அ.தி.மு.க., தலைமை அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஜெயக்குமார் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதிமுக தலைமைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 3-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதையடுத்து அலுவலகத்திற்கு வெளியே சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது. ஏற்கெனவே அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட புகழேந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது, மற்ற அதிமுக தொண்டர்கள் புகழேந்தியை தாக்கினார்கள். இதனால் அலுவலகம் முன்பு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, அதிமுகவினருக்கு முறையான போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார், ஆணையர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார். அதில், கழகத்தில் அடிப்படை உறுப்பினராக இல்லாதவர்கள், கழகத்திலிருந்து நீக்கப்பட்டவர்கள், மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆகியோர் மனு தாக்கல் செய்ய வேண்டுமெனக் கலவரத்தை ஏற்படுத்துவதாகவும் இதனால் முறையான நடவடிக்கை எடுத்து தங்களுக்கு உரியப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் ஜெயக்குமார் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ‘கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் மீண்டும் கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர். இதனை எப்படி அனுமதிக்க முடியும்? சட்டம் ஒழுங்கை பாதுகாக்க போலீஸ் கமிஷனரிடம் மனு கொடுத்துள்ளோம்’ என்று செய்தியாளர்கள் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார் ஜெயக்குமார். அதுமட்டுமின்றி, ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்குத் தகுதியான எவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதை யாராலும் தடுக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.