கட்டுரை

பழந்தமிழர் இலக்கியங்களில் கார்த்திகை விளக்கீடு

341views
கார்த்திகை தீபம் (Karthigai Deepam) என்பது கார்த்திகை மாத பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் தமிழர் தமது இல்லங்களிலும் கோவில்களிலும் பிரகாசமான தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடும் ஒரு தீபத் திருநாள் ஆகும்.
பழந்தமிழரின் பெருவிழாவாக இந்த கார்த்திகை விளக்கீடு திகழ்ந்தது என்பதனை நீங்கள் அறிவீர்களா?? கிபி 10ஆம் நூற்றாண்டில், சோழர்கள் சூரிய ஆண்டுமுறை அறிமுகப்படுத்தாத வரை பொங்கல் விழா கிடையாது. அதற்குமுன் தைப்பூசம் மட்டுமே…. மராட்டியர், தெலுங்கர் நம்மை ஆளாத வரை தீபாவளி கிடையாது….. அதனால் பழந்தமிழருக்கு கார்த்திகை விளக்கீடு ஒரு பெரும் விழாவாக திகழ்ந்தது…..
தமிழகம் முழுவதும் திருக்கார்த்திகை மிகச் சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது. திருஞானச் சம்பந்தர் தமிழ் மறையில் திருமயிலைத் திருப்பதிகத்தில்,
“வளைக்கை மடநல்லார் மாமயிலைவண் மருகில்
துளக்கில் கபாலீச்சுரத்தான் தொல்கார்த்திகை நாள்
தளத்தேந்து இளமுலையார் தையலார் கொண்டாடும்
விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்”
என்று குறிப்பிடுகிறார். கி.பி.ஏழாம் நூற்றாண்டிலேயே இது “தொல் கார்த்திகைத் திருநாள்” என்றுக் குறிப்பிடப்படுகிறது என்றால், இந்த திருக்கார்த்திகை திருநாள் எவ்வளவு தொன்மையானது என்று விளங்கிக்கொள்ளலாம்.
ஒரு நிகழ்வுக்கு இயற்கையை உவமையாக்கும் வழக்கம் இருக்கிறது. ஆனால், சங்கக்கால புலவர்கள், தமிழர் ஒளித்திருநாளாம் கார்த்திகை விளக்கீட்டையே இயற்கைக்கு உவமையாக்கினார்கள் என்று சொன்னால் நம்ப முடிகிறதா?
நம் நாட்டில் சொல்லப்படும் ‘இலவம் பஞ்சில் துயில்’, ‘இலவு காத்த கிளி போல’ என்ற மூதுரைகளை நீங்கள் கேட்டிருப்பீர்கள். அந்த இலவமரப் பூவுக்கே ஔவையார் கார்த்திகை விளக்கீட்டை உவமையாக்கியுள்ளார்.
வானம் ஊர்ந்த வயங்கொளி மண்டிலம்
நெருப்பெனச் சிவந்த உருப்பவிர் அங்காட்டு
இலையில மலர்ந்த முகையில் இலவம்
கலிகொள் ஆயம் மலிபு தொகுபு எடுத்த
அருஞ்சுடர் நெடுங்கொடி பொற்பத் தோன்றி”
– (அகம்: 11: 1- 5)
வானத்தில் ஊர்ந்து செல்லும் ஒளிவட்டமான சூரியன், நெருப்பாகச் சிவந்து வெப்பத்தைக் கக்குகிறது. அவ்வெப்பத்தால் காய்ந்தது அழகிய காடு. அதனால் இலையற்றுப் போன இலவமரத்தில் ஒரு மொட்டும் விடாமல் எல்லா மொட்டும் மலர்ந்திருந்தன. அக்காட்சி அவ்வழியே சென்ற ஔவையாருக்கு, மங்கையர் கூட்டம் ஒன்றாகச்சேர்ந்து ஆரவாரத்தோடு ஏற்றிய அழகிய தீபங்களின் சுடர் கொடியாகப் படர்ந்து நீண்டு செல்வது போல் தோன்றியது.
சங்ககாலத் தமிழர் மலை உச்சியில் விளக்கேற்றி கார்த்திகை நன்னாளை பெருவிழாவாகக் கொண்டாடினர் என்பதை சங்கப்புலவரான பாலைபாடிய பெருங்கடுகோ என்ற அரசனே கூறியுள்ளார். இவரும் ஔவையாரைப் போலவே கார்த்திகை விளக்குக்கு இலவம் பூவை ஒப்பிடுகின்றார். அப்பாடலில் காதலி ஒருத்தி, தனது காதலன் கடந்துசென்ற வழியில் இருந்த மலையின் கொடுமையைக் கூறும் பகுதியை மட்டும் பார்ப்போம்.
“பைதுஅற வெம்பிய கல்பொரு பரப்பின்
வேனில் அத்தத்து ஆங்கண் வான்உலந்து
அருவி ஆன்ற உயர்சிமை மருங்கில்,
பெருவிழா விளக்கம் போலப் பலவுடன்
இலைஇல மலர்ந்த இலவமொடு
நிலையுயர் பிறங்கல் மலைஇறந்தோரே”
– (அகம்: 185: 8 – 13)
பசுமையே இல்லாது காய்ந்து கல்லாய் இருக்கும் மலை உச்சியிலுள்ள வெம்மையான அந்த வழியிலே, வானம் வறண்டு மழை அற்றுப்போனதால் அருவிகள் வற்றிப்போன, உயரமான மலை உச்சியிலிருந்த இலவமரங்கள் இலையே இல்லாது பூக்களாகவே மலர்ந்திருப்பது, கார்த்திகைப் பெருவிழா விளக்குகள் இருப்பது போலத் தெரியும் அந்த உயர்ந்த மலைத்தொடர்களைக் கடந்து சென்றார். இப்படி காதலனைப் பிரிந்த காதலியின் வேதனையைச் சொல்லும் இடத்திலும் கார்த்திகை விளக்கீட்டை மலை உச்சியில் பெருவிழாவாகக் கொண்டாடினர் என்ற வரலாற்றுச் செய்தியையும் பாலைபாடிய பெருங்கடுங்கோ எமக்குத் தந்துள்ளார். அந்நாளில் ‘பெருவிழா’ என்றாலே கார்த்திகைத் தீபவிழாவையே அது சுட்டியது என்பதையும் இப்பாடல் காட்டுகிறது.
அகநானூற்றில் இப்பாடலை எழுதிய பாலைபாடிய பெருங்கடுங்கோவே நற்றிணையின் ஒரு பாடலில் கார்த்திகை விளக்கீடு, கார்த்திகை நட்சத்திரத்தில் நடந்ததைக் காட்டுகிறார். கார்த்திகை மாதத்தில் சங்ககாலத் தமிழர்கள் அறம் செய்தார்கள் என்பதையும் அப்பாடல் காட்டுகிறது. காட்டு வழியே காதலனுடன் காதலி செல்கிறாள். காதலிக்கு தன்னுடன் நடந்து வருவதால் ஏற்படும் களைப்பு தெரியாதிருப்பதற்காக செல்லும் வழியில் உள்ளவற்றைக் காட்டி காதலன் சொல்கிறான்.
“கண்டிசின் வாழியோ குறுமகள்! நுந்தை
அறுமீன் கெழீய அறம்செய் திங்கள்
செல்சுடர் நெடுங்கொடி போலப்
பல்பூங் கோங்கம் அணிந்த காடே! -(நற்றிணை: 202: 8 – 11)
‘இளையவளே! நீ வாழ்வாயாக! உன் தந்தை அறம் செய்கின்ற கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரம் சேர்ந்து வரும் போது தொடர்ந்து செல்லும் தீப ஒளியின் நீண்ட வரிசையைப் போல கோங்கம் பூக்களால் அழகுபெற்று விளங்கும் காட்டைப் பார்’ எனக் காட்டுகின்றான். அறுமீன் என்பது கார்த்திகை நாளையும் அறம்செய் திங்கள் என்பது கார்த்திகை மாதத்தையும் குறிக்கும்.
பூக்களை கார்த்திகை தீப பெருவிழாவிற்கு உவமையாக்கியது சென்று, போர்களத்தில் ஓடும் குருதியையும் உவமையாக்கியுள்ளனர் புலவர். களவழி நாற்பதைப் பாடிய பொய்கையார் போர்களத்தில் பாய்ந்து ஓடிய குருதி கார்த்திகைத் தீப விளக்கைப்போல தொடர்ந்து ஓடுவது போல் அவருக்குத் தெரிந்திருக்கிறது.
“ஆர்ப்பு எழுந்த ஞாட்பினுள் ஆள் ஆள் எதிர்து ஓடி
தாக்கி எறிதர வீழ்தரும் ஒண்குருதி
கார்த்திகைச் சாற்றில் கழி விளக்குப் போன்றனவே
போர்க் கொடித் தானை பொருபுனல் நீர்நாடன்
ஆர்து அமர்அட்ட களத்து”
-(கள.நாற்பது: 17)
போர்க்கொடி ஏந்திய படையோடு சோழன் ஆரவாரித்து போர்க்களத்தில் போர் செய்கிறான். போர்வீரர்கள் ஒருவரோடு ஒருவர் எதிர்த்து ஒடி, குத்தி, வெட்டித் தாக்கி, தூக்கி எறிவதால் உடலில் இருந்து குருதி வழிந்து ஓடியது. அப்படி வழிந்தோடிய அந்த இரத்த ஆறு, கார்த்திகை திருவிழாவில் எண்ணமுடியாத அளவிற்கு ஏற்றப்பட்ட கார்த்திகை விளக்கின் தீபச்சுடர் அசைந்தாடி தொடர்ந்து செல்வது போல ஓடியதாம். சாறு என்றால் விழா. கார்த்திகைச் சாற்றில் என்பது கார்த்திகை விழாவில் எனப்பொருள் தரும்.

இந்த சங்க கால புலவர்களுக்கு பூக்களும் போர்க்களத்து இரத்த ஆறும் கார்த்திகைத் தீப விளக்குகளையும் கார்த்திகைத் தீபப் பெருவிழாவையும் ஞாபகப்படுத்தியது என்றால் அவர்கள் வாழ்ந்த சங்ககாலத்தில் வாழ்ந்த தமிழர்கள் கார்த்திகைத்தீபத் திருவிழாவுக்கு எவ்வளவு முதன்மை கொடுத்துதிருப்பார்கள் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். ஆனால் தற்போது தமிழர்களாகிய நாம் தீபாவளிக்குக் கொடுக்கும் மதிப்பைக்கூட கார்த்திகை விளக்கீட்டுக்குக் கொடுப்பதில்லையே!
சிந்திப்போம் செயல்படுவோம்!
நமது இல்லங்களில் விளக்கீட்டு
மீட்டு எடுப்போம் நமது தொன்மையான வரலாற்றை.
என்றென்றும் பேரன்பு தோழமையுடன்
ரெ குமரப்பா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!