130
RK வெள்ளி மேகம் : திரை விமர்சனம்
ஐந்து படங்கள் இயக்கிய ஒரு மலையாள இயக்குனர் துணிச்சலாக எடுத்திருக்கும் தமிழ் திரைப்படம் RK வெள்ளி மேகம். தமிழ் திரைக் கலைஞர்களை வைத்துக்கொண்டு கேரள தொழில் நுட்ப குழுவை பயன்படுத்தி எடுத்திருக்கும் இந்த முயற்சிக்கு முதலில் நம் பாராட்டுக்கள்.
சினிமா இயக்குனர் ஆர்கே என்று அறியப்படும் ராஜ்குமார் புதுப்பட முயற்சியில் ஈடுபடுகிறார். இரண்டு பேர் கதைச் சொல்ல வருகின்றனர். ஒவ்வொரு முறையும் சில திருத்தங்களை ஆர்கே சொல்ல கேட்டுக்கொள்ளும் அவர்கள் ஒரு கட்டத்தில் இந்த திருத்தம் ஏதோ அமானுஷ்மான ஒன்றால் தான் நிகழ்கிறது என்று நினைகின்றனர். அங்கிருந்து நகர ஆரம்பிக்கிறது கதை.
ஆர்கே வின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட ஐந்து நண்பர்கள் கார் விபத்தில் இறந்து போகின்றனர். அவர் எப்போதெல்லாலாம் மதுபாட்டிலை திறக்கிறாரோ அப்போதெல்லாம் அந்த ஐவரும் பேயாக அவருடன் அமர்ந்து குடிப்பதாக காட்டுகின்றனர். இது ஒருபுறமிருக்க ஆர்கே வீட்ட்டில் அவருடைய தாயை கொன்றுவிட்டு தந்தை தற்கொலை செய்து கொள்வதாக காட்டும் பிளாஸ் பேக்கும், ஆர்கே தன் காதலியை கொன்றுவிட்டு இரண்டாண்டு ஜெயில் தண்டனை பெற்றதாக ஒரு கிளைக்கதையும் சொல்லி ஆடியன்ஸ் பக்கம் ஆர்கே என்பவர் யார், அவர் ஏன் இவ்வாறு பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார் என்பதற்கான காரணங்களை முன் வைக்கின்றனர்.
ஆர்கே இந்த அமானுஷ்ய சக்தியின் பிடியில் இருந்து மீண்டாரா…இதற்கெல்லாம் என்ன காரணம் என்பதை நிதானமான திரைக்கதையால் சொல்லி முடிக்கின்றனர்.
யாரும் எதிர்பாராத திருப்பமாக கார் ட்ரைவர் கதாப்பாத்திரம் தான் கதையின் அத்தனை டுவிஸ்டுகளுக்கும் காரணம் என்று நம்மை அதிரவைப்பதே படத்தின் கிளைமாக்ஸ்.
ஆர்.யதுகிருஷ்ணனின் கதைக்கு கோவை பாலுவின் திரைக்கதை வசனம் ஏதோ நியாயம் செய்ய முயற்சித்திருக்கிறது. டான்சி அலெக்சின் ஒளிப்பதிவு .சுமார் ரகம். சாய் பாலனின் பின்னணி இசையும், ‘கடவும் தந்த பாதி நீ’ என்ற பாடலும் படத்திற்கு பலம். ஹரி ஜி நாயரின் படத்தொகுப்பு இயக்குனருக்கு கைக்கொடுத்திருக்கிறது.
ஆதேஷ்பாலா, கொட்டாச்சி, சார்மிளா, விவேக் சின்னராசு, விஜய் கௌரிஷ், ரூபேஷ் பாபு என தமிழ் முகங்களை பார்க்க முடிகிறது.
ஆனால், சுப்ரமணியபுரம் விசித்திரன் தனித்து தெரிகிறார், தனக்கு கிடைத்த வாய்ப்பை மிக சரியாக பயன்படுத்தி இருக்கிறார் மனிதர். அவருடைய பிளாஷ் பேக்கில் வரும் பாட்டு அதற்கு அவருடைய ரொமான்டிக் லுக் கிளாஸ் ரகம். வெள்ளந்தியான மனிதரனாகவும், விவகாரமான மனிதனாவும் வித்தியாசம் காட்டியிருப்பது சிறப்பு.
பிஜி ராமச்சந்திரன் தயாரிப்பாளராக இனி அடுத்த நேரடி தமிழ் படத்திற்கு தயாராகலாம். படத்தில் மலையாள வாசனை வருவதை தவிற்பதற்கில்லை.
ஷைன்னு சாவக்காடன் ஒரு இயக்குனராக ஏற்கனவே ஐந்து படங்கள் மலையாளத்தில் எடுத்திருந்தாலும் அடுத்த படத்தை தமிழில் எடுத்திருக்கும் அந்த எண்ணத்திற்கு நம் பாராட்டுக்கள். தேவையில்லாமல் நீளும் காட்சிகளுக்கு கொஞ்சம் கத்தரி வைத்திருக்கலாம்.
ஆர்கேவின் கல்லூரி காலத்தில் வரும் ஒரு காதல் பாட்டு தேவையில்லாமல் அந்தரத்தில் தொங்குகிறது. அமானுஷ்யம் இந்தப் படத்திற்கு துணை செய்திருக்கிறதா என்றால் இல்லையென்றுதான் சொல்லவேண்டும்.
ஆர்கே வெள்ளிமேகம் ஒரு பொழுபோக்கு படமாக தன்னை தக்கவைத்துக் கொள்ள மிகவும் சிரமப்பட்டிருக்கிறது.
மொத்தத்தில் படம் டபுள் மீனிங், ஆபாச காட்சிகள், முகம் சுளிக்கும் வசனங்கள் எதுவும் இல்லாமல் இருப்பது படத்தின் மரியாதையை கூட்டுகிறது.
RJ நாகா
add a comment