94views
விமர்சனம் : தயானி தாயுமானவன்
நீ கண்ணீர் துளிகளின் கிரீடம் அணிந்து புன்னகை என்னும் அரியணையில்
அமர்ந்திருக்கிறாய்
– கவிக்கோ அப்துல் ரகுமான்
என் பயணங்களை செதுக்க தேய்கின்றன பாதங்கள். ___நடந்து நடந்து ஓய்ந்தது இந்தப் பாதங்கள்
சமையலறைக்கும் சாப்பிடும் கூடத்திற்கும் ஏற முடியாதபடிக்கட்டுகளிலும் ஏறுகிறேன் மண்சுமக்க
அழைக்கும் போதெல்லாம் ஓடோடி வந்தப்பின் தேய்ந்த பாதங்கள் தான் என் பயணங்களை செதுக்குகின்றன என்பது பெண்களுக்கான பொது மொழியை இத்தனை இரத்தினச் சுருக்கமாக
நமக்குத்தருகிறார் சுசித்ரா செல்லப்பன் அவர்கள்.
அவள்
உள்ளாடையை
எழுதுகிறான்
உச்சி குளிர்கிறார்கள்
அவன் மீசையை
எழுதுகிறாள்
உளவு பார்க்கிறார்கள்
என்ற கவிதையில்
பெண் என்பவள் இரண்டாம் பட்சம் வாய்திறவாத வேலைக்காரி எல்லாம் மீசைகளின் அதிகாரத் தொனியில் வாழ்வைத் தொலைத்தவள், எப்பொழுதும் கண்காணிப்பில் , எல்லை மீறாத வட்டத்தில் வாழ வேண்டியவள், பெண் என்பவள் போகத்தின் முதல், என்பதெல்லாம் இனி அழிந்தொழியும்.
பூவே… மானே ….தேனே நிலவே….என்பதற்கு மட்டும் பெண் மயங்குபவள் அல்ல ரெயிலும் ஓட்டுவாள், வீணையும் மீட்டுவாள்.
பெண்ணின் அளப்பறிய சக்தியை அறியாத மூடர் அடக்குமுறையின் சித்தாந்தங்களில் அடையாளப் பொருளாக இனி இல்லை.
வேண்டிய கல்வியை வெளிநாடும் சென்று படிப்பாள் உணவும் சமைப்பாள் ஆண் என்பவன் புரிதலோடு இருந்தால் அந்த மீசைக்கு அர்த்தம் உண்டு இல்லையேல் அதுவெறும் தோற்றப் பிழைதான்.
எரிகின்ற நினைவுகளில் சிரிக்கின்றோம் அவரவர் ஞாபக வெளிச்சத்தில் கவிதையாக
என்ற இந்த வரிகள் வேகமான வாழ்வில் வேறு வேறு திசை சென்றுவிட்டோம் . நினைவுகளை சமைத்து வாழும் ஞாபக வெளிச்சத்தில் நீயும் நானும் சிரிக்கின்றோம் என்பது இணை சேர இயலாத வாழ்விலும் பெற்றதை தக்க வைக்கும் முயற்சியில் வாழ்ந்து தீர்க்கும் வாழ்வில் …
நாமே
யாரோ போல
நினைவுகள்
என்பது பெண்ணின் வாழ்வு செம்புலப் பெயநீர்வாழ்வு.
கரை எங்கே?
நதியெங்கே?
கானல்நீர் போல் கடப்பது நாம் தான் என்பதை
மூன்று வரிகளில் பொருத்தி விட்டார் காதலின் வலியை.
மதுக்கிண்ணத்தில் அவன்
அவள் கன்னத்தில்
வழிகிறது வாழ்க்கை
இன்றைய நவீன யுகத்தில் வீட்டுக்கு வராத அவனின் சம்பளம், வீட்டுக்குவராத அவனை தேடித்திரியும் குழந்தைகள், இரவுகள் எல்லாம் சண்டைகளில் கழியும் வாழ்வு, தனித்து விடப்பட்ட வாழ்வு, வேலைக்குச் சென்றாவது காப்பற்றப்படும் குழந்தைகள் அவளின் கனவு என்றோ தகர்ந்து விட்டது. மீதிவாழ்வும் கண்ணீரில் . திருமணக் கனவில் வாழ்வில் நுழைந்து இலையுதிர் கால வனமொன்றில் தனித்த குயிலாக தன்பாடலை இசைக்கும் குயில் அவள்.
பிறப்பில் பிழையில்லை
துளையிடுவதில் வஞ்சனை
பரிதவிக்கிறது
குழலாகா மூங்கில்.
கடைக்கு வருபவருக்கெல்லாம் மாங்கல்யம் எடுத்துத் தரும் அந்த கை ராசிக்காரிக்குத்தான் ஒரு
இராஜகுமாரன் வரவில்லை. சீர் செனத்தி சேர்க்கவே தன் மொத்த ஆயுளைத்தொலைத்தவள்
அதோ… அவள் முதிர்கன்னியாகவே வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறாள். பணத்தைப்பார்ப்பவர் மனதைப் பார்ப்பதில்லை. வெளித் தோற்றத்தைப்பார்ப்பவர் குணத்தைப்பார்ப்பதில்லை
செல்வத்தோடு பிறக்காதது மூங்கிலின் தவறா?
வலிக்காமல் நானும் சளைக்காமல் நீயும் மகிழ்ச்சியாய் வளைகிறோம் காதலில் .
காதலியின் கடைக்கண் பார்வை உலகத்தையே வளைத்து விடும் வில்லாக அவளுக்காக ,
இமயமலையையும் சிறு குளிகையாக்கி விடும். பேரன்பில் நீந்தும் உள்ளங்களுக்கு காதல் என்பது வெறும் வார்த்தையல்ல
இப்பிறவியின் வரம் .
எல்லோருக்கும் விடுமுறை
எங்களுக்கு என்றும் இல்லை மேதினம்.
பக்கம்-100
உண்மைதான்
அவள் அலுவலகத்தில்
உயர் அதிகாரி,
வீட்டிலோ ஒரு செவிலித்தாய்,
வயதான பெற்றோரை கவனிப்பதில் அவள் சிறந்த தாதி .
அனைத்தும் அறிந்த மருத்துவச்சி வெளியே செல்லும் கணவனுக்கு உண்ணும் உணவும் உடையும் அவளே.
பிள்ளைகளை வழிநடத்தும் தோள் தாங்கும் தெய்வமும் அவள். விடுமுறையும் …..…………அவளுடல் ஓய்வறியவில்லை வீட்டின் ருசியே அவளது ருசி.
எல்லோரும் உண்டருசி அவளின் பசியாறும் தருணம். இரவும் அவள் அழும் குழந்தையின் தொட்டிலாக ஓய்வென்பது அவள் ஓயும் வரையில்லை என்பதை அழகான கவிதைப் புத்தகத்தின் தலைப்பாக மிளிருகிறது.
அஞ்சறைப்பெட்டிக்குள் அடங்கிப் போனது சமையலறைக்குள் சாம்பலானது அவள் கனவுகள் .
என்றவரிகளில் அவள் தியாகம் செய்தது தன் எதிர்காலத்தை தன் கனவுகளை தன் குடும்பத்திடம் தேடி அடை காக்கும் தாய். என பலமுகம் கொண்ட பெண் ஏங்குவதெல்லாம் ஓய்வுக்கும் உண்மையான புரிதலான காதலுக்கும் தான்.
உடைந்து கொண்டே தான் இருக்கின்றன வளையல்கள் சத்தம் இல்லாமல் சடங்குகள் .
சம்பிரதாயங்களின் அடையாளமாக மாற்றப்பட்டது பெண்தான் . சடங்குகளே அவளை வேலியிட்டு அடைக்கும் முள்வேலி .
மண்ணும் பெண்ணும் உங்கள் உரிமையல்ல. அவளுக்கும் மனமுண்டு அவளுக்கும் கனவுண்டு அது தடைகளை உடைக்கும் கல்வி கல்வியினால் பெண் வானத்தை அளப்பாள் கொண்டவனின் மனதினையும் அளப்பாள் அவள் நாடாளவும் வீடாளவும் துணிந்தவள் துயர்களுக்கு தோள் தருவாள் உங்கள் வீட்டு கிளிகளை தங்கக் கூண்டில் அடைத்து விட்டு தெருவந்த கிளியை இறக்கையை பிய்த்துப் போட நினைத்தால் அவள் உங்கள் சமர். பொது வெளியில் வந்துவிட்டதால் அவள் ஆணாவாள் . ரௌத்திரம் அறிந்தவள் காதலின் நிறம் அறிவாள் , பொய்முகம் இங்கே கிழிக்கப்படும். பெண் எப்போதும் போல , சாதுமிரண்டால் நாடும் தாங்காது வீடும் தாங்காது.
பெண்ணே நமது ஆதித் தாய் என்பதை அழகுற ஆணித்தரமான கவிதைகளால் வடித்த சுசித்ரா செல்லப்பன் அவர்களுக்கு வாழ்த்துகளும் பேரன்பும் .
வெல்க தமிழ், வாழ்க பெண்மை.
பதிப்பகம் – நிமிர் புத்தகப் பட்டறை
சிறப்பான வடிவமைப்பும் அழகான எனது ஓவியங்களும் .
நூல் மதிப்பு -₹150
add a comment






