தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் (MBBS) மற்றும் பி.டி.எஸ் (BDS) படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.
தமிழ் நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 4,349 எம்.பி.பி.எஸ் இடங்கள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 2,650 எம்.பி.பி.எஸ் இடங்கள் என மொத்தம் 6,999 எம்.பி.பி.எஸ் இடங்களும், அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 1,930 பி.டி.எஸ் படிப்புகளுக்கான இடங்களும் உள்ளன.
நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் இவற்றுக்கான தரவரிசைப் பட்டியல் நேற்று முன் தினம் வெளியிடப்பட்டது. அதன்படி இன்று சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் கலந்தாய்வு தொடங்குகிறது. இன்று சிறப்பு பிரிவினரான, மாற்றுத்திறனாளிகள் மற்றும் ராணுவ வீரர்களின் வாரிசுகள் ஆகியோருக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது.
நாளை மற்றும் நாளை மறுநாள் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டுக்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது. 7.5 சதவிகித மருத்துவக் கல்வி இட ஒதுக்கீட்டில் 436 இடங்கள் எம்.பி.பி.எஸ் படிப்புகளுக்கும், 97 இடங்கள் பி.டி.எஸ் படிப்புகளுக்கும் என மொத்தம் 533 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதனை தொடர்ந்து ஜனவரி 30 ஆம் தேதி முதல், பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கி நடைபெறுகிறது. கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு இந்த கலந்தாய்வு ஆன்லைனில் நடத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.