215views
அத்தாவுல்லா
நாகர்கோவில்
சுதந்திரம் என்பது
அடிமைச் சாசனம் விரும்பாத
ஆண்மையாளருக்கான அரியாசனம்…
மன்னிப்பு மடல்
எழுதி நீட்டாத
மானஸ்தர்களின்
மரியாதை கௌரவம்…
கைபிடித்தும் கால் பிடித்தும்
நக்கியும் முக்கியும்
தங்களை இழக்கத்
தயாராக இல்லாத
கண்ணியவான்களின் கவுரவ ஆடை…
அது நீண்ட ஆடைகளையும்
கோவணங்கள் ஆக்கிய
அரையாடை தவம்…
கோடீஸ்வரர்களையும்
குடிசைக்குள் கொண்டு
நிறுத்திய தர்மாஸ்திரம்…
எச்சங்களையும் கறைகளையும்
அடித்துத் துவைத்து
வெளுக்க வைக்கும் ஆயுதப் பட்டறை…
மக்களின் நலனுக்காக
தங்கள் நலங்களை
சிறைக்கம்பிகளுக்குள்
சிறை வைத்து விடுகின்ற
சுயமரியாதை….
அது நீதி நேர்மைகளில்
நிமிரும்…
அராஜகங்களில்
பழுக்கும்…
ஆயிரங்காலமானாலும்
நீறிப்போகாமலும்
நீர்த்துப்போகாமலும்
பூகம்பமாய் வெடிக்கும்..
அது புரட்சியின் வித்து…
நல்லோருக்கெல்லாம்
தாய்மையின் சொத்து…
தாய் நாடாக நினைப்பவருக்கு
என்றும் சுதந்திரம்தான்
உயிர் மூச்சு…
தாய் நாட்டை பேய்க்காடாக
மாற்ற விரும்பும்
பிணந்திண்ணி
நிரமாமிசப் பட்சணிகளுக்கு
அது இல்லை….
அது பத்து லட்சத்தில்
நாட்டு மக்களிடம்
பகட்டாடை கேட்காது…
கபோதிகளின்
கமண்டலங்களுக்குள்
விமானங்களை சுற்றிவர வைக்காது…
ஏனெனில்
சுதந்திரம் என்பது
ஆன்மாவின் ராகம்…
ஆன்மாவின் ராகம் அ
கோரிகளுக்கு இல்லை…
அதை அழகான முறையில்
பேசும் இந்தப்படம்…
இதுதான் ஒன்று பட்ட
இந்திய தேசத்தின்
ஆரம்ப கால வரைபடம்…
அது… நினைவுறுத்தும்
சுதந்திர போராட்டக் களம்…
இப்படித்தான் இருக்கும்
மலர்களின் சோலை…
இதில் ஒரே நிறம் என்பது
பொது மக்கள் உள்ளங்களில்
வேல் பாய்ச்சும் வேலை….
கண்ணனின் ராச்சியத்தில்
உய்யலாலா
காக்கைச் சிறகினிலே
நந்தலாலா
காந்தியின் எண்ணங்களிலே
ராம லீலா…
அது அளவற்ற அருளும்
நிகரற்ற அன்பும் உடையோனை
மறக்காது…
ஏழையின் சிரிப்பில்
இறைவனைக் காணும்
சமாதானத் தோழமை
நேருவை வெறுக்காது…
முக்கடல் போல்
மூன்று புறம் தான் என்றாலும்
இந்தியர் ஒன்றெனும்
ஒரே முகம்தான்…
அவரவர் மார்க்கம்
அவரவருக்கு எனும்
ஆன்மீக சுகம்தான்…
அது…ஒற்றுமை எனும்
மெல்லிழைகளின்
அன்பாலயம்…
சாதித்தியம் வேர் பிடிக்காத
சமத்துவ ஆலயம்…
அதைத் தகர்க்க நினைப்பதோ
பாசிச வம்பாயுதம்…
எச்சரிக்கையாக இருந்து
இந்த சுதந்திரத்தைக் காப்போம்..
அதை நம்மிடம் இருந்து
பிடுங்க நினைக்கும்
சதிகாரர்களை மாய்ப்போம்…
அனைவருக்கும்
சுதந்திர தின வாழ்த்துக்கள்…
add a comment






