டர்ம் புரொடக்ஷன்ஸ் பேனரில் எஸ். உமா மகேஸ்வரி தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ட்ராமா’ திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் கே. பாக்யராஜ் படத்தின் இசையை வெளியிட, படக்குழுவினருடன் நடிகர் ‘டத்தோ’ ராதா ரவி மற்றும் தமிழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி ஆகியோர் இணைந்து பெற்றுக்கொண்டனர்.
அறிமுக இயக்குநர் தம்பிதுரை மாரியப்பன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் விவேக் பிரசன்னா, பூர்ணிமா ரவி, ஆனந்த் நாக், சாந்தினி தமிழரசன், நிழல்கள் ரவி, மாரிமுத்து, பிரதோஷ், வையாபுரி, ரமா, நமோ நாராயணன், பிரதீப் கே. விஜயன், ‘ஸ்மைல்’ செல்வா, மதனகோபால் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அஜித் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவை கவனிக்க. ராஜ் பிரதாப் இசையமைத்திருக்கிறார் . படத்தொகுப்பு பணிகளை முகன்வேல் கையாள, கலை இயக்கத்தை முஜிபுர் ரகுமான் மேற்கொண்டிருக்கிறார். மெடிக்கல் கிரைம் திரில்லராக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஆல்பா 3 என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் வழங்குகிறது.
வரும் 21ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படக்குழுவினருடன் நடிகர் ‘டத்தோ’ ராதா ரவி, இயக்குநர் கே . பாக்யராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி , இயக்குநர்கள் ராகவ் மிர்தாத், வெற்றி, நடிகர் லிங்கா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இயக்குநர் தம்பிதுரை மாரியப்பன் பேசுகையில், ”வாய்ப்புகள் தேடி பல தயாரிப்பாளர்களிடம் கதை சொல்லி இருக்கிறேன். வாய்ப்பு கிடைக்காததால் என்னுடைய நண்பர்களின் ஆதரவுடன் இப்படத்தின் பணியை தொடங்கினேன். அவர்கள் தங்களது பெயரை வெளிப்படுத்த கூடாது என்று கட்டளையிட்டதால்.. தயாரிப்பாளராக என்னுடைய மனைவியின் பெயர் இடம்பெற்றிருக்கிறது. அவர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த திரைப்படத்தை பைலட் மூவியாகத் தான் முதலில் தொடங்கினோம். அது சிறப்பாக வந்தவுடன் திரைப்படமாக உருவாகி இருக்கிறது,” என்றார்.
இசையப்பாளர் ராஜ் பிரதாப் பேசுகையில், ”இங்கு வருகை தந்திருக்கும் சிறப்பு விருந்தினர்களுக்கும், படத்தில் பணியாற்றிய நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இயக்குநர் தம்பிதுரை மாரியப்பனுடன் இணைந்து பணியாற்றியதற்காக மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு அவரிடம் பிடித்தது அவருடைய தன்னம்பிக்கை தான். குறும்படங்கள் இயக்கும் காலகட்டத்தில் இருந்தே அவரை எனக்குத் தெரியும். குறும்படத்தை கூட தரமாக உருவாக்க வேண்டும் என விரும்புவார். யாரிடமும் உதவியாளராக பணியாற்றவில்லை என்றாலும்.. தரமான படைப்புகளை தான் உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் இருந்தது. இது என்னை மிகவும் கவர்ந்தது.
தினமும் மாலை ஏழு மணி அளவில் தான் படத்திற்கான பணிகளை தொடங்குவார். அவருக்காக அனைவரும் இந்த நேரத்தில் இணைந்து பணியாற்றினோம்.
ஒளிப்பதிவாளர் அஜித் ஸ்ரீனிவாசனுக்கும் இது முதல் படம் தான். சிறப்பாக உழைத்திருக்கிறார். இந்தப் படத்தில் நான்கு பாடல்கள் இருக்கின்றன. இரண்டு பாடல்கள் படத்தில் இடம்பெறும். ஏனைய இரண்டு படத்திற்கான ப்ரோமோ பாடல்கள். இந்த பாடலுக்காக ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
படத்தின் பணிகளை நிறைவு செய்துவிட்டு வியாபாரத்திற்காக நிறுவனங்களை தொடர்பு கொண்ட போது அவர்கள் யார் நடிகர் என்பதைத்தான் முதலில் கேட்டார்கள். பின்னர் இந்தப் படத்தை பற்றிய கண்டன்ட்டை நாங்கள் ஃபர்ஸ்ட் லுக்காக வெளியிட்டோம், தொடர்ந்து வீடியோவாக வெளியிட்டோம். அதன் பிறகு தான் இப்படத்திற்கான வணிகம் தொடங்கியது. அதன் பிறகு ஆல்ஃபா 3 என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தை சேர்ந்த இளமாறன் எங்களுடன் இணைந்தார். அவர் இப்படத்தை 21ம் தேதி திரையரங்குகளில் வெளியிடுகிறார்.
‘ட்ராமா’ திரைப்படம் ஒரு ஆந்தாலஜி மூவி. மூன்று கதை, மூன்று களங்கள். இவை அனைத்தும் இன்டர் லிங்க் மூலம் இணைக்கப்பட்டிருக்கும். ரசிகர்களுக்கு இந்த படம் வித்தியாசமான அனுபவத்தை வழங்கும். அனைவரும் திரையரங்கத்திற்கு சென்று பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.
இயக்குநர் ராகவ் மிர்தாத் பேசுகையில், ”சின்ன படங்களுக்கு ஊடகங்கள் தான் முதலில் ஆதரவு அளிக்கும். இந்தத் திரைப்படத்தை என்னுடைய நண்பர் இளமாறன் விநியோகம் செய்கிறார். சினிமா மீது நேசம் கொண்டவர். அவர் மேலும் தொடர்ந்து திரைத்துறையில் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.
வாழ்க்கையில் எந்த துறையாக இருந்தாலும் முதல்முறையாக பணியாற்றும் போது அந்த அனுபவம் ‘ட்ராமா’வாகத்தான் இருக்கும். அதிலும் சினிமாவில் இத்தகைய அனுபவம் அதிகமாக கிடைக்கும். இந்த ட்ராமாவை கண்டு அச்சப்படாமல் தொடர்ந்து பயணித்தால், அந்த ட்ராமா அனுபவம் நிச்சயம் வெற்றியாக மாறும். இந்தத் திரைப்படம் பெரிய வெற்றியை பெற்று இதில் நடித்திருக்கும் நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் சிறந்த எதிர்காலத்தை வழங்க வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன்,” என்றார்.
நடிகை சாந்தினி தமிழரசன் பேசுகையில், ”இந்த நிகழ்வு எனக்கு மிகவும் ஸ்பெஷல் ஆனது. என்னை திரையுலகில் அறிமுகம் செய்த குரு கே. பாக்யராஜ் இங்கு வருகை தந்திருக்கிறார். நான் இத்தனை ஆண்டு காலம் சினிமாவில் இருக்கிறேன் என்றால் அதற்கு அவர் தான் காரணம். அதற்காக இந்த தருணத்திலும் அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இன்று வரை நான் படப்பிடிப்பு தளத்தில் அவர் சொல்லிக் கொடுத்த பயனுள்ள குறிப்புகளை பயன்படுத்தி தான் நடித்து வருகிறேன்.
தம்பிதுரை மாரியப்பன் திறமையான இயக்குநர். இந்த படத்திற்கான கான்செப்ட் மிகவும் பெருந்தன்மையானதாக இருந்தது. அவரிடம் கதையைக் கேட்ட பிறகு அவர் ஒரு வீடியோவை காண்பித்தார். அதுவும் சிறப்பாக இருந்தது. எப்போதும் சிரித்த முகமாகவே அவர் இருப்பார். பாசிட்டிவாகத்தான் பேசிக் கொண்டிருப்பார். அவர் செய்து வரும் வேலையையும் விடாமல் இப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படம் இன்ட்ரஸ்டிங்கான கான்செப்ட் என்பதால் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். மார்ச் 21ம் தேதியன்று அனைவரும் தியேட்டருக்கு வருகை தந்து படத்திற்கு ஆதரவு தாருங்கள்.
சின்ன பட்ஜெட் படமாக இருந்தாலும் தரமானதாக இருக்கும். விவேக் பிரசன்னா உடன் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாதது,” என்றார்.