92
திரை விமர்சனம் :
இப்படித்தான் சினிமா எடுக்கவேண்டும் என்கிற வரையரை எதுவும் இல்லை என்றாலும் இப்படியும் படம் எடுக்கலாம் என்கிற இலக்கணத்தை உருவாக்கும் திரைக்கலைஞர்கள் மக்களால் எப்போதும் எல்லா காலத்திலும் கொண்டாடப் படவே செய்கின்றனர்.
ஒரு காலத்தில் அவார்டு திரைப்படம் என்றால் அது நமக்கானதில்லை என்ற வெகு ஜன ரசனையை ‘கொட்டுக்காலி’ மாதிரியான படங்கள் ஒரேயடியாக நொறுக்கி போட்டது. மக்களை திரையரங்கம் நோக்கி வரவழைத்தது. தமிழ் திரைப்படங்களின் தரம் சமீபகாலமாக உயர்ந்திருக்கிறது என்பதை புதிய புதிய வரவுகளால் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.
எப்படியாவது இயக்குனாகி விடவேண்டும் என்கிற சினிமா கனவில் வாழும் ‘தமிழ்’ என்கிற இளைஞனை சுற்றி பின்னப்பட்ட கதை ‘பேமிலி படம்’. துரத்தல், விரட்டல், அவமானம் இதெல்லாம் வாடிக்கையான சினிமா கிளிஷேக்கள் என்றாலும் கதை குடும்பத்தை சுற்றி வருவதாலும், வித்தியாசமான கதை சொல்லும் பாணியை கையாண்டதாலேயும் இந்த படம் ஜனரஞ்சகமான வெற்றி படமாகியிருக்கிறது.
ஒட்டு மொத்த குடும்பமும் ஒருவனின் ஆசைக்கு துணையாக இருக்கிறது. அதுவும் அவனின் நியாமான ஆசை நிறைவேற காட்டும் அக்கறையும் சவால்களும் சபாஷ் போட வைக்கிறது.
இயக்குனர் கனவுடன் தமிழ் என்ற கதாப்பாத்திரத்தில் வரும் உதய் கார்த்திக் பலரின் நம்பிக்கை பிரதிநிதியாக தெரிகிறார். அப்படியே உதவி இயக்குனராகவே தன்னை தகவமைத்துக் கொண்டிருக்கிறார். அவரின் மூத்த அண்ணன் சமுத்திரம் சரத்குமாராக வரும் விவேக் பிரசன்னா கதையின் போக்கு உணர்ந்து நடித்திருக்கிறார். இரண்டாவது அண்ணனாக வரும் பார்த்திபன் குமார், சாயலில் எஸ்கேவை நினைவுபடுத்தினாலும் நடிப்பில் ஸ்கார் செய்திருக்கிறார். நாயகி யமுனாவாக சுபிக்ஷா நல்ல தேர்வு.
ஒரு சில மலையாள தமிழ் படங்களில் நடித்திருந்தாலும் டப்பிங்கில் ராணியாக திகழும் ஸ்ரீஜாரவி அம்மா கதாபாத்திரத்தில் வருகிறார். இயல்பான நடுத்தர குடும்பத்தின் அடையாளம் இவரின் பாத்திர படைப்பு. அலட்டல் இல்லாமல் வந்துபோவதே இந்த படத்திற்கு பலம். கதாநாயகனின் அப்பா கதாபாத்திரம், தயாரிப்பாளர், ஹீரோவின் நண்பன் போன்றவர்களின் நடிப்பும் கவரும் விதத்தில் இருப்பது இயக்குனருக்கு துணிந்து ஓ போடலாம்.
பட்டிமன்றத்தில் இருந்து திரைத்துறைக்கு வந்திருக்கும் புதிய வரவு மோகனசுந்தரம். பட்டிமன்றத்தில் கலகலக்க வைக்கும் மனிதர் திரையில் அளந்து பேசி இருக்கிறார். அதனால் மனதில் இயல்பாக வந்து அமர்ந்து விடுகிறார். தாத்தா கதாபத்திரத்தில் நடித்திருக்கிறார். இயக்குனரின் செல்லப்பிள்ளையாக இருப்பது திரையில் அப்பட்டமாக தெரிகிறது. இருந்தும் ஒரு ரவுண்டு காத்திருக்கிறது வாங்க சார்….சினிமான்றதும் ஒரு பட்டிமன்றம்தான்.
அணீவீ யின் இசை படத்தின் உணர்வுக்கு கூடுதல் துணை. பின்னணி இசை அமர்க்களம். ஒளிப்பதிவாளர் மெய்யேந்திரன் கேமரா வழியாக காட்சிகளுக்கு உயிர் கொடுக்கிறார். எளியமையான கதைக்கு அலட்டல் இல்லாத கேமரா. படத்தொகுப்பில் திரும்பி பார்க்க வைத்து விடுகிறார் சுதர்ஷன்.
செல்வகுமார் திருமாறன் படத்தின் இயக்குனர். கோடம்பாக்கத்தில் இருந்து வந்திருக்கும் இன்னொரு நம்பிக்கையான இயக்குனராக வலம் வருகிறார்.
தன் சகோதரர்களுக்காக தயாரிப்பாளராகி இருக்கிறார் கே.பாலாஜி. ஒருவர் நடிகராக இன்னொருவர் இயக்குனராக சோபிப்பதால் காலரை தூக்கி விட்டுக் கொள்ளலாம்.
படஜெட் படங்களுக்கான எந்த கம்பரமைஸையும் பார்வையாளர்களுக்கு ஏற்படுத்தாமல் கதைக்கு என்ன தேவையோ அதை சரியாக செய்திருப்பதால் படஜெட் மூவி என்கிற பிம்பத்தை பகிரங்கமாக உடைத்திருக்கிறது இந்த பேமிலி படம்.
RJ நாகா
add a comment