கட்டுரை

மணமக்கள்: ராம் – நேசி

192views
மழை வருமோ, வந்திடுமோ என்ற அச்சத்தோடு தான் கிளம்பினேன். எப்படியாவது சரவணா ஸ்டோரில் கிப்ட் வாங்கும் போது மறக்காமல் குடை வாங்க வேண்டும்.
இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக இரவில் மழை வருகிறது. பெரிதாக நனையவில்லையென்றாலும் இப்போது இருக்கும் சூழலில் நனைதல் என்னைப் பொறுத்தவரை பிரச்னைக்குரிய ஒன்று தான்.
ஒரு வழியாக சரவணா ஸ்டோரில் கிப்ட் செக்சனில் கால் மணி நேரம் செலவழித்து மனதிற்கு பிடித்த ஒன்றை தேர்வு செய்து விட்டேன். ஆனால், இந்த குடை தேர்வு செய்வதில் தான் சிக்கல். பட்டன் குடையா சாதா குடையா என்பதில் உண்டான என் குழப்பம் தொடர்ந்தது. கடலோரக் கவிதைகள் ஜெனிபரின் கையில் இருக்கும் டிசைன் குடைகளாக கடைக்காரப் பெண் எடுத்து நீட்ட அப்படியே முட்டத்து சின்னப்பதாஸாக உட்கார்ந்து விட்டேன்.
அய்யோ ஆறுமணிக்கு ரிசப்ஷன். சிறுமூளை பெருமூளைக்கு விண்ணப்பிக்க ஒரு வழியாக கருப்பு நிறத்தில் கையடக்கமான ஒன்றை எடுத்துக்கொண்டு பில்லிங் செக்சனுக்கு செல்கிறேன்.
பஸ் பிடிக்கணும். கிண்டி இறங்கணும். அப்புறம் ட்ரைன். பரங்கிமலை இறங்கி மண்டபம் போகணும். இவ்வளவு இருக்கு.
மழை வந்தால் இனி கவலையில்லை. கையில் புது குடையுடன் வெளியே வந்து வானம் பார்த்தால் இன்னும் ஒரு வாரத்திற்கு மழை வராது என்பது போல் வெதர் ரிப்போர்ட் படிக்க, ‘நம்ம ராசியே அப்படி தான்’ சிரித்துக் கொண்டே பஸ் ஸ்டான்ட் போனால் நல்ல வேளை ஜன்னலோர சீட் கிடைத்தது. பரவாயில்லையே நம்ம மேல இந்த பிரபஞ்சத்துக்கு இன்னும் அக்கறை இருக்கே…
ஒரு வழியாக கிண்டி இறங்கி சுரங்கப் பாதை படிக்கட்டுகள், ரயில்வே ஸ்டேஷன் படிக்கட்டுகள் எல்லாம் கடக்க வேண்டி இருந்தது. மொத்தம் எத்தனை படிக்கட்டுகள் என்பதை எண்ணியிருக்கலாம். இருந்த அவசரத்தில் இயலாமல் போய்விட்டது. கண்டிப்பாக இதற்காகவே ஒருநாள் போய் எண்ணிப்பார்க்க வேண்டும்.
ரயில்வே ஸ்டேஷனில் செம கூட்டம். நின்ற இடத்தில் ஒரே மகளிர் குழாம். என்னையும் சேர்த்து நான்கு ஆண்கள் மட்டும் உதிரியாக இருந்தோம். அப்புறம் தான் தெரிந்தது அது மகளிர் கம்பார்ட்மெண்ட். ட்ரெயின் வருவதற்குள் நகர்ந்து சரியாக நிற்க ஜன சமுத்திரத்தில் முட்டி தள்ளி ஒருவழியாக டிரைனில் ஏறிக்கொண்டேன். ஒரு ஒரே ஸ்டேஷன். அதற்குள் போதும் போதாகிவிட்டது.
மண்டபம் கண்டுபிடிக்க அவ்வளவு சிரமில்லை. மண்டபத்தின் பேரை ஸ்டேஷனில் நின்றிருந்த ஒருவரை கேட்ட்டேன். கூகுள் மேப்பைவிட துல்லியமாக சொல்ல கால்களில் கண்களை பொருத்திக் கொண்டு நடக்க ஆரம்பித்தேன்.

மண்டப வாசலை அடைந்திருக்கமாட்டேன். நண்பர் ராஜகுமாரன் பாசத்துடன் வரவேற்றார். அவரது துணைவியாரிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தார்.
மண்டபத்தில் ஏற்கனவே சுந்தரபுத்தன், தஞ்சாவூர் கவிராயர், செய்யாறு பாலு என அறிமுகமான முகங்கள் அமர்ந்திருந்திருந்தனர். நண்பர் வேடியப்பன் தயாரிப்பில் வரவிருக்கும் ‘ரயில்’ திரைப்படம் குறித்த உரையாடல். பின் இருக்கை என்பதால் கேட்க மட்டுமே செய்தேன். உரையாடலில் கலந்துக் கொள்ளவில்லை.
நீண்ட நாட்களுக்கு பிறகு கவிஞர் குகை.மா.புகழேந்தியை சந்தித்தேன். ‘டிஷ்யூம்’ திரைப்படத்தில் பாடலாசிரியராக அறிமுகமானவர். நிறைய எழுதி நிறைவாக வர வேண்டியவர். சர்வைவல் எல்லோரையும் ஏதோ ஒரு விதத்தில் தொடர்புஎல்லைக்கு வெளியே தான் வைத்திருக்கிறது. காலம் இன்னும் இருக்கிறது தோழா.
நண்பர் சுந்தரபுத்தன் சிரித்துக்கொண்டே என்னை அறிமுகம்செய்த போது ‘டீ குடிக்க மட்டும் தான் சென்னை வருவாப்பல்ல…மத்தபடி தூங்கறது சாப்புட்றது எல்லாம் துபாய்’. ஆமாம் புத்தன் இது ஒருவிதமான சாபம் தான். என்ன செய்ய.
மணமக்கள் நேசி- ராம்.

நண்பர் ராஜகுமாரனின் மகள் நேசிகா. மருமகன் ராம் இவர்களின் திருமண வரவேற்புக்கு நிதி இருந்தும் இல்லாமல் இருப்போரையும் நிதி திருமண மண்டபத்தில் ஒன்றிணைத்த அந்த படைப்பாளித் தோழனின் சாதுர்யம் நமக்கெல்லாம் கைவர படாத ஒன்று தான்.
முதலில் சோறு. அப்புறம் வாழ்த்துன்னு முடிவெடுத்தபிறகு முதல் பந்தியிலே இரவு உணவை முடித்து கொண்டேன்.
கிப்ட் பார்சலுடன் மணமக்களை நோக்கி செல்ல அண்ணன் பழனிபாரதி புன்னைகையுடன் எதிர்கொள்ள நலம் விசாரிப்பு புகைப்பட பரிமாறல் என அந்த அரைநிமிடம் உன்னதம்.

மேடையில் செல்ல ராஜகுமாரன் அவரது துணைவியார் இருவரும் வரவேற்க மகளிடமும் மருமகனிடமும் என்னை அறிமுகம் செய்துவைத்தார் நண்பர். வாழ்த்துக்களை சொல்லி கீழ் இறங்கினேன்.
அட நம்ம ஓவியர் ஷியாம். மனிதன் அப்படி ஒரு எனர்ஜிக்கு சொந்தக்காரர். முதல் நாள் நான் முகநூலில் பதிவிட்டிருந்த கவிதையை பாராட்டி பேசினார். கட்டிலுக்கு பிறகு தமிழ் படங்கள் இல்லையே என்றதும் மலையாளத்தில் இரண்டு படங்கள் முடித்திருப்பதாக சொன்னார். அவரது தூரிகையை கொஞ்ச நாள் காமிராக்கள் கடனாக கேட்கலாம்.
ஒருவழியாக கிளம்புவதுதான் உசிதம். கிளம்பினேன். நல்லவேளை ட்ரைனில் அவ்வளவுக் கூட்டம் இல்லை. கிண்டி இறங்கி பேருந்து பிடிக்க வேண்டும், வேகமாக நடந்து நேரடி பேருந்து கிடைக்கப்பெற்று அமர்ந்த பிறகுதான் கையின் இருந்த குடை பற்றிய ஞாபகம் வந்தது.
பலமுறை குடை மறந்து போய் கோமாளியாக வீட்டில் அர்ச்சனைகள் வாங்கிய சம்பவங்கள் எல்லாம் சட்டென ஞாபகம் வந்தது.
பரவாயில்லை பத்திரமாகத்தான் வைத்திருக்கிறேன். குடையைப்போல் இந்த வாழ்க்கையும் அப்படியே வைத்திருக்கலாம். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் எதுக்கு.
பாதி தூரம் வண்டி கடந்திருக்காது. லேசான மண்வாசனை. காற்று கொஞ்சம் பலமாக வீச அப்பாடி மழை வரப்போகுது போல…நான் குடையைத் தொட்டு பார்த்துக் கொண்டேன்.
என் நிறுத்தம் வருவதற்குள் தூறல் வலுக்க தொடங்கி இருந்தது. அவசரஅவசரமாக நான் குடையை எடுத்து என்னை ஆயத்தப்படுத்திக் கொண்டேன். நிறுத்தம் வந்ததது. இறங்கினேன்.
குடையை விரித்து நடக்க ஆரம்பித்தேன். சாலையில் எல்லோரும் இயல்பாக நடப்பதாக பட்டது. மழை இல்லையா…அட பாவிகளா. தூறல் போட்டுச்சே. குடை விரிச்சது பாவமாயா…ஒரு துளி ..நோ..நெவர்…
‘அற்பனுக்கு வாழ்வு வந்தா அர்த்த ராத்திரியில குடைபிடிப்பானாம்…’ எங்கோ எப்போதோ படித்தது.
நாளை பௌர்ணமி. நிலா தன்னை முழுமைப்படுத்திக்கொள்ள தயாராகிக் கொண்டிருந்தது.
வாழ்வின் உன்னதங்களை நீண்ட நாடகளுக்கு பிறகு நன்பரின் மகள் திருமண வரவேற்ப்பில் உணரமுடிந்தது. நண்பர்களை நிறையவே சம்பாதித்து வைத்திருக்கிறார்.
இந்த வாழ்க்கையில் வேறென்ன பெரிதாக சம்பாதித்து விட முடியும்.
RJ நாகா

1 Comment

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!