமி பேரலைகளுக்குப் பின், அபலைகளாய் தவித்த அன்றைய மீனவ சொந்தங்களின் மீளாத வலிகள் நிறைந்த வாழ்வின் பக்கங்களை புரிந்து கொள்வதற்கு..

 

  • சதா. செந்தில்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!