தமிழகம்

“தமிழ் நாவலாசிரியர்களில் தனித்த சிறப்புக்குரியவர் வெண்ணிலா” மேனாள் நீதிபதி பிரதிபா ஸ்ரீதேவன் புகழாரம்

22views
சென்னை ;
மாநிலக் கல்லூரியின் தமிழ்த்துறை மற்றும் சென்னை மாநிலக் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கமும் இணைந்து நடத்திய எழுத்தாளர் அ.வெண்ணிலாவின் படைப்புகள் குறித்த ஒருநாள் பன்னாட்டுக் கருத்தரங்கத்தின் தொடக்க நிகழ்வில், தமிழ் நாவலாசிரியர்களுள் தனித்துவமும் சிறப்புமுடைய எழுத்துக்குச் சொந்தக்காரராக அ.வெண்ணிலா திகழ்கிறார் என்று உயர்நீதி மன்ற மேனாள் நீதிபதி பிரதிபா ஸ்ரீதேவன் புகழாரம் சூட்டினார்.
தமிழ்ப் படைப்புலகில் கவிஞர், கட்டுரையாளர், நாவலாசிரியர், திறனாய்வாளர் என பன்முக அடையாளங்களோடு கடந்த 25 ஆண்டுகளாகத் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பவர் அ.வெண்ணிலா. அவரது கால் நூற்றாண்டுக்கால படைப்புப் பணிகளைப் பாராட்டிக் கவுரவிக்கும் வகையில் ஒருநாள் பன்னாட்டுக் கரங்கினை மாநிலக் கல்லூரியின் தமிழ்த்துறை மற்றும் சென்னை மாநிலக் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கமும் இணைந்து நேற்று மாநிலக் கல்லூரியின் திருவள்ளுவர் அரங்கில் நடத்தின.
இந்நிகழ்விற்கு மாநிலக் கல்லூரி முதல்வர் (கூடுதல் பொறுப்பு) முனைவர் இரா.இராமன் தலைமையேற்றார். தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் க.சேகர் வரவேற்புரையாற்றினார்.
வெண்ணிலாவின் படைப்புகள் மீதான விமர்சனக் கட்டுரைகள் அடங்கிய ‘ஆனந்தத்தின் எல்லையற்ற பொய்கை’ எனும் தொகுப்பு நூலை வெளியிட்டுப் பேசிய உயர்நீதி மன்ற நீதிபதி பிரதிபா ஸ்ரீதேவன் பேசும்போது, “தமிழ் நாவலாசிரியர்கள் சிலரைச் சொல்லுங்கள் எனக் கேட்டால், கல்கி, சாண்டில்யன், கோவி.மணிசேகரன் என ஆண்களின் பெயர்களை மட்டுமே சொல்லிக் கொண்டிருக்கும் நிலையில், எழுத்தாளர் அ.வெண்ணிலா இன்றைக்கு பெயர் சொல்லத்தக்க நாவலாசிரியராகத் தன்னை வெளிப்படுத்தியுள்ளார். அவரது வீச்சான மொழியும், வரலாற்றுத் தரவுகளை ஆர்வத்துடன் தேடித்தரும் முயற்சியும் பாராட்டுக்குரியன. கங்காபுரம், சாலாம்புரி ஆகிய நாவல்களைத் தொடர்ந்து தற்போது எழுதியிருக்கும் ‘நீரதிகாரம்’ நாவலில், முல்லை பேரியாறு அணையைக் கட்டிய ஜான் பென்னிகுக் பற்றி நம் மனதில் ஆழமாகப் பதியும்படி எழுதியுள்ளார்.  அந்த நாவலுக்கும் எனக்கும் ஒரு தொடர்பிருக்கிறது. அந்த அணை கட்டும் பணிக்கு உதவியாக இருந்தவர்களுள் எனது கொள்ளுத் தாத்தாவான இன்ஜினியர் இராமலிங்கமும் ஒருவர். அந்த நாவலை எழுதும்போது அதைக் கண்டறிந்து, என் கொள்ளுத் தாத்தாவின் கையெழுத்தையும் வெண்ணிலா என்னிடம் காட்டி, மகிழ்வோடு பகிர்ந்துகொண்டது எனக்கு பெருமையாக இருந்தது. இந்த ‘நீரதிகாரம்’ நாவலை எழுதியதன் மூலமாகத் தமிழ் நாவலாசிரியர்களில் வெண்ணிலாவின் பெயரும் நிச்சயம் இடம்பெறும். தமிழ் நாவலாசிரியர்களுள் தனித்துவமும் சிறப்புமுடைய எழுத்துக்குச் சொந்தக்காரராக அ.வெண்ணிலா இன்னும் பல சிறப்புகளையும் பெருமைகளையும் பெறுவார்” என்றார்.  தொடக்க நிகழ்வில், சாகித்திய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளரும் மேனாள் இந்திய ஆட்சிப்பணி அதிகாரியுமான டாக்டர் மு.ராஜேந்திரன், தமிழக அரசின் திட்டக்குழு உறுப்பினர் நர்த்தகி நடராஜன், சென்னை உயர்நீதி மன்ற மூத்த வழக்கறிஞர் சேவியர் அருள்ராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.
பன்னாட்டுக் கருத்தரங்கை கவிஞர் மரபின் மைந்தன் முத்தையா தொடங்கிவைத்து உரையாற்றினார்.  பின்னர் நடைபெற்ற படைப்பாய்வரங்கில் வெண்ணிலாவின் நாவல்கள் குறித்து எழுத்தாளர் லட்சுமி சரவணக்குமார், ஆறுமுகத் தமிழன் ஆகியோரும், சிறுகதைகள் குறித்து பத்திரிகையாளர் கவிதா முரளிதரன், ஜா.இராஜகோபாலன் ஆகியோரும், கட்டுரைகள் குறித்து ஜா.தீபாவும், கவிதைகள் குறித்து கவிஞர்கள் வெய்யில், மண்குதிரை ஆகியோரும், பதிப்புப் பணிகள் குறித்து எழுத்தாளர் கடற்கரையும் உரையாற்றினர்.
கருத்தரங்கை நிறைவு செய்து தமிழகத் திட்டக்குழு செயல் துணைத் தலைவர் ஜெ.ஜெயரஞ்சன் உரையாற்றினார். நிறைவாக, எழுத்தாளர் அ.வெண்ணிலா ஏற்புரையாற்றினார். இணைப்பேராசிரியர் முனைவர் சீ.இரகு நன்றியுரையாற்றினார். நிகழ்வினை ஆய்வாளர் இரா.மோகனவசந்தன் தொகுத்து வழங்கினார்.
படக்குறிப்பு:
மாநிலக் கல்லூரி நடத்திய அ.வெண்ணிலாவின் படைப்புகள் குறித்த பன்னாட்டுக் கருத்தரங்கில், அ.வெண்ணிலாவின் படைப்புகள் குறித்த விமர்சனக் கட்டுரைகள் அடங்கிய ‘ஆனந்தத்தின் எல்லையற்ற பொய்கை’ எனும் நூலை உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் வெளியிட்டார் . அருகில் நூலைப் பெற்றுக் கொண்டவர்கள் (இடமிருந்து வலமாக) மாநிலக்கல்லூரி மேனாள் மாணவர் சங்கச் செயலாளர் ஆ.புகழேந்தி, தமிழ்த்துறைப் பேராசிரியர் கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் சீ.இரகு, தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் க.சேகர், கல்லூரிக் கல்வி இணை இயக்குநர்(நிதி) மற்றும் சென்னை மாநிலக் கல்லூரி முதல்வர்(மு.கூ.பொ) மற்றும் கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் இரா.இராமன், ஓய்வு பெற்ற ஆட்சிப் பணி அதிகாரி முனைவர் மு.ராஜேந்திரன் இ.ஆ.ப.,எழுத்தாளர் அ.வெண்ணிலா, மரபின் மைந்தன் முத்தையா , மூத்த வழக்கறிஞர் சேவியர் அருள் ராஜ், ஆய்வாளர் இரா. மோகன வசந்தன் ஆகியோர் உள்ளனர். 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!