44
வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் டெல்லி கணேஷ் (80) இன்று காலமானார். சென்னை ராமாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் அவரது உயிர் பிரிந்தது.டெல்லி கணேஷின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. டெல்லி கணேஷின் மறைவுக்கு திரைத்துறையை சேர்ந்த பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நாடக நடிகராக இருந்து தமிழ் திரையுலகில் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் டெல்லி கணேஷ் கோலோச்சியுள்ளார். டப்பிங் கலைஞராகவும் சிறந்து விளங்கி வந்தார். தூத்துக்குடியில் பிறந்த இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். டெல்லி கணேஷ். நகைச்சுவை, குணச்சித்திரம் உள்ளிட்ட பல்வேறு கதாபாத்திரங்களில் திறம்பட நடித்தவர் ஆவார்.
டெல்லி கணேஷ் 1976-ல் திரைத்துறைக்கு வந்தார். இவர் தக்ஷிண பாரத நாடக சபா (DBNS) எனப்படும் ‘டெல்லி’ நாடகக் குழுவில் ஒரு உறுப்பினராக இருந்தார். படங்களில் நடிப்பதற்கு முன் 1964 முதல் 1974 வரை இந்திய விமானப்படையில் டெல்லி கணேஷ் பணியாற்றினார்.
டெல்லி கணேஷ் நடித்து வெளியான முதல் திரைப்படம் பட்டினப்பிரவேசம் (1977), தமிழ் திரையுலகுக்கு இவரை இயக்குனர் கே. பாலசந்தர் தான் அறிமுகம் செய்தார். டெல்லி கணேஷ் நடித்த பெரும்பாலான கதாபாத்திரங்களில் துணை நடிகர் அல்லது நகைச்சுவை நடிகர் வேடங்களே இருந்தது. ஆனால் அபூர்வ சகோதரர்கள் (கதாபாத்திரம்-பிரான்சிஸ்) போன்ற சில படங்களில் வில்லனாகவும் நடித்து கவனம் ஈர்த்தார். சிந்து பைரவி, நாயகன், மைக்கேல் மதன காமராஜன், அபூர்வ சகோதரர்கள், ஆஹா, தெனாலி, சங்கமம், அவ்வை சண்முகி, இந்தியன் 2 உள்பட 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர்.
டெல்லி கணேஷ் இதுவரை 8 முக்கிய சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார். 1979ம் ஆண்டு பசி திரைப்படத்திற்கு “தமிழ்நாடு மாநில அரசின் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றுள்ளார். அதோடு, 1993 – 1994ம் ஆண்டிற்கான தமிழ்நாடு மாநில அரசின் “கலைமாமணி விருது”ம் டெல்லி கணேஷ் பெற்றுள்ளார்.
add a comment