சினிமாவிமர்சனம்

ஐப்பசியில் ஒரு மார்கழி…

280views
மார்கழி திங்கள் : திரைவிமர்சனம்
வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் திரைப்படம் “மார்கழி திங்கள்”
சிறு வயதிலேயே அம்மாவும் அப்பாவும் இறந்துவிட தாத்தாவின் அரவணைப்பில் வளரும் கவிதாவிற்கு தாத்தா மீது கொள்ளை பிரியம்.  ஒன்பதாம் வகுப்பு படிக்கும் வரை அந்த பள்ளியின் முதல் மாணவியாக வலம் வருகிறாள் கவிதா.
நன்றாக படிக்கும் வினோத் வந்த பிறகு நிலைமை தலைக்கீழாகி விடுகிறது. முதல் ரேங்க் இரண்டாம் ரேங்க் ஆகி விட்டதை சகித்துக் கொள்ளாமல் பத்தாம் வகுப்பில் மாவட்ட அளவில் முதல் மாணவியாக வருவதாக சவால் விடுகிறாள்.  அப்படி தான் தோற்றுவிட்டால் வினோத் 11ம் வகுப்பில் எந்த பிரிவில் சேருகிறானோ அதில் தான் சேர்வதில்லை எனவும் சபதம் செய்கிறாள்.  தேர்வில் மாவட்ட அளவில் முதல் மாணவியாக வந்தும் விடுகிறாள் கவிதா. தான் அப்படி வந்ததற்கு வினோத் தான் காரணம் என தெரிய வருகிறது. நாளடைவில் அது காதலாகவும் மாறுகிறது.
இரண்டு ஆண்டுகள் முடிகிறது. மேற்கொண்டு படிக்க கோயமுத்தூர் போவதா சென்னை போவதா என்பதில் இருவருக்கும் இடையில் வாக்கு வாதம் உருவாகிறது. இந்நிலையில் தங்கள் காதலை தன் தாத்தாவிடம் சொல்லி ஒப்புதல் வாங்கும் கவிதா தாத்தா விருப்பத்திற்கிணங்க மூன்று ஆண்டு பட்டப்படிப்பு முடியும் வரை தான் வினோத்தை பார்ப்பதில்லை என சத்தியம் செய்து படிக்க போகிறாள். மூன்றாண்டு படிப்பு முடித்ததும் தானே முன்னின்று திருமணம் நடத்தி வைப்பதாக சொன்ன தாத்தா தான் சொன்னது போல நடந்துக் கொண்டாரா என்பதே மார்கழி திங்களின் கதைக்களம்.
2004 ஆம் ஆண்டு என திரையில் காட்சி விழுகிறது.
ஓடும் பஸ்ஸில் ஜன்னல் ஓரத்தில் இருந்தபடியே கதை சொல்ல ஆரம்பிக்கும் கதாநாயகி தான் முதன் முதலாக அழ ஆரம்பித்தது அன்று தான் என சொல்ல தொடங்கியதுமே ஒரு குறுநாவலை வாசிக்கும் பரபரப்பு நம்மையும் அறியாமல் தொற்றிக் கொள்கிறது.

கவிதாவாக ரக்சனா நடித்திருக்கிறார். அறிமுகம் என்று சொல்ல முடியாத அளவிற்கு பொருத்தமாக இருக்கிறது அவரின் நடிப்பு. ஷியாம் செல்வன் வினோத்தாக வருகிறார். அவரும் அறிமுகம். கிராமத்து பள்ளிக்கூட பையனை கண் முன் கொண்டுவந்து காட்டும் முகச்சாயல். நக்சா இன்னொரு கதாயநாயகி. கவிதாவின் தோழி ஹேமாவாக வருகிறார். சந்திப்புக்கு குறையில்லை.
தாத்தா ராமையாவாக பாரதிராஜா நடித்திருக்கிறார். கண்டிப்பு பாசம் அழுகை என அவரின் அத்தனை மேனரிசங்களும் வெளிப்படும் இடங்கள் அருமை.
சுசீந்திரன் தர்மா என்ற கதாபாத்திரத்தில் வருகிறார். வில்லத்தனம் கலந்த நடிப்பு. மனிதருக்குள் ஒரு நல்ல நடிகன் இருக்கிறான். ஆரம்பத்தில் பாரதிராஜாவிடம் பேசும் காட்சியிலாகட்டும், சாதிக்கெதிராக நடத்தும் வன்முறை சீனாகட்டும் இரண்டும் மிரட்டல் ரகம்.
இசைஞானி இளையராஜாவின் இசை அவ்வளவாக ஈர்க்கவில்லை. பின்னணி இசையும் சுமார் தான். புடிச்சிருக்கு ..பாடல் பன்னீர் புஷ்பங்கள் படத்தில் வரும் காதல் காட்சிகளை மனதிற்குள் கொண்டுவந்து அசைபோட்டு பார்க்கிறது. இருந்தும் அன்று போல் இது இல்லையே என்கிற ஏக்கம் எட்டிப்பார்க்கவே செய்கிறது. இளையராஜாவின் இசையில் சமீபத்தில் அவர் இசையமைத்து வெளிவந்த ஒரு சில பாடல்களின் சாயலை இதிலும் கேட்க முடிகிறது.
வாஞ்சிநாதன் முருகேசனின் ஒளிப்பதிவு பொள்ளாச்சியை அழகாவே காட்சிப்படுத்தி இருக்கிறது. தியாகுவின் படத்தொகுப்பு ஒரு காதல் கதைக்கு என்ன தேவையோ அதை சரியாகவே செய்திருக்கிறது.

கதை, திரைக்கதை , வசனம் தயாரிப்பு : சுசீந்திரன்.  உண்மை சம்பவம் ஒன்றை திரையில் சம்பவமாக்கி இருக்கிறார்.  மனோஜ் பாரதிராஜா இயக்குனராக அறிமுகமாகி இருக்கும் இந்தப் படத்தில் அவரின் பங்களிப்பு ஒரு சில இடங்களில் நிறைவாகவும், ஒரு சில இடங்களில் குறைவாகவும் தென்படுகிறது. பாரதிராஜாவின் மகன் என்கிற தகுதியை அவர் தக்க வைக்க நிறைய உழைக்க வேண்டும்.
மென்மையான காதல் கதை – உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது என எத்தனை ஆணிகளை அடித்துக்கொண்டே போனாலும் ஆட்டம் காணும் அடித்தளத்தை நிப்பாட்ட முடியவில்லை.
அலுத்து உளுத்துப்போன ஒரு கதை தான். இருந்தாலும் புறந்தள்ளக்கூடிய படம் இல்லை “மார்கழி திங்கள்”

Right Click & View Source is disabled.

error: Content is protected !!