கட்டுரை

நினைவின் நதிக்கரையில்….

1.41Kviews
சந்திப்புகள் : 1
இன்னமும் நாங்கள் அப்படியே தான் இருக்கிறோம் . 90களில் பார்த்தது போல். உருவங்களில் பெரிதாக மாற்றம் இல்லை என்றாலும் காலத்தின் அடையாளங்களை சுமக்காமல் இல்லை நாங்கள்.
ஒரு சிலருக்கு தலையில் கொஞ்சம் முடி இழப்பு. அந்த வரிசையில் நானும் பரசுவும்.. 50 வயது கடந்து அனுபவ பறவையாக இந்த வாழ்க்கையை சுமந்து கொண்டு பறந்துக் கொண்டிருக்கிறோம் அவரவர் திசைகளில்..
முன்னைவிட குண்டாகி விட்டிருந்தான் பிரபா. சரவணனை நான் முதன்முதலில் புகைப்படத்தில் பார்த்த போது ‘யாருடா இவரு. அண்ணாதுரைப்போல இருக்காரு…’ ரவியிடம் கேட்டதை சீனு பங்கமாய் கலாய்த்தான் என்னை.
‘அகர்வால்ல எனக்கு தெரிந்த பொண்ணு டாக்டரா இருக்காங்க. நான் சொல்றேன் நீ வேணா போய் பாக்கரீயா..’ நானும் வந்ததும் வராததுமாக அவன் இப்படி சொன்னதும், சொல்லு மச்சி…என்றேன்.
‘இவன போய் அண்ணாதுரைன்னு சொன்னீயே…அதுக்குதான் கேக்குறேன் …’ அப்போதுதான் புரிந்தது பயபுள்ள என்னையும் சரவணனையும் கலாய்க்கும் அதிபுத்திசாலித்தனத்தை.
அப்படியே அவன் அப்பாவைப் போல இருப்பதாக நான் சொன்னதும் கொஞ்சம் நெகிழ்ந்தான். பள்ளிப்பருவத்தில் மற்றவர்களைவிட அவன் வீட்டிற்கு அதிகம் சென்றது நான் மட்டும் தான். குடும்பமே பழக்கம். அதே போல என் வீடும் என் தங்கையும் அம்மாவும் அவனுக்கு அத்துப்படி.
திருசங்கர் எப்போதும் போல சைலன்ட். இத்தனை ஆண்டுகள் ஆனப்பிறகும் மாறாமல் இருப்பதின் ரகசியம் எனக்கு புரிபடவில்லை. நான் மட்டும் அதிகம் பேசுவதாக சொல்லிய நட்பு அந்த பேச்சுதான் என் மூலதனம் என்றும் சொல்லி அங்கீகரித்தில் ஒருகணம் அசந்துதான் போய்விட்டேன்.
மழை நனைத்த பொழுதுகளை போல ஈரம் படர்ந்தது அந்த மாலை நேரத்தில்.
தேநீர் கோப்பைகளில் ஆரம்பமானது எங்கள் உரையாடல். பிரபா தான் தொடங்கி வைத்தான். முதல் ரவுண்டில் நான்,ரவி பிரபா. என்னால் பிரபாவை சேர்த்து அணைத்துக்கொள்ள முடியவில்லை. அன்பிலும் அவன் அப்படிதான். அதீத நேசக்காரர்கள் எப்போதும் அப்படிதான் போல.
வாழ்க்கை பலவிதங்களில் எங்களை கடத்தி வந்திருக்கிறது.
கெரசின் வண்டி ஓட்டி உங்க அப்பா உன்ன வளர்த்தும், பழ வியாபாரம் செஞ்சு உங்கம்மா உன்ன இந்தளவுக்கு கொண்டுவந்ததும் மறக்காம இருக்கறதாலதான் நீங்க இந்த அளவுக்கு வந்திருக்கீங்க….’என்று ரவி என்னையும் பரசுவையும் பார்த்து சொன்னது நினைவில் அம்மா லேசாக வந்துபோனாள்.
காலம் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு இழப்பை சந்திக்க வைத்திருந்தாலும், 35 ஆண்டுகளுக்கு பிறகு இன்று பார்த்த தருணம் அதையெல்லாம் மாற்றி அமைந்துவிட்டது.
பள்ளிக்கூட நாட்களைப் போல அந்த உரையாடல் இல்லை. வெகு இயல்பாக பாசாங்கு இல்லாமல் இருந்ததை என்னால் அனுமானிக்க முடிந்தது.
எங்கள் வகுப்பில் படித்த மூன்று தோழிகளைப் பற்றி நான் தான் ஆரம்பித்தேன். தொடர்பில் இல்லை என்பதாக எல்லோரும் சொல்ல ஆண்களுக்கு சாத்தியமானது பலநேரங்களில் பெண்களுக்கு வாய்க்காமல் போய் விடுகிறது என்று தான் எண்ண தோன்றுகிறது. விரைவில் சந்திப்போம் என்கிற நம்பிக்கை துளிர்விட்டது.
எல்லாம் பேசி விடைபெறும் நேரத்தில் ‘அப்புறம் உங் கூட டெய்லியும் ஸ்கூல் வரப்ப ரெண்டு மூணு பொண்ணுங்க வருவாங்களே அவங்க பேரு என்ன….’ நான் தொடங்கியது தான் தாமதம். வெட்கத்தில் பிரபா நெளிய, ‘டேய் மச்சி உன் பொண்ணு பெரு என்ன … ‘ சரவணனை பார்த்து சீனு கேட்க ‘ நீ சொல்லு’ பதிலுக்கு அவன் கேட்க இப்படியெல்லாம் வரும்னு தெரிஞ்சுதான் என் பொண்ணு பேரு நம்ம செட்டிலேயே இல்லாத பேரா வச்சிருக்கேன்…’
‘ அப்ப எங்களுக்கு தெரியாம யாருடா அது…’ ரவி சேர்ந்துகொள்ள சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து தேவதைகள் தான் எனக்கு ஞாபகம் வந்தது.
அஞ்சலட்டைகளில் வாழ்ந்த எங்களை போன்றவர்களுக்கு இந்த இணையம் ஒரு வரம் தான்.
ரவி இந்நேரம் வாட்ஸ் அப்பில் தம்சப் ஸ்மைலியுடன் ஏதோ எழுத முற்பட்டுக் கொண்டிருக்கலாம்.
நான் இதை இணையத்தில் தட்டச்சு செய்துக் கொண்டிருக்கும் நேரத்தில் தொடர்பு எல்லையை தாண்டி இருக்கும் ஏதோ ஒரு நட்பு எங்களையும் சந்திக்க என்ன செய்யலாம் என்று யோசனை செய்துக் கொண்டிருக்கலாம்.
காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. இந்த சந்திப்பும் அப்படித்தான்.
– நாகா

1 Comment

  1. உண்மை நண்பா.உறவுகளில் பிரிவு வரும்.ஆனால் நட்பில் என்றும் இல்லை பிரிவு என்பதை நம் சந்திப்பில் முலம் நிருப்பித்து உள்ளோம்

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!