79views
நேமி புரொடக்ஷன்ஸ் சார்பில் டாக்டர் அமர் ராமச்சந்திரன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘தாய்நிலம்’. இப்படத்தை அபிலாஷ் ஜி.தேவன் இயக்கியுள்ளார். தேசிய விருது பெற்ற பிரபல மலையாள இசையமைப்பாளர் திரு அவுசப்பச்சன் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். தமிழில் இவர் இசையமைக்கும் முதல் படம் இது.
அப்பா, மகள் பாசப் பின்னணியில் இலங்கைப் போரின் கோர தாண்டவத்தை எடுத்துக்கூறும் படமாக உருவாகி இருக்கும் இத்திரைப்படத்தில் கவிஞர் தாமரை எழுதி, வர்ஷா ரஞ்சித் பாடியுள்ள ‘ஆகாயம் மேலே’ என்கிற பாடல் ஈழத் தமிழ் மக்களின் இழப்புகளையும் வலியையும் அனாதையாகத் தவிக்கும் மக்களின் வாழ்க்கையையும் பற்றி கூறும் விதத்தில் அமைந்திருக்கிறது.
‘தாய்நிலம் திரைப்படம்’ மாஸ்கோ, டோராண்டோ, ஸ்வீடன், பெங்களூரு இன்டர்நேஷனல், உட்பட 12 சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொள்ள தேர்வு செய்யப்பட்டது. அதில் சிறந்த திரைப்படம், சிறந்த புதுமுக இயக்குநர், சிறந்த இசை, சிறந்த ஒளிப்பதிவு உட்பட ஒன்பது விருதுகளை பெற்றது.
இந்த நிலையில் சமீபத்தில் தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட திரைப்பட விருதுகளில் 2020 ஆம் ஆண்டிற்கான விருதுகள் பட்டியலில் இந்த ‘ஆகாயம் மேலே’ என்கிற பாடலை எழுதியதற்காக கவிஞர் தாமரைக்கு சிறந்த பாடலாசிரியர் விருதும், இந்தப் பாடலை பாடிய வர்ஷா ரஞ்சித்துக்கு சிறந்த பின்னணி பாடகிக்கான விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.






