தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் 19-ந்தேதி ஒரே கட்டமாக நடத்தப்படுகிறது. இதையடுத்து தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. இதையடுத்து சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் அரசியல் கட்சியினர் தங்களது வேட்பு மனுக்களை இன்று முதல் தாக்கல் செய்யத் தொடங்கினார்கள். திமுக, அதிமுக கூட்டணியில் இன்னும் வார்டு பங்கீடு பேச்சுவார்த்தைகள் தொடங்கி உள்ளன.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் கே.எஸ்.அழகிரி, செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் சந்தித்து பேசினர். அப்போது இடப்பங்கீடு தொடர்பாக ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.
பேச்சு வார்த்தைக்குப்பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதாவது, “தமிழ்நாட்டின் உரிமைகளை ஒன்றிய அரசிடம் கேட்டு பெற வேண்டும் என்று முதல்வரிடம் வலியுறுத்தினேன். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 2 தினங்களில் மாவட்ட அளவிலான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
காங்கிரஸ் எத்தனை இடங்களில் போட்டியிடுவது குறித்து பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. நாங்கள் கேட்ட இடங்களை தருவது பற்றி பரிசீலிப்பதாக திமுக தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு உள்ள இடங்களில் வார்டுகளை கேட்போம். வெற்றிவாய்ப்புள்ள இடங்களைக் கேட்டுப்பெறுமாறு மாவட்ட நிர்வாகிகளிடம் அறிவுறுத்தியுள்ளோம்.
ரிசர்வ் வங்கி ஒன்றிய அரசு கட்டுப்பாட்டில் உள்ளதால் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு எழுந்து நிற்கவில்லையா? அவர்கள் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்களா என்ன? தமிழ் தெரிந்தவர்களே அமர்ந்திருந்தது கண்டிக்கத்தக்கது, நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறினார்.