ஆன்மிகம்

ஆதிசங்கரர்

193views
ஆதிசங்கரர்
தனது எட்டாவது வயதில் துறவறம் மேற்கொண்டு, அத்வைத சித்தாந்தத்தை இவ்வுலகுக்கு அளித்த ஆதி சங்கரர் வாழ்ந்தது வெறும் 32 வருடங்கள் மட்டுமே.
எட்டு வயது பாலகனுக்கு என்ன தெரியும் ?
ஆனால், அவன் அந்த வயதில் துறவறம் மேற்கொள்ளவிருக்கும் செய்தியை அறிந்து அதிர்ந்துபோன அவனது தாய் ஆர்யாம்பாளுக்கு, தான் சந்நியாசம் மேற்கொள்ள கலங்கிய மனதோடு சம்மதித்த அந்த தாய்க்கு, ஆறுதலாய் ஒரு வாக்களிக்கிறான், சங்கரன் “அம்மா, நீ என்னை எப்போது அழைத்தாலும், நான் இந்த உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும், அக்கணமே உன் முன் இருப்பேன்”.
இன்புற்ற தாய், தன் பிள்ளையைப் பிரியச் சம்மதிக்கிறாள். தாயின் இறுதிக்காலம் நெருங்குகிறது. தன் பிள்ளை இந்த உலகை உய்விக்கப் பிறந்தவன் என்று அறிந்துகொண்ட அந்தத் தாய்,
அவனை தான் மட்டுமே சொந்தம் கொண்டாடக்கூடாது என்று இத்தனை காலம், தன் பிள்ளையை அழைக்காமல், வைராக்கியமாக இருந்த ஆர்யாம்பாளுக்கு இப்போது மகனைக் காணவேண்டும் என்று தோன்றுகிறது.
இதுவே இறுதி முறையாகவும் இருக்கலாம் என்று தோன்றுகிறது. தன் பிள்ளை தனக்களித்த வாக்கில் இருந்து தவற மாட்டான் என்று அவள் அறிவாள்.
முதுமை காரணமாய் தான் இழந்து கொண்டிருந்தும் சக்தியை ஒன்றுகூட்டி, “சங்கரா”, “சங்கரா” “சங்கரா” என்று ஹீனமாய் முனக மட்டுமே அவளால் முடிகிறது.
நேரம் கடக்கிறது.
“அம்மா” என்று ஆசையாய் தன் பிள்ளை அழைக்கும் குரலை அவள் செவிகள் இப்போது கேட்கின்றன.
“சங்கரா, வந்துவிட்டாயா ? அருகில் வா. என் தலையை உன் மடிமீது ஏந்திக்கொள்” என்கிறாள், கண்பார்வை மங்கிப்போன ஆர்யாம்பாள். அருகில் வந்த சங்கரனை ஆசையுடன் தொட்டுத் தழுவுகிறாள்.
சங்கரன், இப்போது, தன் தாய் சொல்லியதைப்போல, அவளது தலையை அன்புடன் எடுத்து தனது மடியின் மீது வைத்துக்கொள்கிறான்.
அந்தத் தாயின் மனம் இப்போது துணுக்குறுகிறது. சங்கரன், கைகளிலும், மார்பிலும் அணிந்திருக்கும் ஆபரணங்கள் அவளை உறுத்துகின்றன, அவளது மனதையும். ஆர்யாம்பாளின் மனம் உடைந்து போகிறது.
என் பிள்ளை என்னிடம், “துறவறம் போகிறேன்” என்று பொய் சொல்லிவிட்டானோ ?
பெற்ற தாயையும், இவ்வுலக ஆசைகளையும் துறந்த ஒரு துறவிக்கு ஆபரணங்கள் எதற்கு ? துறவற தர்மத்தில் இருந்து தவறிவிட்டானே, என் பிள்ளை” என்று அவனிடம் சொல்லாமல், உள்ளே அழுகிறாள்.
இப்போது, மீண்டும் “அம்மா” என்று அழைக்கும் குரல்.
பதில் சொல்ல மனமில்லை, ஆர்யாம்பாளுக்கு.
சங்கரன் கேட்கிறான், “அம்மா, உனக்கு வாக்களித்திருந்த படியே, நீ அழைத்ததும் நான்தான் வந்துவிட்டேனே.
ஏன், என் அழைப்புக்கு பதில் குரல் கொடுக்கவில்லை ? நான் வரத் தாமதம் செய்துவிட்டேனா ? அதனால் உனக்கு கோபமா ?”
ஆர்யாம்பாளுக்கு அதிர்ச்சி.
தன் பிள்ளை இப்போதுதான் வருகிறான். அப்படியானால், நான் யார் மடியில் தலைவைத்து படுத்திருக்கிறேன் ?”
நடப்பதை மகனிடம் சொல்கிறாள்.  ஆதி சங்கரருக்கு உண்மை புரிந்தது. தெருக்கோடியில் கோயில் கொண்டிருக்கும் கண்ணனை உள்ளம் கனிந்து வணங்குகிறார்.
“அம்மா, நான் துறவரம் சென்றபோது நமது தெருவின் கோடியிலுள்ள ஆலயத்தில் குடிகொண்டிருக்கும் கண்ணனிடம், நான் வரும்வரை என் தாயைப் பார்த்துக்கொள் என்று கூறிவிட்டுப் போனேன். நான் வருவதற்கு தாமதித்த சில நொடிகளைக் கூடப் பொறுக்காத கண்ணன், தானே வந்திருக்கிறான், உன் தலை சாய மடியும் தந்திருக்கிறான்”.
ஆர்யாம்பாள் இப்போது கண்ணனை, அந்த தயாளனை எண்ணிக் கண் கலங்குகிறாள்.
“கிருஷ்ணா, நான் அழைத்தவுடன் வரவேண்டும் என்பதற்காக, உன் ஆபரணங்களைக் கூடக் களையாமல் வந்தாயா ?”
குளத்தில், தன் காலைக் கவ்விய முதலையின் பிடியில் இருந்து தன்னைக் காத்துக்கொள்ளப் போராடி, தன்னால் முடியாதபோது, இறுதியில் ‘ஆதிமூலமே’ என்று அலறிய கஜேந்திரன் என்ற யானையின் பிளிறலைக் கேட்ட மாத்திரத்தில், வைகுண்டத்தில் பிராட்டியுடன் அளவளாவிக் கொண்டிருந்த எம்பெருமான், அவசர அவசரமாகக் கிளம்ப யத்தனித்தபோது, அவனது உத்தரீயம் (மேல் துணி) பிராட்டியின் கையில் சிக்கிக் கொள்ள, அவனது அவசரம் அறிந்த கருடன், அவனைவிட வேகமாக பறந்து வந்து அவன் முன் நிற்க, சக்ராயுதமானது, தானாகவே பறந்து வந்து அவனது வலது திருக்கரத்தில் பொருந்திக் கொள்ள, பகவான் விரைந்துசென்று யானையைக் காத்தருளினான். தன்னை வேண்டி அழைத்த அடியவரைக் காக்க விரைந்த பெருமாளுக்கு, கருடனின் உதவியோ, சக்கரத்தின் தேவையோ தோன்றவே இல்லை !  அபயம் அளிப்பது ஒன்றே குறி ! கீழே விழுந்து அடிபட்டு அழும் குழந்தையை, கையில் ஏந்தி ஆசுவாசப்படுத்தி ஆறுதல் சொல்ல எப்படி ஒரு தாய் அவசரமாக ஓடி வருவாளோ,
அது போலவே,  எம்பெருமான் ஓடோடி வந்து, தன் அடியாரின் துயர் தீர்த்து அபயம் அளிப்பான்.
ஆதிசங்கரரின் தாயார் சமாதியும், அதில் சங்கரர் ஏற்றிவைத்த விளக்கும், தாயாருக்கு காவல் இருந்த கிருஷ்ணரின் ஆலயமும் காலடியில் இன்றும் உள்ளது.
“பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
கோவிந்தம் பஜ மூடமதே
ஸம்ப்ராப்தே ஸன்னிஹிதே காலே
நஹி நஹி ரக்ஷதி டுக்ருங்கரணே”
ஏ மூட மனமே, கோவிந்தனை துதிசெய். நீ போகும் காலம் வருகையில், நீ கற்ற எந்த கல்வியும் உன்னுடன் வராது, உன்னைக் காக்காது.
கோவிந்தனை துதிசெய்.  அவன் தாள் பற்று.
ஜெய ஜெய சங்கர
ஹர ஹர சங்கர

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!