சினிமாவிமர்சனம்

‘கெழப்பய’ அனுதாபத்தை தாண்டிய அட்டகாசம்…

213views
கெழப்பய : திரை விமர்சனம்
ராம்சன் கிரியேஷன்ஸ், சீசன் சினிமா தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கெழப்பய’.
தமிழ் சினிமாவின் அத்தனை அடையாளங்களையும் சுத்தமாய் துடைத்தெறிந்துவிட்டு, பார்வையாளனை கைப்பிடித்து இன்னொரு தளத்திற்கு இட்டுச்செல்லும் புதிய முயற்சி இந்த படம்.
நான்கு ஆண்கள் ஒரு நிறைமாத பெண் என மொத்தம் ஐந்து பேருடன் ஒற்றையடி பாதையில் பழைய மோரிஸ் மைனர் கார் ஒன்று வருகிறது. காருக்கு முன்னே ஒரு வயதான பெரியவர் தன் பழைய சைக்கிளில் சென்றுக் கொண்டிருக்கிறார். அவர் வழி விட்டால் தான் அந்த கார் மேற்கொண்டு பயணிக்க முடியும்.
ஹாரன் அடித்தும் அவர் நகராததைப் பார்த்து அவருக்கு காது கேட்காதோ என வண்டியை நிறுத்தி அருகில் சென்று விசாரிக்கின்றனர். அவர் ஒருவேளை புத்தி சுவாதீனம் இல்லாதவரா என பார்த்தால் அவர் நன்றாக இருப்பதாக படுகிறது. அவர் எதற்காக வழியை மறிக்கிறார் என புரியாமல் ஒவ்வொருவரும் அவருடன் பேச பேச பிரச்சனை பெரிதாகி கொண்டே போகிறது. இதற்குள் அங்கு கிராம நிர்வாக அலுவலர் வந்து சேர்கிறார். அவரும் வண்டியில் வந்தவர்களுக்கு சாதகமாகவே பேச பெரியவர் வழியை விடாமல் இருப்பதற்கு என்ன வழி என யோசிக்கிறார். இதற்குள் அவரை அடித்தும் விடுகின்றனர்.

ஒரு கட்டத்தில் காரின் சாவியை எடுத்து எறிந்துவிடுகிறார் பெரியவர். இப்போதுதான் நமக்கே அந்த பெரியவரின் செய்கை மீது வெறுப்பு வருகிறது. சாவியில்லாமல் வண்டியை எடுக்க மாற்றுத்திட்டத்தை அவர்கள் பிரயோகம் செய்ய காரின் சக்கரத்தில் இருந்து காற்றை பிடுங்கி விடுகிறார். தொடந்து நடைபெறும் இந்த செயல்களால் அவர்களைப் போல் நாமும் பொறுமை இழக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறோம் . இதற்குள் இடைவேளையும் வந்து விடுகிறது.

பெரியவர் ஏன் அவ்வாறு நடந்துக் கொண்டார். வழி மறிக்க காரணம் என்ன என்பதை கிளைமாக்ஸ் காட்சிகளால் சொல்லும் பொது நம்மையே அறியாமல் கைத்தட்டி விடுகிறோம்.

உலக சினிமாக்களின் தரத்தை தொட்டிருக்கிறது திரைப்படம்.
இப்படி ஒரு சினிமாவுக்கு தொழில் நுட்பம் ரொம்ப அவசியம். ஒளிப்பதிவாளர் அஜித்குமார் மற்றும் படத்தொகுப்பாளர் KN ராஜேஷ் அறிமுகமாக இருந்தாலும் அதிரடியாக களத்தில் விளையாடி இருப்பது நீண்ட திரைப்பயணத்திற்கு அவர்கள் தயாராகிக்கொண்டிருப்பது தெரிகிறது.
இசையமைப்பாளராக கேப்பி அறிமுகம் என்றாலும் சரியான தேர்வு. பாடல்கள் இல்லாத குறையை பின்னணி மூலம் நிவர்த்தி செய்கிறார். தம் மர தம்…என்ற நேற்றைய ஹிந்திப் பாடல் திரையில் நிறைவு காட்சிகளில் ஒலிக்க விட்டிருப்பது லேசான ஆறுதல்.
எழுதி இயக்கி இருக்கும் யாழ் குணசேகரன் எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் முதல் படம் தனக்கு இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற பிடிவாதம் படத்தில் வெளிப்பட்டிருப்பதில் அவரின் திரை அனுபவம் ரசிகனுக்கு மிகப்பெரிய கிஃப்ட் என்று தான் சொல்ல வேண்டும்.
பெரியவரின் பாத்திரப் படைப்பில் காட்டியிருக்கும் மெனக்கெடல் பாராட்டலாம். கிளைமாக்ஸ் கொஞ்சம் மெலோ டிராமா வாசம் அடிப்பதை தவிர்த்திருக்கலாம்.
கதிரேஷ்குமார் இந்தப்படத்தில் சுந்தரேஸ்வரன் என்கிற கெழப்பய பாத்திரத்தில் வ்ருகிறார். மனிதர் அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நேற்றைய திரைப்பட கல்லூரி மாணவர் என்பதும் 30 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் தனக்கென்று ஒரு அடையாளம் கிடைக்காமல் போராடிக் கொண்டிருந்தவருக்கு இந்த படம் மிகப்பெரிய புகழை தரும் என்பதில் சந்தகமில்லை.
படத்தில் நடித்தவர்களில் விஜய ரணதீரன் அடுத்தடுத்த இடத்திற்கு வர சாத்தியங்கள் இருக்கின்றன.
உலக திரைப்படம் பார்க்கும் அனுபவத்தை பார்வையாளனுக்கு கடத்தி இருப்பதில் கெழப்பய அனுதாபத்தை தாண்டி அட்டகாசம் என்றே சொல்ல வைக்கிறது நம்மை.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!