அதிமுகவை சேர்ந்த முன்னாள் மின்துறை அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதிமுகவின் முன்னாள் மின்துறை அமைச்சராக இருந்தவர் தங்கமணி. அவருக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல், ஈரோடு, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் 60க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. மேலும், சோதனை நடைபெறும் இடங்களின் எண்ணிக்கை கூடலாம் என கூறப்படுகிறது.
முன்னதாக, அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மீது எழுந்த ஊழல் புகாரின் அடிப்படையில் ஒவ்வொருவர் வீடாக லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் தொடர்ந்து சோதனை செய்து வருகின்றனர். அவ்வகையில் முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, கே.சி.வீரமணி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடந்தது. இந்த சோதனைகளில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றபட்டதாக தகவல்கள் வெளியாகின.
இந்த வரிசையில் தற்போது அதிமுக முன்னாள் மின்துறை அமைச்சர் தங்கமணி வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர். இதனால் அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சோதனை நடக்கும் தங்கமணி வீட்டில் அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் திரண்டுள்ளனர். இதனையொட்டி அங்கு பாதுகாப்பு பணிக்காக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.