கட்டுரை

கள்ளச்சாராய சாவு அறிவுறுத்தல் என்பது அரசாங்கத்திற்கு மட்டும்தானா??

104views
சாராயம் விற்கிற டாஸ்மாக் கடைகள் தமிழ்நாட்டில் நான்கு திசைகளிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது.
சாராயப் பழக்கம் உள்ளவர்கள் அரசாங்கம் விற்கும் அந்த கடைக்கு சென்று தினந்தோறும் லட்சக்கணக்கான பேர் மது அருந்தி வருகிறார்கள்.
ஆனால் அந்தக் கடைகளின் எண்ணிக்கை போதாது என்பது போல கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பது… அதனை வாங்கிக் குடிப்பது என்கிற பழக்கம் இருந்திருக்கிறது. அந்த கள்ளச்சாராய பாக்கெட் ஒருநாள் விஷமாக மாறும் என்று காய்ச்சுபவனுக்கும் தெரியும்…அதைவிட குடிப்பவனுக்கும் தெரியும்.
கண்டுபிடிக்க வேண்டிய காவல்துறை ஏதோ ஒரிடத்தில் தடுக்கத் தவறி இருக்கிறது. அரசியல் கட்சித் தலைவர்கள் தொடங்கி அனைத்து ஊடகங்களும் அரசாங்கத்தின் மீதுதான் விமர்சனங்கள் வைக்கின்றன.
கள்ளச்சாராயம் சாப்பிட்டால் சாவு நிச்சயம் ஒரு நாள் வரும் என்பதை மதிப்பிற்குரிய குடிகாரர்கள் மதுப் பிரியர்களுக்குத் தெரியும்.
கள்ளச்சாராயம் வாங்கிச் சாப்பிட வேண்டாம் என்று அரசியல் கட்சித் தலைவர்களோ அல்லது பத்திரிகைகளோ எழுதுவதில்லை. கள்ளச்சாராய நடமாட்டம் அதிகமாகும் என்பதற்காகத்தான் வீதிகள் தோறும் டாஸ்மாக் கடைகள் அரசாங்கம் திறக்கிறது என்று அரசு தரப்பில் காலம் காலமாக சொல்லப்படுகிறது.

காவல்துறையின் பாதுகாப்பு நடவடிக்கைகள் என்பது வெற்றி பெரும்போதெல்லாம் செய்திகளாக வருவதில்லை அவர்களுடைய அன்றாடப் பணி இது என்பார்கள்…
பாதுகாப்பில் 100 முறை வெற்றி பெற்றிருக்கலாம் ஆனால் ஒரு முறை சறுக்கினால் அந்தச் சறுக்கல்கள் மூலம் மிகப்பெரும் ஆபத்து உண்டாகும். அப்படித்தான் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய விற்பனை இன்றைக்கு 35 பேரை காவு கொண்டிருக்கிறது.
மனித குலத்திற்கும் மதுவுக்குமான போராட்டம் என்பது திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தான் வந்தது என்று பல அறிவு ஜீவிகள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
திருவள்ளுவர் வாழ்ந்த காலத்திலும் அதன் பிறகு திருத்தக்கத் தேவர் காலத்திலும், பின்னர் கவிச்சக்கரவர்த்தி கம்பன் காலத்திலும் இந்தக் குடிப்பழக்கத்தால் பல பேர் சீரழிந்து போகிறார்கள். அதற்காகத்தான் திருக்குறள், சீவக சிந்தாமணி, இராம காப்பியம் உள்ளிட்ட இலக்கியங்களைப் படைத்த ஞானிகள் மதுவிலக்குப் பிரச்சாரத்தை மேற்கொண்டார்கள்.!!

இன்றைக்கு உலகம் கைக்குள் வந்து விட்டது. ஆனால் மனித குலத்திற்கும் மதுவுக்குமான சண்டை ஓயவில்லை.
காட்சி ஊடகங்கள், இணையதளங்கள், பத்திரிகைகள், அரசியல் கட்சித் தலைவர்கள் சொல்ல வேண்டியது…
கள்ளச்சாராயம் சாப்பிட வேண்டாம் என்கிற அறிவுறுத்தல் தான்.
அதை விடுத்து லட்சக்கணக்கில் அந்தக் குடும்பங்களுக்கு நிதி வழங்குங்கள் என்று சொல்வது தவறான பழக்கத்திற்கு ஊக்கப்படுத்துகின்ற வேலையாகத் தான் இருக்கும்.
மாறாக எளிய குடும்பத்தில் இருந்து கள்ளச்சாராயம் சாப்பிட்டு இறந்து போன அந்தக் குடும்பத்தாருக்கு மாதம் தோறும் குறைந்தபட்சம் 3 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை என்கிற அடிப்படையில் குறிப்பிட்ட காலம் வழங்கலாம்…
தொ தொடர் குடிப்பழக்கம் உள்ளவர்கள் தங்கள் குடும்பத்தைக் கூட நிம்மதியாக விடுவதில்லை என்பது எல்லோரும் அறிந்ததே.

லட்சக்கணக்கில் பணம் வழங்குவது கூடாது. போக்குவரத்து களில் ஏற்படும் விபத்து, பட்டாசுத் தொழிற்சாலைகளில் ஏற்படும் உயிரிழப்பு போன்றவற்றில் வழங்குகின்ற இழப்பீடுத் தொகையை இந்தக் கள்ளச் சாராயத்துடன் ஒப்பிடுவது தவறான பார்வையைக் கொடுக்கும்.

நீ சு பெருமாள்.
giriperumal1964@gmail.com

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!