சினிமா

தௌசண்ட் வாலாவாக தியேட்டரையே சிரிப்பால் ஆக்ரமிக்கும் ‘ஆயிரம் பொற்காசுகள்’

169views
ஆயிரம் பொற்காசுகள் : திரை விமர்சனம்
கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள் ‘புதையலை பூதம் காவல் காக்கும்’. ஆனால் ஒரு புதைய ல் கிடைத்தால் கிராமத்தில் இருப்பவர்கள் என்ன ஆவார்கள் என்பதை நகைச்சுவை தளும்ப தளும்ப சொல்லி இருக்கும் படம் தான் ‘ஆயிரம் பொற்காசுகள்’

வேலை வெட்டியில்லாத தாய் மாமன் பருத்திவீரன் சரவணனிடம் வந்து சேர்கிறார் விதார்த். அந்த கிராமத்தில் வீட்டிற்கு ஒரு கழிப்பறை திட்டத்தின் கீழ் அரசின் மானியம் கிடைக்கிறது. அதைப் பெறுவதற்காக சரவணன் வீட்டில் பள்ளம் தோண்டும் போது சோழர் காலத்து பானை ஒன்று கிடைக்கிறது. அதில் தங்கக்காசுகள் இருப்பதை முதலில் குழித்தோண்டும் வேலை செய்யும் ஜார்ஜ் மரியான் அறிந்துகொள்கிறார். இங்கிருந்துதான் கதை நகர ஆரம்பிக்கிறது.
சரவணன், விதார்த் இருவரும் சேர்ந்துகொள்ள புதையலை மூன்று பங்காக பகிர்ந்து கொள்ள ஒப்பந்தம் செய்து கொள்கின்றனர். இதை ஊரில் நகைத்தொழில் செய்யும் ஒருவரும் சேர்ந்து கொள்ள பங்கு நான்காகிறது. இப்படியே போய் காவல் நிலையம் வரை செல்கிறது. அங்கும் காவலர்களும் இவர்களுடன் சேர்ந்துகொண்டு பங்கின் எண்ணிக்கையை க்கூட்டி விடுகின்றனர். இப்படியே ஒவ்வொருவராக சேர்ந்துகொள்ள கடைசியில் அந்த ஊரே புதையலுக்கு அடித்துக்கொள்வது ஹைலைட்.
தங்க காசுகள் கடைசியில் யாருக்கு கிடைத்தது என்பதை சுற்றி வளைத்து ஒரு வழியாக சொல்லி முடிக்கும் போது அப்பாடா படம் முடிந்ததா என்கிற திருப்தி ஏற்படுவதை நம்மால் தவிர்க்க முடியவில்லை.

விதார்த் அந்த கிராமத்தில் பெட்டிக்கடை வைத்து வியாபாரம் செய்துவரும் அருந்ததி நாயரை காதலிக்கிறார். வெறும் காதல் படமாக காட்டாமல் தொட்டுக்கொள்ளும் ஊறுகாயாக காட்டி இருப்பது சுவாரஷ்யம்.
சரவணனின் அறிமுகம், காவல் நிலைய காட்சிகள், காவடி எடுத்து செல்லும் போது நடைபெறும் உரையாடல்கள், கிளைமாக்சில் கிராமமே அந்த பொற்காசுகள் நிறைந்த புதையலை கைமாற்றி கொண்டு திண்டாடுவது என எந்த காட்சியிலும் லாஜிக் இல்லாமல் பார்த்தால் வாய்விட்டு சிரிப்பது உறுதி.

ஒளிப்பதிவாளர் பானு முருகன் காமிரா வழியாக கிச்சுகிச்சு மூட்டி தானும் இருப்பதாய் அழுத்தமாக சொல்லி இருக்கிறார்.
ராம் மற்றும் சதீஷின் படத்தொகுப்பு நீளம் குறைத்து சிரிப்புக்கு நாங்களும் கேரண்டி என்கின்றனர்.
காமெடி படத்திற்கு வஞ்சனை வைக்கவில்லை இசையமைப்பாளர் ஜான் சிவனேஷ்.
கதை திரைக்கதை வசனத்துடன் இயக்குனர் ரவி முருகையா கோதாவில் ஊசி பட்டாசாக வெடிக்க ஆரம்பித்து ஒருகட்டத்தில் தௌசண்ட் வாலாவாக தியேட்டரையே சிரிப்பால் ஆக்ரமித்து விடுகிறார்.
KR இன்போடைன்மெண்ட் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் ‘ஆயிரம் பொற்காசுகள்’ திரைப்படத்தை எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் பார்த்தால் நிச்சயம் வாய்விட்டு சிரிக்கலாம்.

சிரித்து பலவருடம் ஆகியிருக்கும் உங்கள் நண்பர்களுக்கு கூட நீங்கள் இந்த படத்தை சிபாரிசு செய்தால் ஒரு பொற்காசு கிடைக்கிறதோ இல்லையோ பிபி குறையலாம்.

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!