நடிகர் விஜய் கடந்த 2012-ம் ஆண்டு இறக்குமதி செய்த சொகுசு காருக்கு தமிழக அரசு விதித்த நுழைவு வரியை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்ததுடன், கடும் கண்டனம் தெரிவித்தார்.
அதை எதிர்த்து நடிகர் விஜய் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு மூத்த நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா தலைமையிலான அமர்வு, தனி நீதிபதியின் கண்டனத்தை தீர்ப்பில் இருந்து நீக்கியது.
இந்தநிலையில், 2005-ம் ஆண்டு இறக்குமதி செய்யப்பட்ட மற்றொரு சொகுசு காருக்கு தமிழக அரசு விதித்துள்ள நுழைவு வரியை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் நடிகர் விஜய் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
அமெரிக்காவில் இருந்து கடந்த 2005-ம் ஆண்டு பி.எம்.டபிள்யூ. சொகுசு காரை வாங்கினேன். அப்போது, இறக்குமதி வரியை முறையாக செலுத்திவிட்டேன்.
இந்த காருக்கு தமிழக அரசு நுழைவு வரி விதித்ததை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். ஐகோர்ட்டு உத்தரவின்படி என் கார், வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டது.
மாநில அரசுகள் நுழைவு வரி விதிப்பதை எதிர்த்து பல்வேறு ஐகோர்ட்டுகள் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கின. இறுதியாக சுப்ரீம் கோர்ட்டு, நுழைவு வரி விதிக்கலாம் என்ற தீர்ப்பு அளித்தது.
இதற்கிடையில், இந்த பி.எம்.டபிள்யூ. காரை கடந்த 2009-ம் ஆண்டு தீபக் முரளி என்பவருக்கு விற்பனை செய்துவிட்டேன்.
இந்தநிலையில், நுழைவு வரி தொடர்பாக கடந்த 2019-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டு டிவிசன் பெஞ்ச் அளித்த தீர்ப்பை சுட்டிக்காட்டி, அந்த காருக்கு நுழைவு வரியாக ரூ.7 லட்சத்து 98 ஆயிரத்து 75 செலுத்த வேண்டும் என்றும், அதற்கு அபராதமாக ரூ.30 லட்சத்து 23 ஆயிரத்து 609 செலுத்த வேண்டும் என்றும் வணிகவரித்துறை உதவி ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஐகோர்ட்டு தீர்ப்பை தவறாக புரிந்துகொண்டு இவ்வாறு உத்தரவிட்டுள்ளார். ஐகோர்ட்டு தீர்ப்பில், நுழைவு வரி செலுத்துவது செல்லும் என்று கூறியுள்ளதே தவிர, நுழைவு வரியை செலுத்த வேண்டும் என்று உத்தரவிடவில்லை.
அதுமட்டுமல்ல, நுழைவு வரி சட்டத்தின்படி, சொகுசு கார் இறக்குமதி செய்யப்பட்டு 3 ஆண்டுகளுக்குள் வரி நிர்ணயம் செய்ய வேண்டும். தற்போது பல ஆண்டுகள் ஆகிவிட்டன.
எனவே, நுழைவு வரி செலுத்தும்படி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.சரவணன், ‘இதே கோரிக்கையுடன் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்குடன் சேர்த்து, விஜய் வழக்கும் வருகிற பிப்ரவரி 1-ந் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். இந்த விசாரணை முடியும் வரை அபராதத்துடன் கூடிய நுழைவு வரியை வசூலிக்க எந்தவிதமான நடவடிக்கையையும் விஜய்க்கு எதிராக அதிகாரிகள் மேற்கொள்ளக்கூடாது’ என்று உத்தரவிட்டார்.