தமிழகம்

வாழ்வியல் முறைகளை விளக்கும் சுற்றுச்சூழல் கண்காட்சி..ரூபாய் 35,000 பரிசு வென்ற மாணவர்கள்

19views
மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகத்தின் அறிவுறுத்தல்களின் படி, தமிழ் நாடு அரசு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறையின் தேசியப் பசுமைப் படை மாணவர்கள் பங்கேற்ற வாழ்வியல் முறைகளை பின்பற்றுதல் தொடர்பான கண்காட்சி வேப்பேரி பெண்டிங்க் மகளிர் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
சூரிய ஒளிப் பயன்பாடு, இயற்கை விவசாயம், மூலிகைத் தோட்டம், பிளாஸ்டிக் தவிர்ப்பு, மின்னணுக் கழிவுகள் மேலாண்மை, மறுசுழற்சி, நீர் மேலாண்மை, ஆர்கானிக் உணவு, மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான 160 காட்சிப் பொருட்களை 70 அரசு , மாநகராட்சி, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளைச் சார்ந்த 8ஆம் வகுப்பு மாணவர்கள் காட்சிப் படுத்தி விளக்கம் அளித்தனர்.
பள்ளிக் கல்வி துறை உதவி இயக்குநர் திரு.சிவதாஸ் மற்றும் மாவட்ட உயர் அலுவலர்கள் பங்கேற்ற இக்கண்காட்சியில் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் சூழல் கருத்தாளர்கள் தேர்வு செய்த சிறந்த படைப்புகளுக்கு ரூபாய் 35,000 ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டது.
முன்னதாக மிஷன் லைஃப் உறுதிமொழி எடுத்துக் கொண்ட பின்னர் சென்னை மாவட்ட பசுமைப் படை ஒருங்கிணைப்பாளர் தங்கராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அரசு பள்ளி, விருகம்பாக்கம், மாநகராட்சிப் பள்ளி, அரும்பாக்கம் மற்றும் SBOA பள்ளிகள் முதல் மூன்று பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் பெற்றனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் மஞ்சப்பைகள், மூலிகைச் செடிகள் மற்றும் ஆரஞ்சுப் பழங்கள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் சூழல் ஒருங்கிணைப்பாளர் சாந்தி, கடல் சார் விஞ்ஞானி முனைவர் சந்திர சேகரன், வழக்கறிஞர் இசை நிலா, வாழை வனம் காப்பாளர் முனைவர் ஜோ பிரகாஷ் மற்றும் பேராசிரியர்கள் சுமித்ரா, லஷ்மி ஆகியோர் பங்கேற்றனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!