தமிழகம்

அரசு டவுன் பஸ்சில் முதல் பெண் கண்டக்டர்! நெல்லையில் சாதனை படைக்கும் சிங்கப்பெண்!!

81views
முனைவர் என்.பத்ரி

‘ஆணுக்குப் பெண் நிகர்’ என்ற மகாகவி பாரதியாரின் கனவை மெய்ப்பிக்கும் வகையில், அனைத்து துறைகளிலும் பெண்கள் தற்காலத்தில் சாதனை படைத்து வருகின்றனர். கல்வி, மருத்துவம், விஞ்ஞானம், விண்வெளி அரசியல் போன்ற அனைத்துத் துறைகளிலும் இவர்கள் தொடர்ந்து தடம் பதித்துவருகிறார்கள்.

இந்நிலையில், நெல்லை மாவட்டத்தில் அரசு பஸ்சில் முதல் பெண் நடத்துனராக பகவதி (38) என்பவர் சமீபத்தில் பணியில் சேர்ந்து சிறப்பாக பணியாற்றி வருகிறார். இவர், நெல்லை டவுனில் இருந்து ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு செல்லும் டவுன் பஸ்சில் நடத்துனராக உள்ளார்.பேருந்தில் சுறுசுறுப்பாக பணியாற்றும் இவர்,பயணிகளிடம் கனிவாக பேசிஅனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.

இவரது சொந்த ஊர் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே துரைச்சாமியாபுரம் ஆகும்.இவருடைய கணவர் வைரமுத்து, லாரி டிரைவராக உள்ளார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள், கோவை மாவட்டம் வால்பாறை அரசு கல்லூரியில் பி.பி.ஏ.யும், 2-வது மகள் பொள்ளாச்சி மாவட்டம் கோத்தனூரில் நர்சிங் படிப்பும் படித்து வருகிறார்கள்.பகவதி பிளஸ்-2 வரை படித்துள்ளார்.

சிறு வயதிலே இவரது தந்தை இறந்ததால், இவரால் உயர்கல்வி படிக்க முடியவில்லை. இவர் 8-ம் வகுப்பு படித்தபோது காரை இயக்க முற்பட்டதில் பின்பக்கமாக நகர்ந்ததால் விபத்தில் சிக்கியது. இருப்பினும் வாகனங்களை ஓட்ட கற்றுக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்த இவர், வாகனங்களை இயக்க கடும் சிரமத்துக்கு இடையிலும் படிப்படியாக கற்றுக்கொண்டார்.தற்போது இவர் நன்றாக பயிற்சி பெற்று, கனரக வாகனங்களை ஓட்டவும், நடத்துனர் பணிக்கும் சேர்த்து உரிமம் பெற்றுள்ளார்.

பெண்கள் எந்த துறையில் இருந்தாலும், அதனை நேசித்து பணியாற்றினால் சாதனை படைக்கலாம் என்பதற்கு இவர் சிறந்த உதாரணமாகும்.தனது கண்டக்டர் வேலையை மிகவும் நேசித்து செய்யும் இவர், இன்னும் சிறப்பாக பணியாற்ற விரும்புகிறார். அரசு தன்னை பணி நிரந்தரம் செய்தால், தன்னைப் போன்று பல பெண்களும் ஆர்வமுடன் இந்த பணிக்கு வருவார்கள் என அவர் தன்னம்பிக்கையுடன் கூறுகிறார்.அன்னார் தம் தொழில் வாழ்வில் திறம்பட செயல்பட்டு வெற்றிக் காண நாமும் வாழ்த்து கூறுவோமே.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!