சினிமாவிமர்சனம்

தெரிந்தும் தெரியாமலும் அவமானப்படுத்தப்பட்டவனின் கண்ணீருக்கு நியாயம் கேட்பதில்லை…

159views
தி ரோட் : திரை விமர்சனம்
AAA சினிமாஸ் தயாரித்து இருக்கும் திரைப்படம் “தி ரோட்”.
தேசிய நெடுஞ்சாலையை மையப்படுத்தி கதைசொல்லும் துணிச்சல் எத்தனை பேருக்கு வரும். மிக பிரபலமான திரிஷாவை மையப்படுத்திய கதையென சொல்லிக்கொண்டு ‘டான்சிங்ரோஸ்’ சபீரை மிக பிரமாண்டமாக திரையில் பரவ விடும் துணிச்சல் எத்தனை பேருக்கு வரும். இத்தனையும் ஒரே மனிதராக நின்று வலம் வருகிறார் அருண் வசீகரன். துணிச்சல் அதுவும் கண்மூடித்தனமான துணிச்சல் இல்லை என்பதை திட்டவட்டமாக நிரூபித்திருக்கும் படம் தான் இது.
திரிஷா – சந்தோஷ் பிரதாப் ஜோடிக்கு ஒரு மகன். சந்தோஷ் வைல்ட் லைப் போட்டோகிராப்பர். இந்த நேரத்தில் திரிஷா கர்ப்பமாக இருக்கிறார். இதனால் மகனின் பிறந்த நாளுக்கு கன்னியாகுமரி வரை நீண்ட தூர கார் பயணம் செய்ய திட்டமிட்டு இருந்ததை தள்ளி வைக்கின்றனர். மகன் வருத்தப்பட்டு விடுவானே என்ற காரணத்தால், தான் போகாமல் கணவனையும் மகனையும் அனுப்பி வைக்கிறார் திரிஷா.

இங்கு தான் கதை ஆட்சிலேட்டரை மிதிக்க ஆரம்பிக்கிறது. தொடக்க காட்சியில் ஒரு தம்பதி கார் பயணத்தில் கொலை செய்யப்படுவதாக காட்டப்படுவதை நம்மையும் அறியாமல் இனைத்து பார்க்க ஆரம்பித்த உடன் கதை ஜெட் வேகத்தில் பயணிக்க ஆரம்பிக்கிறது.
இருவரும் செல்லும் கார் விபத்தில் சிக்க இருவரும் பலியாகின்றனர்.
இப்படி ஒரு கதை நகர்ந்துக் கொண்டிருக்கும் போதே சம்பந்தமே இல்லாமல் எதிர் திசையில் இருந்து ஒரு கதை எட்டிப் பார்க்கிறது. ‘டான்சிங் ரோஸ்’ சபீரை வேறு கெட்டப்பில் காட்டுகின்றனர், அவர் ஒரு கல்லூரி பேராசிரியர். தன் ஸ்டூடன்ட் தன்னை காதலிப்பதை தவிர்க்கும் அவரை பலர் முன் அவமானப்படுத்தி கல்லூரியை விட்டு வெளியேற்றி விடுகிறாள் அந்த மாணவி. இதனால் வேலை பறிப்போகிறது. அவமானத்தில் அவருடைய தந்தை வேல ராமமூர்த்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கிறார். ஏண்டா இந்த கதையை இப்போ சொல்றாங்க என்கிற பொறுமை இழப்பை கொஞ்சமாக தள்ளிவைத்தோமானால் அக்கதையின் மிகப்பெரிய திருப்பு முனைக்கு இது தான் காரணம் என்பதை அலட்டிக்கொள்ளாமல் நிதானமாக துப்பறியும் சாம்புவாக திரிஷாவை வைத்துக்கொண்டு சொல்கிறார் இயக்குனர்.

தன் கணவன், மகன் இறந்தது விபத்தாக இருந்தாலும் அது விபத்து கிடையாது. அது ஒரு நெட் ஒர்க்கின் மூலம் செயல்படும் ஒரு கூட்டத்தின் பின்னணி செயல்களில் ஒன்று என்பதை தன் துப்பறியும் பத்திரிகையாளர் மூளை கண்டுப்பிடிக்க திரிஷாவின் தோழியை போல நாமும் அதிர்ந்து போகிறோம்.
கதை இரண்டாம் பாகம் வர வாய்ப்பிருப்பதாக இயக்குனர் சொல்லி இருப்பதால் முதல் பாகத்தை கவனமாக பார்க்கவும்.
செமையான கதை, தோய்வில்லாத திரைக்கதை, அட்டகாசமான பாத்திரத் தேர்வு, இப்படி கொண்டாடும் அம்சங்கள் பெரிதாக படத்தில் தெரியா விட்டாலும் அலுப்பில்லாமல் விரசமில்லாமல் உணர்வு பூர்வமாக பார்க்க வைத்திருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.
படத்தில் மாயாவாக சபீரும், மீராவாக திரிஷாவும் ஸ்கோர் செய்கின்றனர். மற்றபடி சந்தோஷ் பிரதாப், மியா ஜார்ஜ், விவேக் பிரசன்னா, M.S. பாஸ்கர், வேல ராமமூர்த்தி அனைவரும் தங்கள் பங்கை சரியாகவே செய்திருக்கின்றனர் எனலாம்.
ஒளிப்பதிவு – KG.வெங்கடேஷ். நெடுஞ்சாலை விபத்தாகட்டும், இரவு நேர காட்சியாகட்டும் அருமையாக தனது காமிராவில் பதிவு செய்திருக்கிறார். படத்தொகுப்பு – A.R.சிவராஜ். எவ்வளவு சரியான தேர்வு என்பது படம் பார்க்கும் போது உங்களுக்கே தெரியும்.

சாம் CS பிண்ணனி இசையில் ஜமாய்க்கிறார். பாடல்கள் பெரிதாக கவரவில்லை.
எழுதி இயக்கி இருக்கும் அருண் வசீகரன் நம்பிக்கைக்கு உரியவராக தெரிகிறார். சமரசம் செய்து கொள்ளாத அவரின் துணிச்சல் இந்த விமர்சனத்தின் முதல் பத்தியினை மீண்டும் ஒரு முறை நீங்கள் வாசித்ததால் அறிந்துக் கொள்ளலாம்.
மொத்ததில் ‘தி ரோட்’ இரவில் சரியான வேகத்தில் சரியான திசையில் பயணிக்கிறது.
என்னதான் ட்ரைவர் வண்டியை சரியாக ஓட்டினாலும் எதிரில் குறுக்கில் வருபவனுக்கு சாலை விதிகளை மதிக்கும் நேர்மை இருக்குமாயின் விபத்தில்லாமல் பயணிக்கும் இந்த “தி ரோட்”.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!