தமிழகம்

‘தமிழ்ப் பல்லவி’ இலக்கிய வட்டத்தின் சார்பில் சிறந்த சிறுவர் இலக்கிய நூலுக்கான முதல் பரிசு கவிஞர் மு.முருகேஷூக்கு வழங்கப்பட்டது

20views
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்திலிருந்து வெளிவரும் ‘தமிழ்ப் பல்லவி’ இதழும், பாவலர் மலரடியானும் இணைந்து நடத்திய சிறந்த சிறுவர் இலக்கிய நூலுக்கான முதல் பரிசு கவிஞர் மு.முருகேஷ் எழுதிய ‘குழந்தைகளுக்குப் பிடித்த நாட்டுப்புறக் கதைகள்’ நூலுக்கு வழங்கப்பட்டது.
நெய்வேலி இலக்கியச் சங்கமும் ‘தமிழ்ப் பல்லவி’ இதழும் இணைந்து நடத்திய இலக்கியப் பரிசளிப்பு விழா கடந்த பிப்ரவரி 14 அன்று நெய்வேலி சிறப்புச் சுரங்க இயந்திர இயக்குநர்கள் நலச் சங்க அரங்கில் நடைபெற்றது. விழாவிற்கு கவிஞர் கரிகாலன் தலைமையேற்றார். விழாவில், கவித்தென்றல் கி.இராமசாமி, எழுத்தாளர்கள் நெய்வேலி பாரதிக்குமார், அன்பாதவன், சாகித்திய அகாதெமி ஆலோசனைக் குழு உறுப்பினர் பூபதி பெரியசாமி, பாவலர் கல்லை மலரடியான், கவிஞர் வெ.தி.சந்திரசேகரன், தமிழ்ப் பல்லவி இதழாசிரியர் பல்லவிகுமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
2024-ஆம் ஆண்டில் வெளியான சிறந்த சிறுவர் இலக்கிய நூலுக்கான முதல் பரிசுக்குத் தேர்வான ‘குழந்தைகளுக்குப் பிடித்த நாட்டுப்புறக் கதைகள்’ நூலினை எழுதிய கவிஞர் மு.முருகேஷூக்கு ரூ.5000/- பரிசுத் தொகையும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டன.
பரிசு பெற்ற எழுத்தாளர்கள் சார்பில் ஏற்புரையாற்றிய கவிஞர் மு.முருகேஷ்பேசும்போது, “இன்றைய தமிழ்ச் சூழலில் ஒரு இதழினை நடத்துவதென்பதே பெரும் பொருளாதார நெருக்கடியைத் தரும் வேலையாகும். அதிலும், ஆண்டுதோறும் தமிழில் வெளியாகும் கவிதை, சிறுகதை, சிறுவர் இலக்கிய நூல்களுக்குப் பரிசுகளை வழங்குவதோடு, கவிதை மற்றும் சிறுகதைப் போட்டிகளையும் நடத்தி, பல படைப்பாளிகளை ஊக்கப்படுத்தி வருவது பாராட்டக்குரிய பணியாகும். தனது எழுத்தானது உரிய கவனமும் அங்கீகாரமும் பெற வேண்டுமென்று தான்ஒவ்வொரு எழுத்தாளரும் விரும்புவர். அப்படியான பாராட்டும் ஊக்கமும் இப்படியான நூல்ப் பரிசுப் போட்டிகளால் நிச்சயம் எழுத்தாளர்களுக்கு கிடைக்கப் பெறுகிறது.
ஒரு சமுதாயத்தின் சமகாலப் போக்கைப் பிரதிபலிப்பதும், முன்னேற்றத்தை நோக்கி சமுதாயத்தை வழிநடத்த வேண்டியதும் இலக்கியப் படைப்புகள் செய்ய வேண்டிய மிக முக்கியமான செயலாகும். அப்படியான படைப்புகளை எழுதும் எழுத்தாளர்கள் இன்னும் பலர் உருவாக இந்தப் பரிசளிப்பு விழா மிகுந்த ஊக்கத்தை அளிப்பதாக அமைந்துள்ளது” என்றார்.
பள்ளிக் குழந்தைகள் பங்கேற்ற பாரதி குறித்த சிறுநாடகமும், நெய்வேலி கவிஞர்கள் பங்கேற்ற கவியரங்கமும் நடைபெற்றது. முன்னதாக, க.சம்பத்குமார் வரவேற்க, ப.விஜயநாதன் நன்றி கூறினார்.  விழாவை வித்யா நடராசன் தொகுத்து வழங்கினார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!