20
எஸ் வி வேணுகோபாலன்
“தெய்வச் செயல்!” என்றான் சாத்தன்.
“உன் சிருஷ்டி சக்தி!” என்றான் பைலார்க்கஸ், வேறு எதையோ நினைத்துக் கொண்டு.
“பைலார்க்கஸ், உனது பேச்சு எனது பெருமையைச் சாந்தி செய்யலாம். நான் எத்தனை நாள் கஷ்டப்பட்டேன்! அது உனக்குத் தெரியுமா? நீ நேற்றுப் பிறந்தவன்… கூத்து!… அதில் எவ்வளவு அர்த்தம்! மனிதனுக்குத் தெரிந்ததெல்லாம், தெரியவேண்டுவதெல்லாம்… இந்தப் பிரபஞ்சமே, பைலார்க்கஸ், நீ நினைப்பது போல் வெறும் பாழ் வெளியன்று; அர்த்தமற்ற பேய்க் குழப்பம் அன்று… இருபது வயசிருக்கும்; அப்போ ஒரு தரம் பாண்டிய நாட்டுக்குப் போயிருந்தேன்… சிற்பத்தைப் பார்க்க வேண்டுமானால் கொல்லிப் பாவையைப் பார்க்க வேண்டும். அங்கேதான், ஒரு மறவன், நாகன், ஒரு கூத்தில் அபிநயம் பிடித்தான். அந்தக் கால் வளைவு, அதை அதிலே பிடித்தேன்… உலகத்தின் அர்த்தத்தை… ஒவ்வொன்றாக, படிப்படியாக வளர்ந்தது… அந்த மலையத்து நடிகைதான் முகத்தின் சாந்தியை, அந்த அபூர்வமான புன்சிரிப்பை, அர்த்தமற்ற அர்த்தத்தை – பைலார்க்கஸ், உனக்கென்ன! நீ கேலிக்காரன் – உப நிஷதத்தில் தேடியலைந்தேன்… ஹிமயத்தில் தேடியலைந்தேன்… சாந்தி அந்த இரவு… என் மனைவி அங்கயற்கண்ணி இறந்த அன்று கிட்டியது… பிறகு வெண்கலக் கலப்பிற்கு என்ன பரீட்சை! என்ன ஏமாற்றம்!… ஆசை தான் வழிகாட்டியது. அந்த ரூப சௌந்தரியம் பெறுவதற்கு எத்தனை ஆட்களைத் தேடினேன்!… அதன் ஒரு சாயை… நீலமலைக் கொடுங்கோலன் – பத்து வருஷங்களுக்கு முன்பு சிரச்சேதம் செய்யப்பட்டானே – அவனுடைய இடைதுவளுதலில் கண்டேன்… தெய்வம் ஒன்று உண்டு… அதன் அர்த்தத்தை என் சிலை உணர்த்த முடிந்தது எனது பூர்வ ஜன்மப் பலன்… இந்தக் கைகளால்… பின்னாலிருந்து ஓர் அர்த்தமுள்ள வஸ்து தூண்டாவிட்டால்… அதைச் சாதிக்க முடியும்?”
“நீதான் சாதித்தாய்! நீதான் பிரம்மா! உன் சாதனை தான் அது. சிருஷ்டி! மயங்காதே! பயப்படாதே! நீதான் பிரம்மா! சிருஷ்டித் தெய்வம்!” என்று பைலார்க்கஸ் அடுக்கிக் கொண்டே போனான்.
சிற்பியின் நரகம், புதுமைப்பித்தனின் மகத்தானதோர் ஆக்கம். நிரீஸ்வரவாதி (நாத்திகன்) கிரேக்க தத்துவ ஞானி பைலர்க்கஸ், சிற்பி சாத்தனின் நடராசர் சிலையைக் கொண்டாடும்போது அதை எப்படி வடித்தேன், எத்தனை ஆண்டுகளில் எங்கிருந்தெல்லாம் பெற்ற அனுபவத்திலிருந்து சேர்த்த கற்பனையின் முழுமை என்று சாத்தன் விவரிக்கும் காட்சி தான் மேலிருப்பது.
இசை இன்பத்தின் திசை என்று பேச அழைக்கப்பட்டபோது, ஜனவரி 22 மாலை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் வங்கி அரங்கக் கிளையின் இசை சுரங்கம் – பாடல்களும் நீங்காத நினைவுகளும் நிகழ்ச்சியில் இந்தக் கதையின் இந்தக் காட்சியே எனது நினைவில் தெறித்தது.
66 வயதா….26 வயதுக்காரரின் குரலாகவே ஒலித்த கரிசல் குயில் கிருஷ்ணசாமி எனும் அற்புத இசைப் பாடகர், வெவ்வேறு பாடல்களை நேற்றைய நிகழ்ச்சியில் பாடுமுன்பு அதன் உருவாக்கம், அதற்குத் தான் எங்கிருந்து யோசித்து இசை கோத்தது, அது எப்படியாகப் பொருந்திப் போனது என்றெல்லாம் சுவாரசியமாகவும், உள்ளன்போடும் சொல்லச் சொல்லக் கேட்டவர்க்கெல்லாம் இனித்தது.
மகாகவி பாரதியின் பேயவள் காண் எங்கள் அன்னை, பெரும் பித்துடையாள் எங்கள் அன்னை எனும் பாடலுக்கு எப்படி டியூன் போடுவது என்று யோசித்தபடியே ஒரு கோவிலுக்குள் நுழைந்த தருணத்தில் ஓதுவார் ஒருவர் தேவாரப் பண் ஒன்றை இழைத்துக் கொண்டிருந்த ராகத்தில் லயித்து அந்தக் கணமே பாடலை அந்த மெட்டில் அமைத்துக் கொண்டேன் என்றார் கிருஷ்ணசாமி.
தோடி ராஜரத்தினம் பிள்ளையின் பார்வையில் பட்டார் காருகுறிச்சி…நமக்கெல்லாம் யாரிடமும் பார்வை படாமலே நினைவு தெரிந்த நாளில் இருந்தே பாடத் தொடங்கி இசையின் அடிப்படையை எங்கும் கற்கவும் வாய்க்காமல் ஸ்வரம் ராகம் தாளம் எதுவும் அறியாமலே கேள்வி ஞானத்தில் வளர்த்துக் கொண்ட இசை தான் என்ற கிருஷ்ணசாமி, காருகுறிச்சி தனியே நாதஸ்வரத்தில் வாசித்துவிட்டுப் போனபிறகு எஸ் ஜானகி தனியே பாடி ஒலிப்பதிவு செய்யப்பட்டது தான் சிங்கார வேலனே தேவா என்ற பாடல், அதற்குப் பிறகு சில ஆண்டுகள் கழித்துத் தான் அவரை நேரே பார்த்தாராம் ஜானகி என்று சொல்வார்கள், இசைக்கவி ரமணன் அவர்களது கோடுகள் இல்லா உலகம் என்ற பாடல் புத்தகத்தை எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் என்னிடம் கொடுத்து டியூன் போட்டுப் பாடு என்று சொல்ல, ‘அந்தி மலர் பூத்திருக்க ஆசையுடன் நான் காத்திருக்க..’ என்ற பாடலை இசையமைத்துப் பாடியவன் 25 ஆண்டுகள் கழித்துத் தான் ரமணன் அவர்களை நேர்கொண்டு சந்திக்க வாய்த்தது என்றார்.
ஜெர்மனிக்கு ஏப்ரல் மாதம் செல்ல இருக்கும் அவர், அங்கே செல்வது, கார்ல் மார்க்ஸ் வாழ்ந்த இல்லத்தில் சென்று நவகவி எழுதிய பாடலை அங்கு நின்று பாடிவிட்டு வருவதற்குத் தான்…அந்தப் பாடல் பல்லவியைப் பாடுங்கள் என்று நாங்கள் கேட்டுக் கொள்ள,
ஒளியால் உருவானவர்
கார்ல் மார்க்ஸ்
காலத்தின் கர்ப்பத்தில் கருவானவர்
காலை உதயம்
மேதை இதயம்
அவர் போராளி உண்மை தான் மறுப்பேது
ஆனால்
தாடியோ அமைதி புறாக்கூடு
என்ற பாடலை, நாதஸ்வர ஓசையிலே…தேவன் வந்து பாடுகின்றன (பூவும் பொட்டும் திரைப்படம்), பொன்னொன்று கண்டேன் பெண் அங்கு இல்லை (படித்தால் மட்டும் போதுமா) பாடல்களைக் கேட்டிருக்கிறீர்களா…பிருந்தாவன சாரங்கா ராகம்…அதில் தான் மெட்டுப் போட்டேன், இரண்டு தலைவர்களுக்கும்…கார்ல் மார்க்ஸ் அவர்களுக்கு இந்தப் பாடல். நவகவி அம்பேத்கர் பற்றி எழுதிய ஏழைகளின் மீட்பர் …ஏகலைவன் பேரர் பாடலுக்கும் என்றார் பாகிஸ்தான் பாடகர் குலாம் அலி அவர்களது கஜல் பதங்களை ரசித்து ஒரு வரி பாடிக்காட்டி, இந்த மெட்டில் தான் நவகவியின், இலைகள் அழுத ஒரு மழை இரவு பாடலை அமைத்துப் பாடியது, அரூரிலிருந்து தான் சென்னை பாரிமுனையில் வந்திறங்கிய ஒரு காலைப் பொழுதில் கோணிக் கித்தான் மறைப்புகளையே வீடுகளாக நடைபாதையில் கொண்டுவாழும் குடும்பம் ஒன்றில் சிறுவர்கள் வாடைக்காற்றுக்கு ஒருவர் உடலை மற்றவர் போர்த்தியபடி படுத்து உறங்கிய காட்சியின் தாக்கத்தில் எழுதிய பாடல் என்று நவகவி குறிப்பிட்டிருப்பதையும் சொன்னார்.
காஞ்சி பா ராஜேஸ்வரி, கலை இரவு மேடைகளில் பல்லாயிரம் ரசிகர்களை ஈர்க்கும் குரலில் முற்போக்கு இசைப்பாடல்களைப் பல்லாண்டுகளாகப் பாடி வருபவர், கல்லூரி மாணவரான தனது மகன் இயல் அருமையாக தபேலா வாசிக்க அற்புதமான பாடல்கள் சிலவற்றை இசைத்தார். தங்களது பாடல் திறனைப் பார்த்து மாவட்ட ஆட்சியர் முயற்சி எடுத்து சென்னை இசைக்கல்லூரியில் தன்னையும் பாடகி உமாவையும் சேர்த்து விட்டது, இங்கே முற்பட்ட வகுப்பினரது இசை ஞானத்தைக் கண்டு திகைத்தது, ஆனாலும் இசை யாவருக்கும் பொதுவானது என்று தாங்களும் கற்றுக் கொண்டது இவற்றை நினைவு கூர்ந்த அவர், ஓராயிரம் குயில்கள் உட்காரும் சோலையிலே ஒரு குயில் கண்டானடி, பிரளயனின் அச்சம் நாணம் மடம் பயிர்ப்பு ஆகிய சொற்கள் வெறும் பசப்பு, பாவேந்தரின் துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து, வெற்றி வளவனின் காலத்துக்கும் உழைச்சு உழைச்சுக் கண்டது என்ன மாமா…போன்ற பல அருமையான பாடல்களை இசைத்தார்.
ரஜினி அவர்கள் மகாகவியின் சுட்டும் விழிச்சுடர் தான் கண்ணம்மா எனும் அற்புதப் பாடலை அருமையாக இழையோடவிட்டார். பாலசுப்பிரமணியன், மனிதா மனிதா இதை மாற்ற வேண்டாமா என்ற முற்போக்கு கீதத்தைச் சிறப்பாகக் கொண்டுவந்தார். பத்ரி, மறைந்த அற்புத பாடகர் ஜெயசந்திரனின் நினைவில் ‘ராசாத்தி ஒன்ன காணாத நெஞ்சு’ (வைதேகி காத்திருந்தாள்) பாடலை உணர்ச்சி பூர்வமாக இசைத்தார்.
எழுத்தாளர் ஜனநேசன் நினைவரங்கில் அவரைக் குறித்த அஞ்சலிக் குறிப்புகளை மூத்த இதழாளர் – மொழி பெயர்ப்பாளர் – எழுத்தாளர் ‘தீக்கதிர்’ அ.குமரேசன் அவர்கள் நெகிழ்ச்சியோடு பகிர்ந்து கொள்ளத் தொடங்கிய நிகழ்வுக்கு கிளையின் தலைவர் ராஜன் பாபு தலைமை ஏற்று, தான் சார்ந்த இந்திய வங்கி ஊழியர் அசோசியேஷன் சங்கம் தொண்ணூறுகளில் மாநிலம் முழுவதும் தங்கள் நிகழ்ச்சிகளில், மாநாடுகளில் தொடர்ச்சியாகப் பாட வைத்துக் கேட்ட கரிசல் குயில் கிருஷ்ணசாமி அவர்களை இன்று அவரை அருகே காண்பது பேரின்பமாக உள்ளது என்றார். கிளையின் செயற்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன் எல்லோரையும் வரவேற்றார்.
பேரா. சுபா அருணாசலம் அவர்கள் செய்திக் குறிப்பு ஒன்றை நிகழ்ச்சியினூடே வாசித்து சம கால பிரச்சனை குறித்த கவனத்தை ஈர்த்தார்.
கவிஞர் பாரி கபிலன், சலவை செய்யப்பட்ட சாட்டை எனும் சிறப்பான கவிதையைச் சொடுக்கினார். பின்னர், முந்தானை மனசு எனும் கவிதையில் எல்லோரையும் நெகிழ்த்தி விட்டார்.
தமுஎகச மத்திய சென்னை மாவட்டத் தலைவர் அருண் கண்ணன் சுருக்கமான வாழ்த்துரை வழங்கி மகிழ்ந்தார். எழுத்தாளர் எஸ் வி வேணுகோபாலன், இசையின்பத்தின் திசை எனும் பொருளில் சுருக்கமான உரை ஒன்றை நிகழ்த்தினார்.
மொத்த நிகழ்வையும் தமுஎகச மாநிலக் குழு உறுப்பினர் கவிஞர் நா வே அருள் திறம்பட ஒருங்கிணைத்து வழி நடத்தினார். கிளையின் செயற்குழு உறுப்பினர் ஏ எஸ் கல்யாண் குமார் நன்றி நவில சிறப்பான நிகழ்ச்சி மன நிறைவோடு நிறைவு பெற்றது. ஆனாலும் பாடல்கள் இன்னும் ரீங்காரமிட்டுக் கொண்டே தான் இருக்கிறது.
add a comment