சினிமா

அவதார் 2 – திரை விமர்சனம்

228views
அவதார் 2 பார்த்தேன்
டைட்டானிக், அவதார் 1 ,2 என ஜேம்ஸ் கேமரூனின் அனைத்து படங்களையும் பச்சை தமிழர்களைக் கூட திரையரங்கிற்கு வரவைத்து பார்க்க வைப்பதே அவரது சாதனை தான்…
நமக்கு தெரிந்ததெல்லாம் கெண்டை கெழுத்தி எரா சுரா மீன் வகையரா தான்,ஆனால் பாண்டோரா மீன்களோ ஒவ்வொன்றும் மெகா சைசிஸ் கப்பலையே கண நேரத்தில் துவம்சம் செய்துவிடுகிறது.
பறவை மீனாகிறது, மீன் பறவையாகிறது…
கற்பனை சிறகடிக்கிறது.
எதார்த்த உலகத்திற்கும் பாண்டோரா உலகத்திற்கும் ஏணி வைத்தால் கூட எட்டாது.
ஒத்துவரும் ஒரே விஷயம் ஹீரோ வில்லன் பழிவாங்கல் கதை தான்.
எல்லா மூஞ்சியும் ஒரே மாதிரி இருக்கிறது.எல்லா மூக்கும் பட்டையாக செப்பு தகடு போல இருப்பதால் வனவாசி கடல்வாசி அப்பா மகன் அம்மா எதிர்வீட்டுக்காரர்,பக்கத்து வீட்டுக்காரர் எல்லாமே ஒரே மாதிரி தான் இருக்கிறார்கள்.
மேனியின் வண்ணம் கொண்டே கொஞ்சம் கிரகிக்க முடிகிறது.நீலவண்ண கண்ணன் கலரென்றால் வன வாசிகள்,லைட் கிரீன் ஷேடோ தெரிந்தால் கடல்வாசிகள்.
பட்டை மூக்கு வில்லனும் பட்டையை கிளப்புகிறார்.ஏழரை சனி என்ற நமது மண்ணின் சங்கதியை ஹாலிவுட் சினிக்குள் செருகிற வசன கர்த்தாவை பாராட்டலாம்.
நான் உன்னை உணர்கிறேன் என்று அடிக்கடி பலர் பலரிடம் சொல்கிறார்கள்,அதை நாமும் உணர முடிகிறது.
கண்ணால் பேசும் பெண்ணே போல கண்ணால் பேசும் மீனே வந்து கண்ணால் பேசுகிறது.நல்ல வேளை மானே தேனே எல்லாம் பாடவில்லை.
மரங்களின் கிளைகளோடும் தண்டுகளோடும் தலைமுடியை கனெக்ட் செய்தால் ( நயன்தாரா படத்தின் பெயரை நினைவூட்டியது தவறுதான்)
ஆன்மீக உணர்வுகள் கிட்டுகின்றன.
கடந்த காலம் எதிர்காலம் எல்லாம் மனசுக்குள் படத்துக்குள் படமாய் ஓடுகின்றன.அவை வாழ்க்கை பாடமாகவும் அமைகின்றன.
எல்லா அவதார்களும் கொஞ்சம் மட்டும் ஆடைகள் அணிந்திருந்தாலும் கொஞ்சமும் கவர்ச்சியே இல்லை.
பதினஞ்சு அடி உயரம் பட்டை மூக்கு ஜிலேபி கண்ணு எல்லாம் எதையோ தென்னை மரத்தை அண்ணார்ந்து பார்ப்பது போன்ற உணர்வை தருகின்றன.
இந்த மனுஷப் பய புள்ளைக எந்த கிரகத்துக்கு போனாலும் இயற்கைக்கும் மத்த எல்லாருக்கும் ஆபத்துதான் என்பது புரிகிறது.
கடைசி கட்ட காட்சிகள் டைட்டானிக் கவிழ்ந்த காட்சிகளை நினைவூட்டுகின்றன.
நம்ம பிரபுசாலமன் கூட மைனாவுக்கு பிறகு அந்த பஸ் ஆக்சிடென்ட் சீனை டெவலப் பண்ணி என்வலப் ஒட்டி தொடரி படம் எடுத்தது போல.
மொத்தத்துல அவதார் புதுசா ஒரு உலகத்துல கொஞ்சம் அலைஞ்சி திரிஞ்சி வந்தாப்போல உணர முடிகிறது.
நீங்களும் பாண்டோராவுல கண்டிப்பா அலைகளோட மீன்களோடு மரங்களோட மலர்களோட கடலுக்கடியில கொஞ்சம் அலஞ்சு திரிஞ்சு பாருங்களேன்….
 காரைக்கால் கே.பிரபாகரன்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!