115views
நேசமுரளி இயக்கி தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கற்பு பூமி’. முன்னணி நடிகர் நடிகைகள் பலர் நடித்திருக்கும் இப்படத்தின் கதை பொள்ளாச்சி சம்பவத்தை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ளது. இப்படத்தின் பாடல் வெளியீடு நிகழ்வு நேற்று சென்னை பிரசாத் லேப்பில் நடைபெற்றது. அரசியல் பிரமுகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டு இந்நிகழ்வை சிறப்பித்தனர்.
படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் நேசமுரளி பேசும் போது…
அனைவருக்கும் வணக்கம். இன்னைக்கி என்ன நடக்குது? கொள்ளிடம், கபிலவஸ்து இரண்டு படமும் சின்ன சின்ன கிடுக்குப்பிடில தப்பிச்சி வந்திருச்சி… கொள்ளிடம் 2016-யிலும் கபிலவஸ்து 2019-யிலும் வெளியானது. கபிலவஸ்துலயும் எனக்குப் பிரச்சனை வந்தது. அதை மீறி சர்டிபிகேட் வாங்கி படத்தை ரீலிஸ் பண்ணேன். கற்பு பூமி படம் எதைப் பற்றியது என்றால் எல்லோருக்கும் தெரியும் பொள்ளாச்சியில் என்ன நடந்தது என்று. நக்கீரன் முதற்கொண்டு எல்லா செய்தித்தாள்களிலும் படித்த செய்திகளை வைத்துத் தான் நான் இந்தக் கதையை உருவாக்கி இருந்தேன். இந்த படம் துவங்கியதில் இருந்தே நெருக்கடி தான். இன்று கூட பாடல்களையோ படத்தின் காட்சிகளையோ திரையிடக்கூடாது என்று அவ்வளவு நெருக்கடி கொடுக்கிறார்கள்.
பொள்ளாச்சிக்கே சென்று மூன்று மாதங்கள் தங்கி இருந்தேன். அப்போது அறிந்து கொண்ட ஒரு சம்பவம் தான் இப்படம். இது போன்ற செய்திகள் எல்லாம் பெரும்பாலும் வெளியில் வரவில்லை. நான் இந்த சம்பவங்கள் எல்லாவற்றிற்கும் ஆதாரம் இருக்கிறது என்று சொல்கிறேன். அந்த ஆதாரங்களைத் தூக்கி வெளியே போடுங்கள் என்று சொல்கிறார்கள் சென்சார் போர்டு உறுப்பினர்கள். பத்திரிகைகளில் வந்த செய்தியை வைத்துக் கொண்டு உருவாக்கிய திரைப்படத்திற்கு ஏன் 109 வெட்டுகள்? இரண்டு மணி நேர படத்தைப் பார்த்துவிட்டு 4 மணி நேர விவாதத்திற்குப் பின்னர் அவர்கள் சொல்லிய முதல் வார்த்தை படத்திற்கு சர்டிபிகேட் தரமுடியாது.. நீங்கள் படத்தை ரீலிஸ் செய்ய முடியாது என்றார்கள். நான் அப்படி ஒன்றும் படத்தில் இல்லையே சார் என்று கேட்டதற்கு, இல்லை இப்படம் வெளியானால் இரண்டு கட்சிகளுக்கு இடையே பிரச்சனை வெடிக்கும். அதனால் அனுமதிக்க முடியாது, நீங்கள் வேண்டுமானால் ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பி மறுபரிசீலனை கோருங்கள், நடிகை கவுதமி தலைமையில் 15 பேர் திரைப்படத்தைப் பார்த்து முடிவு செய்வார்கள் என்றார்கள்.
தியேட்டரில் சென்சார் உறுப்பினர்களுடன் படம் பார்க்க நான் என் நண்பர்களுடன் அமர்ந்திருக்கிறேன். யார் யாரோ வந்தார்கள். சிலர் ஏ.கே 47 துப்பாக்கி பாதுகாப்புடன் வருகிறார்கள். படத்தினைப் பார்த்துவிட்டு மீண்டும் நீண்ட விவாதத்திற்குப் பின்னர் படத்தின் எண்ட் கார்டை தூக்குங்கள் என்றார்கள். சரி அடுத்து என்ன என்று கேட்டால் பொள்ளாச்சி என்கின்ற டைட்டிலை தூக்குங்கள் என்கிறார்கள். பிரச்சனை நடந்த ஊரின் பெயரை எப்படி மாற்றுவது என்று நான் வாதிட்டுப் பார்க்கின்றேன். அவர்கள் யாரும் என் வாதத்தை கேட்கும் மனநிலையில் கூட இல்லை.
எங்கு பார்த்தாலும் பாலியல் பிரச்சனைகள் தலைவிரித்து ஆடுகின்றன. பத்து ஆண்டுகளுக்கு முன்னால் ஏதாவது ஒரு நாள் பத்திரிகையிலோ டிவியிலோ இது போன்ற செய்திகள் வரும். ஆனால் தற்போது அது போன்ற செய்தி இல்லாத நாளே இல்லை எனலாம்.
இப்படத்திற்கு நான் இயக்குநர் மட்டும் இல்லை தயாரிப்பாளரும் கூட என்பதால் படத்தை எப்படியாவது ரீலிஸ் செய்துவிட வேண்டும் என முடிவு செய்து, அவர்கள் சொன்ன 109 கட்-களுக்கு உடன்பட்டு, எண்ட் கார்டை தூக்கி, டைட்டிலை பொள்ளாச்சி என்று வைக்காமல் மாற்றி, யூனியனில் மற்றொரு டைட்டிலை ரிஜிஸ்டர் செய்து, மீண்டும் சென்சார் சர்டிபிகேஷனுக்கு விண்ணப்பித்தேன்.
என்னுடைய கதைகள் எல்லாமே பெண்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் கதைகள் தான். என் அடுத்த படமும் பாலியல் பிரச்சனை சார்ந்தது தான். இயக்குநர் சங்கத்தில் அய்யா செல்வமணி சார் அவர்கள் 2500 கதைகளைக் கேட்டு அதில் 52 கதைகளை படமாக்க தேர்வு செய்து வைத்திருக்கிறார்கள். அதில் என்னுடைய கதையும் ஒன்று. அதில் 10 கதைகளை அய்யா ஐசரி கணேஷ் அவர்கள் தயாரிப்பதாக கூறி இருக்கிறார்கள். அவருக்கு நன்றி.
பத்திரிகை ஆசிரியர் நக்கீரன் கோபால் பேசும் போது…
இயக்குநர் நேசமுரளி பேசியதைப் பார்த்தால் இனி படம் செய்யும் எண்ணம் அவருக்கு இல்லை என்று நினைக்கிறேன். இந்தப் பிரச்சினைகளுக்காகத் தான் நான் சினிமாவுக்கே வரவில்லை. பத்திரிகை பக்கம் போய்விட்டேன். இவர் பேசின மணல்மேடு, பொள்ளாச்சி மற்றும் மணிப்பூர் இவைகளை நாங்களும் பேசி இருக்கிறோம்.
இங்கு சென்சாரை நம்பித்தான் படமே எடுக்க வேண்டியிருக்கிறது. நாங்களும் கூஸ் முனுசாமி வீரப்பன்னு ஒரு டாக்குமெண்டரி பண்ணோம். அதைப் பார்த்துவிட்டு சிலர் கேட்டார்கள்… ஏன் இதை படமாகச் செய்யவில்லை என்று. வேறுவினையே வேண்டாம். சென்சாரிடம் இருந்து ஒரு ரீலும் தப்பாது. ஏன் தேவையின்றி அவர்களிடம் போய் கெஞ்ச வேண்டும் என்று கூறினேன்.
இந்த பொள்ளாச்சி மேட்டருக்கே வருகிறேன். மொத்தம் 1100 வீடியோக்கள், எங்களிடமிருந்தது வெறும் 3 மட்டும் தான். வெளியிடக் கூடாது என்று அதிகாரிகளும் ஒரு அரசியல் பிரமுகரும் மிரட்டினார்கள்.
சிபிசிஐடி அலுவலகத்தில் இருந்து சாட்சி விசாரணை செய்ய வேண்டும் என்று அழைப்பு வருகிறது. அவர்கள் என்னிடம் கேட்டக் கேள்வி யாரைக் கேட்டு வீடியோவை வெளியிட்டீர்கள் என்று கேட்டார்கள். நான் யாரைக் கேட்டு வெளியிட வேண்டும் என்று கேட்டேன். வெளியிட்டிருக்கவே கூடாது என்றார்கள். நான் அப்படி சட்டம் எதுவும் இருக்கிறதா என்று கேட்டேன். சட்டம் இல்லை ஆனால் அப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்றார்கள். குற்றவாளி தப்பாமல் இருக்கவும், இது போன்று இனி நடக்காமல் இருக்கவும் தான் நாங்கள் செயலாற்றி இதை செய்தி ஆக்குகிறோம் என்று கூறினேன்.