தமிழகத்தில் இன்று முதல் தியேட்டர்கள், உணவகங்களில் 100 சதவீதம் வாடிக்கையாளர்கள் இயங்க இன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு நேற்றுடன் முடிவடைந்தது. கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் வழங்குவது குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த கூட்டம் மருத்துவ வல்லுநர்கள், சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் மார்ச் 2 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில் தமிழகத்தில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்துள்ள நிலையில் புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை அன்று மழலையர் பள்ளிகள் சங்கத்தினர் தமிழக முதல்வரை சந்தித்து 2 ஆண்டுகளுக்கு மேல் பள்ளிகளை திறக்காமல் இருப்பதை கருத்தில் கொண்டு இந்த முறை பள்ளிகளை திறக்க உதவுமாறு கோரிக்கை விடுத்தனர். அதன்படி வரும் 16 ஆம் தேதி முதல் நர்சரி, மழலையர், விளையாட்டுப் பள்ளிகளை திறக்க அனுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
மேலும் திருமண நிகழ்ச்சிகளில் 200 பேருக்கு மிகாமல் கலந்து கொள்ளலாம். இறப்பு நிகழ்ச்சிகளில் 100 பேருக்கு மிகாமல் கலந்து கொள்ளலாம். தமிழகத்தில் இன்று முதல் பொருட்காட்சிகள் நடத்த அரசு அனுமதி அளித்தது. அதே நிலையில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சமுதாய, கலாச்சார, அரசியல் நிகழ்வுகளுக்கான தடைகள் தொடர்கிறது. அது திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் உடற்பயிற்சி கூட்டங்கள், அழகு நிலையங்களுக்கும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
ஷாப்பிங் மால்கள், வணிக வளாகங்களிலும் 100 சதவீத வாடிக்கையாளர்களை கொண்டு இயக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. அது போல் உணவகங்களில் இதுநாள் வரை 50 சதவீதம் பேர் வரை மட்டுமே அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் இன்று முதல் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த தளர்வுகள் எல்லாம் இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றன. ஏற்கெனவே தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்புகள் வரை கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.