119views
அத்தாவுல்லா
நாகர்கோவில்
அன்றும் இன்றும்
ஆரியத்தின் அச்சம்….
போராட்டங்கள் எல்லாம்
அவன் மோதிப் பார்த்துத்
துப்பிவிட்ட எச்சம்…
இலக்கியத்திலும் அரசியலிலும்
இருந்தவரை அவர்தான் உச்சம்…
தமிழ் நாட்டில்
இருமொழிக் கொள்கை
ஏற்றிய தீபம்…
அதனால்தான்
அவர் இறந்தும் தீரவில்லை
ஆரியத்தின் கோபம்
இருகுவளை தகர்த்த
திருக்குவளையின்
தமிழ்க்குவளை…
குவளையில் ஊற்றி தெருத்தோழர்களையும்
பருக வைத்தது
செம்மொழி முத்தமிழை…
அவன் எழுதிய சங்கத்தமிழும்
குறளோவியமும் என்றும்
உரைத்துக் கொண்டே
இருக்கும் அவன் பெயரை…
இவருக்கு எதிராக
இறுதிவரை
விரித்துக்கொண்டே இருந்தது
ஆரியம் தன் சதிவலை…
தன் பகுத்தறிவுத் துணை கொண்டு
முறித்தெறிந்தான்
அந்தத் தடை முளைகளை…
ஒடுக்கப்பட்டவர்கள் வாழ்வின்
உதயசூரியன்…
சேரி பட்டியல் இன
தாழ்த்தப்பட்ட
அநீதி இழைக்கப்பட்டவர்க்கும்
அவன்தான் இதய சூரியன்
பகுத்தறிவும்
சுயமரியாதையுமே
அவன் கையிருப்பு…
திரைத் துறையிலும்
அரசியல் துறையிலும்
ஒரு சேர வென்றவன்..
தமிழ்நாட்டில் இந்திக்கு
இம்மியும் இடமளிக்காமல்
தமிழ் தமிழ் என்றே
இறுதிவரை நின்றவன்.,
இன்றைய தமிழக எழுச்சிக்கு
அன்றே விதைத்துச் சென்றவன்….
இறந்த பிறகும்
நீதிமன்ற படிக்கட்டு ஏறி
இடம் பெற்று வென்றவன்
மறைந்தும் மறையாத வரலாறு…
இறந்தும் அழிக்க முடியாது
அவன் ஓடவிட்ட தமிழாறு…
பெரியாரின் கைத்தடியாகவும்
அண்ணாவின் தமிழ்ப்பொடியாகவும்
இருந்து
கோட்டையில் கொடி ஏற்றியவன்…
தமிழ் வரலாற்றையே
கொஞ்சம் மாற்றியவன்…
தன்னை தூற்றியவர்கள்
வாயாலேயே போற்றும்படி
மாலை வாங்கியவன்…
தன் கடமை முடித்த
பிறகே கண்ணயர்ந்து தூங்கியவன்…
பொது வாழ்வில்
எண்பது ஆண்டுகள்
இமாலயப் புரட்சி..
இருந்தவரை
வடவரின் கண்களில்
போட்டான் மிரட்சி…
எதிரிகளின்
சிம்ம சொப்பனம்…
உடன் பிறப்புகள்
ஏழை எளியவரின் அன்பும் ஆதரவுமே
அவன் விரும்பும்
பாராட்டுப் பத்திரம்
ஆண்ட காலத்தில்
ஆகாயச்சூரியனை
சேரிப்புறத்துக்கும்
திருப்பிய திருப்புமுனை…
அன்றெழுதிய
பேனா மையால் இன்று வரை
சிந்திக் கொண்டே இருக்கும்
திராவிட நீர்ச்சுனை…
ஏழாவது ஆண்டு நினைவு நாள் கவிதை…
add a comment





