ஆன்மிகம்

திருவரங்கம் பெரியகோயில் “முத்தமிழ் விழா” நடைபெறுகிறது

276views
அரங்கனுக்குத் தமிழ் வேத திருஅத்யயன விழா !
ஆழ்வார்களின் தீந்தமிழ் அருளிச் செயல் விழா !
அரையர்களின் கொண்டாட்ட விழா !
திவ்யப் பிரபந்தப் பண் இசை விழா !
திருமொழித் திருநாள்! திருவாய் மொழித் திருநாள் விழா !!
செந்தமிழ் வேதியரின் இயல்தமிழ் (வ்யாக்யானம்/இயற்பா) விழா !
அரையர்கள் அரங்கேற்றும் நாட்டிய(அபிநயம்)/ நாடக விழா !
22 நாட்கள் நடக்கும் ‘பெரிய திருநாள்’ விழா !
வையத்தோரை உய்விக்கும் வைகுண்டஏகாதசிப் பெருவிழா !
பக்தர்கள் பரவசமாகும் பகல்பத்து/இராப்பத்து திருவிழா !
நாலாயிரம் ஆண்டுகளாக நடைபெறும், நாலாயிர நற்றமிழ் விழா !!!
247 எழுத்துக்கள் கொண்ட தமிழில், அரங்கனுக்கு 247 பாசுரங்கள் பாடிய ஆழ்வார்களின் அனைத்துப் பாசுரங்களுக்கும் விழா !!
திருமங்கை ஆழ்வார், தொடங்கிய தமிழ்ப்பெருவிழா !!!
திருமங்கையாழ்வார் தம்முடைய வாழ்நாளின் பிற்பகுதியில், திருவரங்கத்தில், திருவரங்கனுக்கு சிறப்பான பல கைங்கர்யங்களை செய்து கொண்டு எழுந்தருளி இருந்தார்.
ஒரு கார்த்திகை மாதக் கார்த்திகை நட்சித்திரத் திருநாளில் (திருமங்கையாழ்வார் திருநட்சித்திரம்)
நம்பெருமாள் உபய நாய்ச்சிமார்களுடன் திருமஞ்சனம் கண்டருளிய பிறகு, திருமங்கையாழ்வார், திருநெடுந் தாண்டகம் என்கின்ற பிரபந்தத்தை தேவகானத்தில் பாடி நம்பெருமாளை மகிழ்வித்தார். அதன் பிறகு திருவாய்மொழி பாசுரங்களைக் கொண்டு பாடி,நம்பெருமாளை உகப்பித்தார்.
இதனால்,பெருமகிழ்ச்சி கொண்ட நம்பெருமாள்,”ஆழ்வாரே உமக்கு என்ன வேண்டும்” என்றுவினவினார். அதற்கு திருமங்கையாழ்வார் “மார்கழி மாதம் சுக்லபக்ஷ ஏகாதசி தொடங்கி கொண்டாடப்படும் வேதத்திற்க்கான
ஏற்றமிகு விழாவில்,அந்த வேதங்க ளுடனே நம்மாழ்வார் அருளிச்செய்த, “திருவாய்மொழியையும்” தேவரீர் கேட்டு, வடமொழி வேதத்திற்கு நிகரான பெருமையை நம்மாழ்வார் தமிழில்அருளிச்செய்த,”திருவாய்மொழிக்கும்” தந்தருள வேணும்”
என்று விண்ணப்பித்தார்.
நம்பெருமாளும் பெரிதும் உகந்து, தேவகானத்தில் பாடிய திருமங்கை யாழ்வார் “திருமிடர் நோவும்” என்று, திருமங்கையாழ்வாரின் தொண்டையிலே, தைலக்காப்பை தடவச் செய்து, ஸ்வாமி நம்மாழ்வாரை”ஆழ்வார்
திருநகரியில்” இருந்து,அழைத்து வருவதற்கான,
ஸ்ரீமுகப்பட்டயம், மாலை,பரிவட்டம், சந்தனம் ஆகியவற்றை அனுப்பி கௌரவித்தார்.
(இந்த உற்சவத்துக்காக ,ஆழ்வார் திருநகரியில் இருந்து, திருவரங்கத்திற்கு, ஒவ்வொரு வருடமும்,நம்மாழ்வார் எழுந்தருளிக் கொண்டிருந்தார்.  பிற்காலத்தில் ஏற்பட்ட சில இடையூறு களால்(வேறு வேறு தேசங்களை ஆண்ட மன்னர்களால்) ஆழ்வார் திருநகரியிலிருந்து, ஆழ்வார் வர முடியவில்லை.  எனவே ராமாநுஜர், ஸ்ரீரங்கம் பெரிய கோயிலிலேயே நம்மாழ்வார் விக்ரகம் பிரதிஷ்டை செய்தார். உடன் தேவுமற்றறியாத மதுரகவி ஆழ்வார்,மற்றும் திருமங்கை ஆழ்வார் விக்ரகங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டன. அந்த நம்மாழ்வாரே,திருமங்கை ஆழ்வார்,மற்ற ஆழ்வார்கள், இராமாநுஜர்/ஆசார்யர்களுடன் எழுந்தருளி இந்த உற்சவத்தை நடத்தி வைக்கிறார்.)
திருமங்கை ஆழ்வார் தொடங்கிய போது நம்மாழ்வாரின் திருவாய் மொழிக்கு மட்டுமே, பத்து நாட்கள் உற்சவம் நடந்தது. பிற்காலத்தில் நாதமுனிகள் மற்ற திவ்யப்பிரபந்தங்களையும் நம்பெருமாள் கேட்டருள வேண்டும் என்று பிரார்த்தித்து
முதல்/இரண்டாம் ஆயிரங்களை பகல் பத்துநாட்களிலும், திருவாய்மொழியை இராப்பத்து நாட்களிலும், மூன்றாம் ஆயிரம் ‘இயற்பா’ க்களை, இறுதிநாளன்றும் சேவிக்க ஏற்பாடு செய்தார். பின்னர் ‘இராமாநுச நூற்றந்தாதி’யும் இயற்பாவுடன் சேவிக்கும் முறை ஏற்பட்டது.

இன்று(03/12/2021) முதல் திருநாள் “திருநெடுந்தாண்டகம் விழா” பற்றிய அறிமுகம்:
(ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ. கிருஷ்ணமாசார் யரின் கட்டுரையின் அடிப்படையில்)
1) திருமங்கையாழ்வார் நம்மாழ்வாருடைய நாலு பிரபந்தங்களாகிய திருவிருத்தம், பெரிய திருவந்தாதி, திருவாசிரியம், திருவாய்மொழி ஆகிய வற்றுக்கு, அங்கங்களாக ஆறு திவ்யப் பிரபந்தங்களை அருளிச் செய்தார். அவற்றில் ஒன்று திருநெடுந்தாண்டகம் என்னும் திவ்யப்பிரபந்தமாகும்.
2) திருநெடுந்தாண்டகம் “தாண்டகம்” என்னும் இலக்கிய வகையைச் சார்ந்தது.’தாண்டகம்’ என்பது மலை ஏறுவதற்கு உதவியாக இருக்கும் ஒரு ஊன்றுகோல். மனித ஆன்மாவின் கடைத் தேற்றத்துக்கு நம்பெருமாளே ஊன்றுகோல் என்பதை, இப்பாசுரங்கள்விளக்குகின்றன. எண்சீர்கொண்டது (குறுந்தாண்டகம் அறுசீர்).நெடுந்தாண்டகத்தில் அடிதோறும் மெய்யெழுத்து உட்பட 26 எழுத்துக்களுக்குக் குறைவின்றி இருக்கும். இந்தப் பிரபந்தம், 30 பாசுரங்கள் கொண்டது.
3)திருநெடுந்தாண்டகத்தில் முதல் 10 பாசுரங்கள் ஆழ்வார் தாமான தன்மையிலும், அடுத்த 10 பாசுரங்கள் ஒரு தாய் தன் மகளைப்பற்றிச் சொல்வதைப் போலவும், இறுதி 10 பாசுரங்கள் தலைமகள் என்னும் நிலையில், திருமங்கையாழ்வார் பெண்ணான தன்மையில் பாடிய பாசுரங்கள்.
4) திருநெடுந்தாண்டகம் வேதக்கருத்துக்களைக் கொண்டதொரு வேதத்துக்கு ஒப்பானதொரு நூல்.
5) இராமாநுஜருடைய விருப்பப்படி கர்நாடக மாநிலத்தில் புகழ்பெற்று விளங்கி வந்த வேதாந்தியான மாதவாசார்யரை, ஸ்ரீபராசர பட்டர் திருநெடுந்தாண்டக வியாக்யானம் செய்து, தம்முடைய சீடராக்கிக் கொண்டார். இந்த மாதவாசார்யரே பட்டருக்கு அடுத்து, திருவரங்கத்தில் ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத் தலைமை ஆசார்யராக எழுந்தருளியிருந்த நஞ்சீயர் !
6) மற்றைய திவ்யதேசங்களில் பகல்பத்து எனப்படும் விழா மார்கழி மாதம் அமாவாசைக்கு அடுத்த பிரதமை தொடங்கி தசமி ஈறாக நடைபெறும். மார்கழி சுக்லபக்ஷ ஏகாதசி தினமே வைகுண்ட ஏகாதசி தினமாகும்(19ஆண்டு
களுக்கு ஒரு முறை ஸ்ரீரங்கத்தில் கார்த்திகை மாதத்திலேயே ஸ்ரீவைகுண்ட ஏகாதசி அனுஷ்டிக்கப்படுவதால்இந்த ஆண்டு கார்த்திகை 28லேயே,(14/12/21) வைகுண்ட ஏகாதசி !
7) திருவரங்கத்தில் மட்டும், ஸ்ரீபராசரபட்டர் வேதாந்தியான மாதவாசார்யரை திருநெடுந்தாண்டகம் கொண்டு திருத்திப் பணி கொண்ட நிகழ்ச்சி பகல்பத்துக்கு முதல்நாள் அரையர்களால் அபிநயித்து காட்டப் படுகிறது.பராசரபட்டர் மாதவாசார்யரைத் திருத்திப் பணி கொண்டபின் திருவரங்கம் திரும்பிய நாள் இந்த நாள் ! அன்று நம்பெருமாளிடம், பட்டர் தாம், எப்படி திருநெடுந்தாண்டகம் வியாக்யானம் சாதித்து, மாதவாசார்யரைத் திருத்தினார் என்பதை அப்படியே பெரியபெருமாள் திருமுன்பு வியாக்யானம் செய்துகாட்டினார்.
இதைப் பார்த்துக்கேட்டுப் பேர்உகந்த பெருமாள், இந்த வைபவம் ஆண்டுதோறும் திருஅத்யயன உற்சவத்தின் முதல் உற்சவமாக நடத்த வேண்டும் என்று ஆணையிட்டார்.
8) “சொல்லார் தமிழொரு மூன்றும் சுருதிகள் நான்கும் எல்லையில்லா அறநெறியாவும் தெரிந்த” இராமாநுசர் காலத்தில்தான் தமிழுக்கு திருக்கோயில் களில் பெரியதொரு ஏற்றம் அளிக்கப்பட்டது.
9)இயல், இசை , நாடகம் என்னும் மூன்று கூறுகளை உடையது தமிழ். நாதமுனிகள் வழித்தோன்றல்களான அரையர்கள் கையில் தாளத்தோடும், இசையோடும் திவ்யப்பிரபந்தப்பாசுரங்களை பெரியபெருமாள் திருமுன்பு இசைத்து தமிழுக்கு ஏற்றம் அளிக்கும் பகல்பத்து, இராப்பத்து விழாவை திருநெடுந்தாண்டகத் தினத்தன்று தொடங்கி வைக்கின்றனர்.
10). அரையர்கள் தம் திருமாளிகையில் இருந்து குல்லாய் தரித்துக் கொண்டு பெரியபெருமாளுடைய காப்பந்தம், திருச்சின்னம் ஆகியவற்றுடன் புறப்பட்டு உடையவர் சந்நிதி, திருவரங்கப் பெருமாள் அரையர் எழுந்தருளி யிருக்கும் ஸ்ரீபார்த்தசாரதி சந்நிதி, நம்மாழ்வார் சந்நிதி ஆகிய இடங்களில் சேவித்தபிறகு சந்தனு மண்டபத்தில் ஜய,விஜயாள் ஆகிய துவார பாலகர்களுக்கு அருகில்அமர்ந்திருப்பர்.  முன்னதாக,இந்த உற்சவத்தில் தாங்கள் இசைக்கும் தாளங்களை,
திருவரங்கப்பெருமாள் அரையர்(இராமாநுஜரின் ஐந்து ஆசார்யர்களில் ஒருவர்;காஞ்சி வரதராஜப் பெருமாளிடம் பிரபந்தப் பாசுரங்களை இசையோடு பாடி,அவரை உகப்பித்து, இராமாநுஜரை அவரிடமிருந்து பெரிய பெருமாளிடம் அழைத்து வந்தவர்) திருவிக்ரகம் முன் வைத்து ஆராதனை செய்வார்கள்.
11) பெரியபெருமாளுக்கு வெள்ளைச்சரம், மாலைகள் சாற்றப்பட்டபிறகு, தேங்காய்த்துருவல் அமுது செய்விக்கப்படும்.
12) “கோயிலுடைய பெருமாள் அரையர்” ” வரந்தரும் பெருமாள் அரையர்” என்றோ “அல்லது “மதியாத தெய்வங்கள் மணவாளப்பெருமாரையர்” “நாதவினோத அரையர்” என்றோ அருளப்பாடு சாதிக்கப்படும். (பகல்பத்து, இராப்பத்து விழாக் காலங் களில் அரையர்களுக்கான அருளப்பாடு மேற்கண்டவாறே சாதிக்கப்படும். )
13) அரையர்கள் திருக்கரங்களில் இருக்கும்”நம்மாழ்வார்,நாதமுனி”என்று அழைக்கப்படும் தாளங்கள் பெருமாள் திருவடிகளில் சேர்ப்பிக்கப்படும். அரையர்களுக்கு ஸ்தானீகர் தீர்த்தம், சந்தனம், தொங்கு பரியட்டம், மாலை ஆகியவை சாதிக்கப்படும்.
14) பிறகு கர்ப்பக்ருஹத்தில் மேற்குப்பகுதியில் இருந்து கொண்டு, “பொங்குசீர் வசனபூடணமீந்த, உலகாரியன் போற்றிடத்திகழும் பெருமாள்! “போதமணவாளமா முனி ஈடுரைப்பது கேட்டுப்,பூரித்து நின்ற பெருமாள்!”  என்று பலவாறாக, கொண்டாட்டங்களை சொல்லித் திருநெடுந்தாண்டகம் முதல்பாட்டு “மின்னுருவாய்” என்பதைப் பல தடவை இசைப்பர்.
15) பின்னர் அரையர்கள் சந்தன மண்டபத்திற்கு எழுந்தருளி முதல் பாசுரமாகிய “மின்னுருவாய்” என்று தொடங்கும் பாசுரத்தினை இசையுடன் அபிநயம் செய்வார்கள்.
16) முதல்பாட்டுக்கு, பெரியவாச்சான்பிள்ளை வ்யாக்யான அவதாரிகைகளும், முதல் பாட்டிலிருந்து 11ஆவது பாட்டான “பட்டுடுக்கும்” வரை தம்பிரான்படி வ்யாக்யானமும் சேவிக்கப்படும்.
17) திவ்யப்பிரபந்த பாசுரங்களுக்கு நாதமுனிகள் தொடக்கமான அரையர்கள் குலத்தில் உதித்தோர் எழுதி வைத்த வ்யாக்யானத்திற்கு தம்பிரான்படி என்று பெயர். இவை அச்சில் இல்லை. அரையர்களிடம் உள்ள ஓலைச் சுவடிகளில் பாரம்பரியமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.
18)திருநெடுந்தாண்டகத்திற்கு அமைந்துள்ள தம்பிரான்படி வ்யாக்யானம் சொல்லழகும் பொருளழகும் கொண்ட கருத்தாழமிக்க சொற்றொடர்களாகும். இவற்றைக் கேட்கக்கேட்க உள்ளத்திலே மகிழ்ச்சி பொங்கும். திவ்யப்பிரபந்த சொற்கள்,பின்னிப்
பிணைக்கப்பட்டு சந்தத்தோடு அவை அரையர்களால் சேவிக்கப்படும் போது கேட்போர் உள்ளத்தில் திவ்யப்பிரபந்தத்தின் சொல்லழகு புலப்படும்.
19) திருமங்கையாழ்வார் சந்நிதி கைங்கர்யபரர் அரையர்களுக்கு மரியாதை செய்திடுவார்.
20) பெரியபெருமாளுக்கு அலங்காரம் அமுது செய்விக்கப்படும். தீர்த்த விநியோகம், வெள்ளிச்சம்பா ப்ரசாத விநியோகம் ஆகியவை நடைபெறும்.  தாம் திருநெடுந்தாண்டகம் கேட்டு இன்புற்றதற்காக, பெரியபெருமாள் “விட்டவன் விழுக்காடு” எனப்படும் தாம் அமுது செய்தருளிய அமுது படிகளில் ஒரு பகுதியை திருமங்கையாழ்வார் சந்நிதிக்கு அனுப்பியருள்வார்.
  • ஜோதிட ரத்னாகரம்
    காலக்கணிதன் செ.பாலசந்தர்
    B.Com,M.A.M.A,M.A.,M.Phil.,M.Sc.,P.G.D.C.A.,D.A.,
    மண்ணச்ச நல்லூர்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!