சினிமாவிமர்சனம்

இடதுசாரி சிந்தனையை முன்வைத்து எடுக்கப்பட்ட பிரச்சார படமா ” புது வேதம்” ?

222views
புது வேதம் – திரை விமர்சனம்
விட்டல் மூவிஸ் தயாரித்திருக்கும் திரைப்படம் “புது வேதம்”
எதார்த்த வாழ்க்கைக்கு பக்கத்தில் இருந்து கதை சொல்லும் போது அந்த சினிமா மக்களால் கொண்டாடப்படும். அதை நல்ல சினிமா என்றும் விமர்சகர்கள் சொல்வதுண்டு.
சமூகத்தால் புறக்கணிப்பட்ட குழந்தைகள் குப்பைக் கொட்டும் இடத்தை தங்கள் வாழ்வாதாரமாக ஆக்கிக்கொள்ளும் கொடுமை எவ்வளவு துயரமானது என்பதை சொல்லும் படமா என்கிற பிரபமிப்பில் ஆரம்பமாகிறது நமது எதிர்பார்ப்பு.
.
பெற்ற தன் ஆறு வயது மகனை அனாதையாக தவிக்க விட்டுவிட்டு அடுத்தவனுடன் ஓடிவிடும் தாயின் அவலம், மனநல பாதிப்பில் குழந்தை பிறந்தது கூட தெரியாமல் கால் ஊனமுற்ற பிள்ளையை குப்பையோடு குப்பையாக போட்டு விட்டு கதறும் பித்துபிடித்த பெண்ணின் தனிமை, பருவ வயதில் என்ன செய்கிறோம் என்பது கூட தெரியாமல் பிள்ளை சுமந்து நிற்கும் வாழ்வை வெற்றிடத்தில் இருந்து துவங்க நினைக்கும் இளைஞி, இப்படி படம் முழுக்க சமூக சிந்தனைகளை சிதறவிட்டிருக்கிறது ‘புது வேதம்’.
வாழ்வாதரம் பாதிக்கப்படும் போது அதற்காக குரல் கொடுக்கும் சாமானியனின் குரலை காத்திரமாக பதிவு செய்ய முனைத்திருக்கும் இந்த புது வேதம் அதிகமான கிளைக்கதைகளால் அச்சு முறிந்த வண்டியைப் போல குப்புற விழுகிறது. பாரம் தாளாமல் விழந்ததை கடைசி வரை யாரும் உணரவில்லை என்பதே பரிதாபம்.

இமான் அண்ணாச்சியின் பாத்திரப்படைப்பும், சிசர் மனோகரின் கதாபாத்திர சித்தரிப்பும் கொஞ்சம் ஆறுதல்.

‘காக்கா முட்டை’ படத்தில் பெரியகாக்கா முட்டையாக நடித்த ஜெய் ஆகாஷ் இதில் ‘அறுமுகம்’ என்ற கதையின் முக்கிய பாத்திரமாக நடித்திருக்கிறார். அவரின் நடிப்பை பொறுத்தவரை ஓகே ரகம் தான்.
சின்ன காக்கா முட்டை ரமேஷ் இந்த படத்தில் இரண்டு கால் இல்லாத ‘பரட்டை’ என்ற கதாபாத்திரத்தில் வருகிறார். நடிப்பு பரவாயில்லை. இரண்டுகால் இல்லாமல் செயற்கை கால் வைத்து கொண்டு நடிக்க வைத்திருக்கும் இயக்குனரின் செயலில் நம்பத்தன்மை இல்லாமல் இருப்பதால் பாத்திரப் படைப்பின் மீது பெரிய ஈர்ப்பு வரவில்லை.
ராசாத்தியாக சஞ்சனா நடித்திருக்கிறார். அந்த உருண்டை கண்கள், பூசிய முகம், கருத்த நிறம் பார்க்க அந்த கேரக்டராகவே உருவாக்கி இருப்பதில் இயக்குனர் தப்பித்திருக்கிறார்.

படத்தில் இரண்டு பாடல்கள் பரவாயில்லை ரகம்.
கவிஞர் வா.கருப்பன் எழுதிய ‘அடி உன்னை பார்த்த நொடி இன்னும் நீளுதே’ பாடலாகட்டும் M மாரிமுத்து எழுதி இமான் அண்ணாச்சி முதல் முறையாக பாடியிருக்கும் ‘இந்திரா சந்திரா சுந்தரா ராரா…’ இரண்டும் கேட்கலாம்.

இசை ரபி தேவேந்திரன். பின்னணி இசை சுமார் தான்.
வேதம் புதிதில் மயக்கிய இசையை மீண்டும் கேட்க முடியவில்லை என்கிற ரசிகர்களின் ஏக்கத்தை தவிர்க்க முடியவில்லை.
ஒளிப்பதிவாளர் KV ராஜன், மற்றும் படத்தொகுப்பாளர் நவீன் குமார் படத்தை தூக்கி நிறுத்தி இருக்கின்றனர்.
இரண்டு ரூபாய் டாக்டர் ஜெயச்சந்திரன் நடித்திருக்கிறார். இரண்டுரூபாய் டாக்டராகவே வருகிறார். அவரின் இறுதி ஊரவலத்தை படத்தில் சேர்த்திருப்பது மரியாதைக்குரியதாக பார்க்க வைக்கிறது.

இந்த படத்தின் மூலம் இடதுசாரி சிந்தனையை முன்வைத்து பிரச்சார படம் எடுத்திருக்கிறாரா இயக்குனர் என்றால் அதான் இல்லை. நல்ல படத்தை சமூக அக்கறையுடன் கொடுக்க முன்வந்திருக்கிறார் இயக்குனர் ராசா விக்ரம். அதில் ஓரளவிற்கு வெற்றியும் பெற்றிருக்கிறார்.
இணைத் தயாரிப்பாளர் மஞ்சுநாத் புகழ் கவனிக்க கூடிய இன்னொரு படத்தை தயாரிக்க இந்தப் படம் அவருக்கு நிறைய சொல்லிக் கொடுத்திருக்கும் .
நிறைய கிளைக்கதைகளை சுமக்க வேண்டிய அவசியமில்லாத படத்தில் அனைத்தையும் தூக்கி பிடித்திருப்பதே இந்தப் படத்தின் தொய்விற்கு மிக முக்கிய காரணம்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!