மெரினா, பெசன்ட்நகர் கடற்கரைகளில் நாளை முதல் பொதுமக்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்ததை தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்திருந்தது.
மெரினா, பெசன்ட்நகர் உள்ளிட்ட கடற்கரைகளில் பொதுமக்கள் கூட அரசு தடை விதித்திருந்தது.
தற்போது தொற்று பரவல் குறையத் தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளை கடந்த 28-ம் தேதி முதல் அரசு விலக்கிக் கொண்டது. குறிப்பாக, இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்குஆகியவை விலக்கிக்கொள்ளப்பட்டது. பள்ளி, கல்லூரிகளை திறக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது. வார இறுதி நாட்களில் வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு விதிக்கப்பட்ட தடையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக நாளை முதல்சென்னை மெரினா கடற்கரை, பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரை ஆகியவற்றுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதிக்கப்பட உள்ளனர்.
இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடியிடம் கேட்டபோது, ”மெரினா, பெசன்ட் நகர் கடற்கரை பகுதிகளில் பொதுமக்களை அனுமதிப்பது தொடர்பாக மாநகர காவல் ஆணையருடன் ஆலோசனை நடத்தினேன். இதில், பொதுமக்களை அனுமதிக்கலாம். அதே நேரத்தில்கரோனா பரவல் தடுப்பு வழிமுறைகளான சமூக இடைவெளியை கடைபிடித்தல், முகக் கவசம் அணிதல் போன்றவற்றை முறையாக கடைபிடிக்க வேண்டும். விதிகளை மீறினால் அபராதம் விதிக்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறோம்” என்றார்.