சினிமா

நடிகை தேவயானி முதன்முறையாக இயக்கி தயாரித்துள்ள குறும்படம் ‘கைக்குட்டை ராணி’ ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழாவில் விருதை வென்றது

21views
திரையுலகில் கடந்த 30 ஆண்டுகளில் பல்வேறு மொழிகளில் சுமார் 100 படங்களில் நடித்துள்ள நடிகை தேவயானி முதன்முறையாக இயக்கி தயாரித்துள்ள குறும்படமான‌ ‘கைக்குட்டை ராணி’ 17வது ஜெய்ப்பூர் சர்வதேச திரைபப்ட விழாவில் சிறந்த குழந்தைகள் குறும்படத்திற்கான விருதை வென்றுள்ளது.
டி ஃபிலிம்ஸ் பேனரில் தேவயானி தயாரித்து, எழுதி, இயக்கியுள்ள ‘கைக்குட்டை ராணி’ திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க, பிரபல எடிட்டர் பி. லெனின் படத்தொகுப்பை கையாண்டுள்ளார். ராஜன் மிர்யாலா ஒளிப்பதிவையும், லட்சுமி நாராயாணன் ஏ.எஸ். ஒலி வடிவமைப்பையும் கையாண்டுள்ளனர்.
சுமார் இருபது நிமிடங்கள் ஓடும் இந்த குறும்படம் குழந்தைகளின் உணர்வுகளை திரையில் சொல்கிறது. தாயை இழந்த, தந்தை வெளியூரில் பணிபுரியும் ஒரு பெண் குழந்தை எத்தகைய சிக்கல்களை சந்திக்கிறது என்பதை உணர்ச்சிப்பூர்வமாக இப்படம் வெளிப்படுத்தியுள்ளது.
‘கைக்குட்டை ராணி’ குறும்படத்தை பார்த்த 17வது ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழா நடுவர் குழுவினர் குழந்தைகளுக்கான சிறந்த குறும்படத்திற்கான விருதுக்கு இதை தேர்ந்தெடுத்திருப்பதோடு தேவயானி மற்றும் குழுவினரை வெகுவாக பாராட்டினர்.

இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த தேவயானி, “எத்தனையோ படங்களில் நான் நடித்திருந்த போதிலும், முதன்முறையாக நான் இயக்கிய குறும்படம் சர்வதேச‌ அளவில் விருது பெறுவது மிகுந்த மகிழ்ச்சையையும் பெருமையையும் அளிக்கிறது. இதில் பங்காற்றியுள்ள மூத்த கலைஞர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. இதர சர்வதேச திரைப்பட விழாக்களுக்கும் இப்படத்தை கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்,” என்றார்.

‘கைக்குட்டை ராணி’ குறும்படத்தில் நிஹாரிகா வி.கே. மற்றும் நவீன் என் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சவுண்ட் எஃபெக்ட்ஸ் வடிவமைப்பு: சி., சேது, டிஐ கலரிஸ்ட்: ஆன்டனி பேபின் ஏ. திரைப்படத்தை சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு கொண்டு செல்லும் பணியை உலக சினிமா பாஸ்கரன் ஏற்றுள்ளார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!