பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கி கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலின் சார்பில் மாதம் தோறும் பவுர்ணமி தினத்தன்று லட்சக்கணக்கான பக்தர்களும், தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், கார்த்திகை தீபம், சித்ரா பௌர்ணமி உள்ளிட்ட திருவிழா காலங்களில் பல லட்சம் பக்தர்களும் 14 கிலோமீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப் பாதையில் கிரிவலம் வந்து அண்ணாமலையாரை வழிபடுவது வழக்கம்.
கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வந்த நிலையில் மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசாங்கமும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. அதன் ஒரு பகுதியாக திருக்கோவில்களுக்கும், திருவிழாக்களுக்கும், கிரிவலத்திற்கும் தடை விதித்து உத்தரவிட்டது.அதன்படி திருவண்ணாமலை கிரிவலத்திற்கும் கடந்த இரண்டு ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்டது.
தமிழக அரசு பொறுப்பேற்ற 8 மாத காலங்களில் தமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தொற்று முற்றிலுமாக குறைந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக கிரிவலத்திற்கு தடை விதித்திருந்த மாவட்ட நிர்வாகம் இந்த பங்குனி மாத பௌர்ணமிக்கு அனுமதி அளித்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உத்தரவிட்டிருந்தார்.
நேற்று மதியம் பௌர்ணமி தொடங்கியது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பல்வேறு மாவட்ட மாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தந்து ராஜகோபுரம் அருகே தீபம் ஏற்றி கிரிவலப்பாதையில் உள்ள இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எம லிங்கம் உள்ளிட்ட அஷ்ட லிங்கங்களை வழிபட்டு கிரிவலம் மேற்கொள்கின்றனர். அதேபோல் அண்ணாமலையார் திருக்கோவில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கிரிவலம் வரும் பக்தர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்த நிலையில், பக்தர்களில் ஒரு சிலர் மட்டுமே முக கவசம் அணிந்து சென்றது குறிப்பிடத்தக்கது.