தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் , கன்னியாகுமரி , நெல்லையில் இன்று கனமழை பெய்யும் என , சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி 48 மணி நேரத்தில் மேற்கு , வடமேற்கு திசையில் நகர்ந்து , காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என்று வானிலை மைதயம் கணித்துள்ளது . இதனால் , கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் இன்று இடி , மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் பெரும்பான்மையான பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை 48 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.
தெற்கு அந்தமான் கடலில் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால், அந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.