பாஜகவை நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்ததற்கு, புதுச்சேரியைப் போன்று தமிழ்நாட்டிலும் ஆட்சியைக் கைப்பற்றுவோம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலடி அளித்துள்ளார்.
குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மக்களவையில் நேற்று நடைபெற்றது. இதில் பேசிய ராகுல் காந்தி, குடியரசுத் தலைவர் உரை நாட்டின் தலைமைக்கான உரையாக இல்லாமல் அரசு அதிகாரிகள் கொடுத்த தகவலாக இருப்பதாகக் கூறினார். மேலும், வாழ்நாளில் ஒரு போதும் தமிழ்நாட்டில் உங்களால் ஆதிக்கம் செலுத்த முடியாது எனவும், தமிழ்நாட்டிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டும் எனவும் பாஜகவை நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்திருந்தார்.
இது குறித்து தற்போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது பதில் கருத்தை ட்விட்டர் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், வரலாற்றை ஒருபோதும் மறக்க வேண்டாம் என்றும், இலங்கை தமிழர்கள் அனுபவித்த கொடுமைகளுக்கும், ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டதற்கும் காங்கிரஸே காரணம் எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
புதுச்சேரியில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், பிரதமர் மோடியின் உன்னத நோக்கத்தை புதுச்சேரி மக்கள் ஏற்றுக்கொண்டு விட்டதாக தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டு மக்களும் பாஜக மற்றும் பிரதமர் மோடியின் பக்கம் நிற்பதாகவும், விரைவில் தமிழ்நாட்டிலும் பாஜக ஆட்சிக்கட்டிலில் அமரும் எனவும் அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.