சினிமா

ஒரு நொடியில் நிகழும் தவறு. அதை மறைக்க செய்யும் செயல் “ஒரு நொடி”

110views
ஒரு நொடி : திரை விமர்சனம்
தமிழ் சினிமாக்கள் சமீபகாலமாக நல்ல கதை அம்சத்துடன் வெளிவருவது கொஞ்சம் ஆறுதல். அப்படி ஆறுதல்படும் விதமாக வந்திருக்கும் படம் தான் “ஒரு நொடி”
தன் கணவனைக் காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார் ஒரு பெண்மணி. அந்த ஊரில் கந்து வட்டிக்கு பணம் கொடுக்கும் அரசியல் செல்வாக்கு மிக்க ஒருவர் தான் இதற்கு காரணமாக இருக்கக்கூடும் என்றும் சொல்கிறார். இங்கிருந்து படம் ஆரம்பமாகிறது.
காணாமல் போனவர் போட்டோ ஸ்டூடியோ வைத்து தொழில் செய்துவருபவர். வாங்கியக் கடனை திருப்பி செலுத்த முடியாமல் தவிக்கும் போதுதான் சம்பவம் நடக்கிறது. மொத்த பணத்தையும் திரட்டி செட்டில் பண்ண வரும் போது உண்டான டுவிஸ்ட் தான் படத்தை ஜெட் வேகத்தில் ஓட வைக்கிறது.
இதற்கிடையில் தன் மகளைக் காணவில்லை என்று ஒரு குடும்பம் கம்பளைண்ட் செய்ய என்னடா இது புது கதையாக இருக்கே என்று நாம் நினைப்பதற்குள் இரண்டு சம்பவத்திற்கும் ஒரே காரணம் என சொல்லி கதையை முடித்திருப்பது பிரமாதம்.
படத்தின் கதாநாயகனாக தமன் நடித்திருக்கிறார். ஏற்கனவே ஒரு சில படங்களில் பார்த்திருந்தாலும் இதில் அவரின் போலீஸ்கார நடிப்பு அபாரம். டயலாக் டெலிவரியாகட்டும், பாடி லாங்குவேஜ் ஆகட்டும் மனிதர் பிரித்து மேய்த்திருக்கிறார்.
MS பாஸ்கரின் பாத்திரம் எதார்த்தம். இயல்பாக இருக்கும் நடிப்பு. இன்னும் இவரை தமிழ் சினிமா சரியாக பயன்படுத்திக் கொள்ளவிலையோ என எழும் கேள்வியை புறம் தள்ள முடியவில்லை.
வேலராமமூர்த்தி இதுவரை பார்த்த பாத்திரத்தில் இருந்து வித்யாசமான பாத்திரத் தேர்வில் கவனம் ஏற்கிறார். பழகருப்பையா ஒரு சிலக் காட்சிகளில் வந்திருக்கிறார்.
நிறைய கதாபாத்திரங்கள், காட்சிகளில் காட்டும் மெனக்கெடல், கன்டினியூட்டி என ஒரு சில தவறுகளை மறக்கடித்துவிடுகிறது திரைக்கதை.
ரதீஷின் கேமராவுக்கு ஒரு ஓ போடலாம். சஞ்சய் மாணிக்கம் இசை அறிமுகம். கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்.
மணிவர்மனின் இயக்கம் படத்தை தரமானதாக காட்டி இருக்கிறது.
ஒரு நொடியில் நிகழ்ந்த தவறை மறைக்க செய்யும் செயல் எப்படி வாழ்வை அழிகிறது என்பதை ஒரு சிறு சம்பவத்தை பின்னணியாக வைத்து முழுநீள திரைக்கதையாக்கி இருக்கும் இயக்குனரின் கதைச்சொல்லும் முயற்சிக்கு நம் வாழ்த்துக்கள்.
தமிழகத்தில் மலையாள படங்களை ஓட வைக்கும் தமிழ் ரசிகன் நிச்சயம் இந்த மாதிரியான கதைக்களம் கொண்ட படங்களை வெற்றியடைய வைப்பார்கள் என்கிற மாபெரும் நம்பிக்கையில் களம் இறங்கி இருக்கிறது இந்த “ஒரு நொடி” குழு.
மொத்தத்தில் இரண்டரை மணிநேரம் செலவழித்து இந்த ஒருநொடியை பார்க்கலாம்.
விமர்சனம் : RJ நாகா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!