தமிழகத்தில் மழை பாதிப்புகளை பார்வையிடுவதற்காக மத்திய குழு இன்று தமிழகம் வருகிறது.
வடகிழக்கு பருவ மழைக் காரணமாக தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மழைச் சேதங்களை கண்டறிவதற்காக மத்திய குழு விரைவில் தமிழகம் வர உள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து சேத விவரங்களை அளித்த திமுக எம்.பி. டி. ஆர். பாலு தெரிவித்திருந்திருந்தார்.
மேலும் வெள்ள நிவாரண நிதியாக தமிழகத்துக்கு 2,629 கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த நிலையில் மழை பாதிப்பு தொடர்பாக தமிழக அமைச்சரவை கூட்டம் சனிக்கிழமை நடந்த நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை மத்திய குழு தமிழகம் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதன்படி, வடகிழக்கு பருவமழை காரணமாக ஏற்பட்டுள்ள சேதங்களை பார்வையிட, 7 அதிகாரிகள் கொண்ட மத்திய குழுவினர் 21-ம்தேதி (இன்று) பிற்பகல் வருகின்றனர்., நவ. 22, 23 ஆகிய இரண்டு நாட்களிலும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று மத்தியக் குழு பார்வையிட உள்ளனர்.
22-ம் தேதி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு ஒரு குழுவினரும், அதேபோல கன்னியாகுமரிக்கு ஒரு குழுவினரும் செல்கிறார்கள்.
23-ம் தேதி ஒரு குழு கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சைக்கும் மற்றொருகுழு வேலூர், ராணிப்பேட்டைக்கும் செல்கிறது. ஒரு குழுவை வருவாய்நிர்வாக ஆணையர் க.பணீந்திர ரெட்டியும், மற்றொரு குழுவை வருவாய் துறை செயலர் குமார் ஜெயந்த்தும் வழிநடத்துவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.