தமிழகம்

அப்பா தூய்மை பணியாளர்… மகள் நகராட்சி ஆணையர்… தொடர் முயற்சிக்குப் பிறகு குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்று நகராட்சி ஆணையரான துப்புரவு பணியாளரின் மகள்..அழகு பார்க்க அப்பா இல்லையே என்று மகள் வருத்தம்.

119views
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சத்தியமூர்த்தி மேட்டு தெரு பகுதியைச் சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி செல்வி. இவர்களது ஒரே மகள் துர்கா. சேகர் மன்னார்குடி நகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். அவரது மனைவி செல்வி வீட்டு வேலைக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் மகள் துர்காவை அரசு உதவி பெறும் பள்ளியில் பண்ணிரெண்டாம் வகுப்பு வரை படிக்க வைத்த சேகர் மன்னார்குடி ராஜ கோபாலசாமி அரசினர் கலைக் கல்லூரியில் இளங்கலை இயற்பியல் படிக்க வைத்துள்ளார். பல்வேறு சிரமங்களுக்கிடையே கணவன் மனைவி இருவரும் பொருள் ஈட்டி மகளின் கல்வி தடைபட்டு விடாமல் துர்காவிற்கு ஊக்கம் கொடுத்து அவரை பட்டப் படிப்பு படிக்க வைத்துள்ளனர்.
இந்த நிலையில் குடும்ப சூழ்நிலை காரணமாக கடந்த 2015-ல் துர்காவை 21 வயதில் மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்த நிர்மல் குமார் என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். நிர்மல் குமார் அங்குள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வருகிறார். நிர்மல் குமாருக்கும் துர்காவிற்கும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். முதல் குழந்தை லக்ஷிதா மூன்றாம் வகுப்பும் இரண்டாவது குழந்தை தீக்ஷிதா ஒன்றாம் வகுப்பும் படித்து வருகின்றனர். இந்த நிலையில் கணவன் நிர்மல் குமார் துர்காவின் அரசு வேலைக் கனைவ அறிந்து அதற்கு உன்னை நீ தயார் செய்து கொள் என்று ஊக்கமளித்துள்ளார்.
இதனையடுத்து துர்கா கடந்த 2016 ல் குரூப் 2 தேர்வு எழுதி தோல்வி அடைந்துள்ளார். தொடர்ந்து மனம் தளராமல் 2020ல் குரூப் ஒன் தேர்வு எழுதி முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். தொடர்ந்து நடைபெற்ற முதன்மை தேர்வில் அவர் தோல்வியடைந்துள்ளார். இருப்பினும் அடுத்தடுத்த இரண்டு குரூப் 4 தேர்வுகளையும் அவர் எழுதி கட் ஆப் இல்லாத காரணத்தினால் தேர்ச்சி பெற முடியாமல் இருந்துள்ளார். இந்த நிலையில் தனது விடா முயற்சியின் காரணமாக மீண்டும் கடந்த 2022ல் குரூப் 2 தேர்வு எழுதி முதல்நிலை தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளார் அதனை தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற முதன்மை தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். தொடர்ந்து 2024 ல் நடைபெற்ற நேர்முகத் தேர்வில் 30 க்கு 30 மதிப்பெண்கள் எடுத்து வெற்றி பெற்று எஸ்பிசிஐடி ஆக பொறுப்பிற்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
இருப்பினும் தனது தந்தை தூய்மை பணியாளராக பணியாற்றிய போது பெற்ற அவமானங்கள் கஷ்டங்கள் ஆகியவற்றை சிறுவயதிலிருந்து பார்த்து வளர்ந்த துர்கா நகராட்சி ஆணையராக வேண்டும் என்று விரும்பி நகராட்சி ஆணையர் பொறுப்பை தேர்ந்தெடுத்துள்ளார். அதன்படி கடந்த ஜூன் மூன்றாம் தேதி அவருக்கு பணி ஆணையும் வழங்கப்பட்டுள்ளது.இது குறித்து துர்கா கூறுகையில் தனது அப்பா தூய்மை பணியாளராக பணி புரிந்து பல சிரமங்களுக்கு நடுவில் என்னை படிக்க வைத்தார். அதேபோன்று அம்மாவும் வீட்டு வேலைக்கு சென்று என்னை படிக்க வைத்தார்.
அரசு உதவி பெறும் பள்ளியில் படித்த நான் அரசினர் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்து குடும்ப சூழ்நிலை காரணமாக கடந்த 2015ல் திருமணம் செய்து கொண்டேன். தொடர்ந்து குரூப் 2 குரூப் 1 குரூப் 4 என பல தேர்வுகள் எழுதி தோல்வி அடைந்த நிலையில் விடாமுயற்சியுடன் படித்து குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்று தற்போது நகராட்சி ஆணையராக பதவி ஏற்க உள்ளேன். நகராட்சி அலுவலகத்தில் அடித் தட்டில் தூய்மை பணியாளராக வேலை பார்த்த எனது அப்பா நான் நகராட்சி ஆணையராக வருவதை பார்க்க வேண்டும் என்று நான் விரும்பினேன். ஆனால் இப்போது எனது அப்பா உயிரோடு இல்லை. கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு ஒரு சிறிய விபத்தில் அவர் இறந்துவிட்டார். இருந்தாலும் அப்பாவின் பெயர் என்றைக்கும் இருக்கும். கல்வி ஒன்று தான் நம்மை உயர்த்தும். எதுவாக இருந்தாலும் கல்விக்கு பின்னாடி தான். நான் எப்படி அடித்தட்டில் இருந்து எவ்வித குடும்ப பின்னணியும் இல்லாமல் இன்று ஒரு அதிகாரியாக எனது கல்வியால் உயர்ந்திருக்கிறேனோ அது போன்று எல்லோரும் பயிற்சியும் முயற்சியும் இருந்தால் கண்டிப்பாக அரசு அதிகாரியாக ஆகலாம். அரசு ஊழியராகலாம் என்று நான் சொல்ல மாட்டேன். நான் நகராட்சி ஆணையராகி மிகச் சிறப்பாக பணியாற்றுவேன் என்று அவர் தெரிவித்தார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!